தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வேண்டும்


தேர்ந்தெடுக்கப்பட்ட  மக்கள்  பிரதிநிதிகள்  வேண்டும்
x
தினத்தந்தி 5 Sep 2017 9:30 PM GMT (Updated: 2017-09-05T18:00:23+05:30)

தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது தமிழகத்திற்கு புதிதல்ல. பராந்தக சோழன் ஆட்சி செய்த கி.பி. 920–ம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் தேர்தல் இருந்தது என்பதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது தமிழகத்திற்கு புதிதல்ல. பராந்தக சோழன் ஆட்சி செய்த கி.பி. 920–ம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் தேர்தல் இருந்தது என்பதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. அந்த காலக்கட்டத்திலேயே வளர்ச்சியடைந்த உள்ளாட்சி நிர்வாகம் நடைமுறையில் இருந்திருக்கிறது. காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் உள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள் கோவிலில் சில கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இந்த கல்வெட்டுக்களில் மக்களாட்சி அமைப்பில் கிராமக்குழு உறுப்பினர்கள் குடவோலை முறை மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டது இன்னும் சான்றாக இருக்கிறது.

தற்போது தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் இருக்கின்றன. நகர உள்ளாட்சிகளில் மொத்தம் 12 ஆயிரத்து 820 உறுப்பினர்களும், ஊரக உள்ளாட்சிகளில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 399 உறுப்பினர்களும், தேர்ந்தெடுக்கப்படவேண்டும். ஆனால், இவர்களது பதவிகாலம் எல்லாம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24–ந் தேதியோடு முடிவடைந்துவிட்டது. அப்போது அக்டோபர் மாதம் 17, 19–ந் தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில், தி.மு.க. சார்பில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு இல்லாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று தொடர்ந்த வழக்கினால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு காரணமாக சொல்லி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. இந்தநிலையில், தமிழக அரசும் தன் பங்குக்கு 2011–ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அறிவிக்கப்பட்டுள்ள மக்கள்தொகையை அடிப்படையாக வைத்து வார்டுகளை தொகுதி வரையறை செய்யவேண்டும் என்று ஒரு மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி, அது இப்போது சட்டமாக ஆகிவிட்டது. ஆக, இந்த காரணத்தைச் சொல்லி கோர்ட்டில் இருக்கும் வழக்கில் இப்போது அரசு உடனடியாக தேர்தல் நடத்த முடியாது என்று சொல்லியிருக்கிறது.

இந்தநிலையில், கடந்த திங்கட்கிழமை உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஒரு வழக்கை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட பெஞ்சு விசாரித்து, வருகிற 18–ந் தேதிக்குள் தேர்தலுக்கான காலஅட்டவணை அறிவிக்கப்படவேண்டும். மேலும், நவம்பர் மாதம் 17–ந் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படவேண்டும் என்று தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. இப்போதே அடிப்படை வசதிகளுக்காக, குறிப்பாக ஒரு இடத்தில் சாலை சரியில்லை, குப்பைகள் அதிகமாக இருக்கிறது, தண்ணீர் தேங்கியிருக்கிறது, தெருவிளக்குகள் எரியவில்லை போன்ற சிறு, சிறு காரணங்களுக்காக மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், தங்கள் குறைகளை சொல்லமுடியாமல் மக்கள் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். மத்திய, மாநில அரசு தீட்டியிருக்கும் பல சமூக நலதிட்டங்கள் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவே நிறைவேற்றப்படவேண்டிய நிலையில், இன்னமும் தனி அதிகாரிகள் பொறுப்பில் இருப்பது என்பது நிச்சயமாக மக்களுக்கு பயனளிக்காத ஒன்றாகும். உச்சநீதிமன்றத்திலும் இதுதொடர்பான ஒரு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதுமட்டுமல்லாமல், அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது தேர்தல் நடத்தினால் அந்த சின்னத்தில் போட்டியிட முடியாதே? என்ற தயக்கம் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வுக்கு இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் என்பது கட்சி ரீதியாக பார்க்காமல், நல்ல வேட்பாளர் என்றமுறையில் தேர்ந்தெடுக்க நிச்சயமாக மக்கள் முன்வருவார்கள். எனவே, சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு ஏற்ப, உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்தி, எங்கள் பிரதிநிதிகள் எங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தை கவனிக்க வகை செய்யவேண்டும் என்பதுதான் மக்கள் விருப்பமாகும்.

Next Story