இவ்வளவு கஷ்டம் தேவையா?


இவ்வளவு கஷ்டம் தேவையா?
x
தினத்தந்தி 31 Aug 2017 9:30 PM GMT (Updated: 2017-08-31T18:45:31+05:30)

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடையே டெலிவி‌ஷனில் உரையாற்றினார்.

டந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடையே டெலிவி‌ஷனில் உரையாற்றினார். யாரும் எதிர்பார்க்காத வகையில், அன்று நள்ளிரவு முதலே 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டது, பொதுமக்களிடையே பெரிய அதிர்ச்சியையும், குழப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஊழல், கருப்பு பணம், கள்ளநோட்டு, பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பொதுமக்கள் சிறிதுநாட்கள் இந்த கஷ்டத்தை தாங்கிக்கொள்ளவேண்டும் என்றும் பிரதமர் பேசினார். அடுத்த சிலநாட்கள் அன்றாட செலவுக்கே மக்கள் பணம் இல்லாமல் தடுமாறினார்கள். பணத்தை மாற்றுவதற்காக வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்றனர். பொதுமக்களின் இந்த கஷ்டம் வெகுகாலத்திற்கு நீடித்தது. ஆனால், இவ்வளவு கஷ்டத்திற்கும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பது ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில் தெரிகிறது.

நவம்பர் 4–ந்தேதி நாட்டில் ரூ.17 லட்சத்து 97 ஆயிரம் கோடி அளவில் பணப்புழக்கம் இருந்தது. இதில், நவம்பர் 8–ந்தேதி ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியிட்டநாளில் ரூ.15 லட்சத்து 44 ஆயிரம் கோடி செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. 86.4 சதவீதம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 14 சதவீதத்துக்கும் குறைவான பணப்புழக்கத்தை வைத்துக்கொண்டு பொருளாதாரம் என்ன பாடுபட்டிருக்கும்?. இப்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரூ.15 லட்சத்து 28 ஆயிரம் கோடி வங்கிகளில் டெபாசிட்டாக வந்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 99 சதவீதம் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட்டாக வந்துவிட்டன. 1.04 சதவீத நோட்டுகள்தான் வரவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது. ரூ.4 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரையிலான கருப்பு பணம் வங்கிக்கு திரும்பவராது என்று எதிர்பார்த்த நிலையில், ரூ.16 ஆயிரம் கோடி மட்டும் வரவில்லை என்பது பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மட்டும் ரூ.7 ஆயிரத்து 965 கோடி செலாகியுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. 7 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி 6.1 சதவீதமாக குறைந்தது. சிறுதொழில் நிறுவனங்களில் உற்பத்தி பெருமளவில் குறைந்தது. கடைகளில் வியாபாரம் மந்தமாக இருந்தது. கையில் பணம் வைத்துக்கொண்டு செய்யவேண்டிய வியாபாரமெல்லாம் படுத்துவிட்டது. ரியல் எஸ்டேட் பெரிய வீழ்ச்சியைக் கண்டு, கட்டிட தொழிலும் முடங்கிப்போய்விட்டதால், வேலைவாய்ப்பிலும், அதுதொடர்பான பல்வேறு தொழில்களிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

சிறிய அளவிலான கூலித்தொழில் போன்ற உடல் உழைப்பு வேலைவாய்ப்பு எல்லாம் பெரிய பின்னடைவை சந்தித்தது. ஆனால், இவ்வளவு தியாகத்துக்கும் உரிய பலன் கிடைக்கவில்லை. இந்த அறிவிப்பை வெளியிடும்போது, பொதுமக்கள் எந்தவிதவரம்பும் இல்லாமல், தங்கள் கையில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் என்று பிரதமர் தெரிவித்தார். பிரதமர் உத்தரவாதத்தை நம்பி, பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள்மீது இப்போது அவசியமில்லாமல் நடவடிக்கைகள் பாயக்கூடாது. கள்ளநோட்டுகளும் பெரிய அளவில் கண்டுபிடிக்கப்படவில்லை. ரொக்கப்பணம் இல்லாமல், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இவைகளை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்வது மட்டும் உயர்ந்து இருக்கிறது. மொத்தத்தில், எந்த நோக்கத்துக்காக ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதோ, அது முழுமையாக நிறைவேறவில்லை. நீண்டகால நன்மைக்கான குறைந்தகால வலி என்று சொல்லும்போது, தாங்கக்கூடிய வலியாகவும், நன்மைகள் நிறைந்தவையாகவும் இருக்க வேண்டும்.


Next Story