வாகன ஓட்டிகளை இது பாதிக்கும்


வாகன  ஓட்டிகளை  இது  பாதிக்கும்
x
தினத்தந்தி 30 Aug 2017 9:30 PM GMT (Updated: 2017-08-30T22:48:02+05:30)

பொதுவாக அரசு பிறப்பிக்கும் எந்தவித சட்டம் என்றாலும் சரி, எந்தவித உத்தரவு என்றாலும் சரி, மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், மக்கள் விரும்பத்தக்கதாகவும், எந்தவித சிக்கலுமின்றி அவர்கள் நடைமுறைப்படுத்தக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.

பொதுவாக அரசு பிறப்பிக்கும் எந்தவித சட்டம் என்றாலும் சரி, எந்தவித உத்தரவு என்றாலும் சரி, மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், மக்கள் விரும்பத்தக்கதாகவும், எந்தவித சிக்கலுமின்றி அவர்கள் நடைமுறைப்படுத்தக்கூடியதாகவும் இருக்கவேண்டும். அத்தகைய உத்தரவுகளைத்தான் வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். ஆனால், தமிழக அரசின் போக்குவரத்துத்துறை நாளை முதல் அமலுக்கு கொண்டுவரும் ஒரு உத்தரவு, எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. இதுவரையில் தமிழ்நாட்டில் உள்ள பஸ், லாரி, டிராக்டர், கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற அனைத்து மோட்டார் வாகனங்களை ஓட்டிச்செல்பவர்களும் தங்களுடைய ஓட்டுனர் உரிமம் என்று அழைக்கப்படும் டிரைவிங் லைசென்சின் ஒரிஜினலை வீட்டில் பத்திரமாக வைத்துவிட்டு, நகலை மட்டும் வாகனத்தில் எப்போதும் வைத்திருப்பார்கள். வழியில் போக்குவரத்து அதிகாரியோ அல்லது போக்குவரத்து போலீசாரோ சோதனை நடத்தும் நேரத்தில் அந்த நகல் உரிமத்தை அவர்களிடம் காட்டுவார்கள்.

சிலநேரம் ஏதாவது விபத்துகள் நடந்தால் அல்லது போக்குவரத்து விதிமீறல் நடந்தால், அதிகாரிகள் அந்த வாகனத்தை தங்கள் வசம் வைத்துக்கொண்டு, ‘ஒரிஜினல் லைசென்சை எடுத்துக்கொண்டு வா’ என்பார்கள். இந்த முறையில் இதுவரையில் எந்தவித சிக்கலும் இல்லாமல் இருந்தது. ஆனால், திடீரென போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 22–ந்தேதி பத்திரிகை நிருபர்களிடம் ஒரு அறிவிப்பை அறிவித்தார். அதாவது, செப்டம்பர் 1–ந்தேதி முதல் எல்லோரும் ஒரிஜினல் டிரைவிங் லைசென்சை எப்போதும் தங்கள் வசம் வைத்திருக்கவேண்டும். அப்படி வைத்திருக்கவில்லை என்றால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஒரிஜினல் லைசென்சு கையில் வைத்திருக்காதவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் அல்லது 3 மாதம் சிறைத்தண்டனையோ, இரண்டும் சேர்த்தோ விதிக்கப்பட வழி இருக்கிறது. மத்திய மோட்டார் வாகன சட்டத்தில்கூட இப்படி ஒருபிரிவு இல்லை. மற்ற மாநிலங்களிலும் இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஏற்கனவே மத்திய அரசாங்கம் ‘டிஜிலாக்கர்’ முறை அதாவது, இணையதள பெட்டகம் முறைக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதன்மூலம் டிஜிலாக்கர் ‘ஆப்’ என்று கூறப்படும் செயலியை செல்போனில் டவுன்லோடு செய்துகொண்டு, அந்த டிஜிலாக்கரில் நமது டிரைவிங் லைசென்சை பதிவு செய்துகொள்ளலாம். போக்குவரத்து அதிகாரிகள் அல்லது போக்குவரத்து போலீசார் சோதனை செய்யும்போது, செல்போனில் இருந்து அந்த லைசென்சை பதிவு இறக்கம் செய்து காட்டிக்கொள்ளலாம். அதுவே செல்லுபடியாகத்தக்கது என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இப்போது இணையதள உலகத்தில் எல்லோரும் வாழ்ந்துகொண்டிருக்கும்போது, இதுபோன்ற வசதிகளை பயன்படுத்தாமல், இன்னும் பழைய காலமுறைக்கு செல்லச்சொல்வது விந்தையாக இருக்கிறது. ரெயில் டிக்கெட், விமான டிக்கெட் எல்லாவற்றையுமே செல்போனில் பதிவுசெய்து அதை காட்டினால்போதும் என்ற காலக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதுபோன்ற முறைகளை பயன்படுத்தவேண்டுமே தவிர, ஒரிஜினல் லைசென்சை எப்போதும் கையில் வைத்துக்கொள் என்றால் நிச்சயமாக சாத்தியமில்லை. மேலும் மழைகாலங்களில் இந்த லைசென்சு மழையில் நனைந்து சேதமடைய வாய்ப்பிருக்கிறது. இதுபோல தொலைந்துபோனாலும் போலீசில் புகார் செய்தாலும், ஒரு மாதம் கழித்தபிறகுதான் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழை தருவார்கள். பின்னர் அதை வைத்துத்தான் டூப்ளிகேட் லைசென்சு வாங்க வழிவகை இருக்கும். இன்றைய இணையதள உலகில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கூட கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, ‘பிரிண்ட் அவுட்’ எடுத்துத்தான் பயன்படுத்தி கொண்டிருக்க, அதுவே எல்லா தஸ்தாவேஜுகளுக்கும் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பல நிறுவனங்களில் டிரைவர்களின் ஒரிஜினல் லைசென்சை வாங்கிக்கொண்டுதான் வேலைகொடுக்கிறார்கள். அவர்களுக்கும் இது பாதிப்பு. வாகன ஓட்டிகளை இன்னலுக்குள்ளாக்கும் இந்த உத்தரவு, தேவையில்லை என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது.

Next Story