உயிர்களை காவு வாங்கும் ‘நீல திமிங்கலம்’


உயிர்களை  காவு வாங்கும்  ‘நீல திமிங்கலம்’
x
தினத்தந்தி 1 Sep 2017 9:30 PM GMT (Updated: 2017-09-02T00:24:08+05:30)

சமீபகாலமாக யாராவது சிறு குழந்தையோ, இளமை பருவத்தில் உள்ள ஆணோ, பெண்ணோ கையில் செல்போனை வைத்துக்கொண்டு அதிலேயே மூழ்கி இருந்தால் நெஞ்சம் துடிதுடிக்கிறது.

மீபகாலமாக யாராவது சிறு குழந்தையோ, இளமை பருவத்தில் உள்ள ஆணோ, பெண்ணோ கையில் செல்போனை வைத்துக்கொண்டு அதிலேயே மூழ்கி இருந்தால் நெஞ்சம் துடிதுடிக்கிறது. எங்கே ‘புளூவேல்’ என்று கூறப்படும் ‘நீல திமிங்கலம்’ விளையாட்டை விளையாடுகிறார்களோ? என்ற அச்சம் பெற்றோருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்திற்கே இருக்கிறது. தன் கொடிய கரங்களை ஒவ்வொரு மாநிலமாக நீட்டிக்கொண்டு, இளைஞர்களின் உயிரை பறித்துக்கொண்டிருக்கும் இந்த விளையாட்டு, இப்போது தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் நுழைந்துவிட்டது.

இந்த விளையாட்டின் காரணமாக சென்னையில் ஒரு மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார். ஆனால் நல்லவேளையாக உயிர் பிழைத்துக்கொண்டார். இப்போது மதுரையில் வீட்டின் கஷ்டம் தெரிந்து பொறுப்புள்ள இளைஞராக வாழ்ந்து கொண்டிருந்த விக்னேஷ் என்ற 19 வயது கல்லூரி மாணவர் இந்த ‘நீல திமிங்கலம்’ விளையாட்டின் வலையில் சிக்கி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ‘நீல திமிங்கலம்’ விளையாட்டினால் தன் உயிரை இழந்ததை அவரே தன் கையில் ‘புளூ வேல்’ என்று எழுதி, ‘நீல திமிங்கலம்’ படத்தையும் வரைந்து உலகுக்கு காட்டிவிட்டார். அவர் வீட்டில் உள்ள ஒரு நோட்டில் ‘நீல திமிங்கலம்’ விளையாட்டு அல்ல, விபரீதம், ‘ஒருமுறை உள்ளே போனால் வெளியே வரமுடியாது’ என்று எழுதி மற்ற இளைஞர்களுக்கு எல்லாம் ஒரு எச்சரிக்கை விடுத்துவிட்டு, தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டார். நேற்று புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழக முதுகலை பட்டப்படிப்பு மாணவரான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த போரா என்ற மாணவர் ‘நீல திமிங்கலம்’ விளையாட்டு வலையில் சிக்கி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. நெல்லை மாவட்டம், பத்தமடையை சேர்ந்த ஒரு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் நீல திமிங்கல விளையாட்டால் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்.

ரஷியாவில் உள்ள 22 வயது பிலிப் பூடிக் என்ற மாணவர்தான் இந்த ‘நீல திமிங்கலம்’ விளையாட்டை உருவாக்கியவர். இதில் சேர்ந்துவிட்டால், ‘‘50 நாள், 50 சவால்’’ என்ற அடிப்படையில் தினமும் ஒரு சவாலை அனுப்புவார்கள். இந்த விளையாட்டில் சேர்ந்தவுடன் முதலில் சாதாரண சவால்களையே அனுப்புவார்கள். இதில் தீராத ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக மனரீதியாக தங்களுக்கு அடிமையாக்கிவிட்டு, கடைசியில் தற்கொலை செய்துகொள் என்பதுவரை கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். இந்த கொடிய விளையாட்டு குறித்த விழிப்புணர்வை பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு ஏற்படுத்த நடவடிக்கை தொடங்கிவிட்டது. கல்லூரிகளிலும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள பெற்றோர்களும், பெரியவர்களும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். இதுதொடர்பான ‘லிங்க்’ சமூகவலைதளங்களில் வந்தால் அதை ‘டவுன்லோடு’ செய்யவேண்டாம், வேறு யாருக்கும் அனுப்பவும் வேண்டாம் என்பதை இளைஞர் சமுதாயத்துக்கு அறிவுறுத்தவேண்டும். ஏற்கனவே இந்த விளையாட்டை விளையாடிக்கொண்டிருப்பவர்களும் உடனே அதை விட்டுவிட்டு வெளியே வரவேண்டும். விளையாட்டு நிர்வாகிகளிடமிருந்து எந்தவித அச்சுறுத்தல் வந்தாலும் பயப்படவேண்டாம். அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. இதுகுறித்து மனோதத்துவ நிபுணரான டாக்டர் விதுபாலா கூறும்போது, ‘தற்கொலை செய்யவேண்டும் என்ற பலவீனமான உணர்வுள்ளவர்கள்தான் இந்த கோர விளையாட்டுக்கு பலியாகிவிடுகிறார்கள் என்று சொல்லமுடியாது. தெரிந்தோ, தெரியாமலோ இந்த விளையாட்டுக்குள் போய்விடுபவர்கள் அதில் அடிமையாகி, அங்கு ஆட்டுவிப்பதற்கேற்ப செயல்பட்டு, இறுதியில் தற்கொலை முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். ஆன் லைனில் இந்த விபரீத விளையாட்டை தடை செய்யவேண்டும்’ என்று தெரிவித்தார். மொத்தத்தில், நீல திமிங்கலம் என்ற கொடிய அரக்கனை இளைஞர்கள் பக்கம் பார்க்காமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ?, அதை உடனடியாக அரசாங்கமும், சமுதாயமும் எடுக்கவேண்டும்.

Next Story