டிஜிட்டல் லைசென்சுக்கு அங்கீகாரம்


டிஜிட்டல் லைசென்சுக்கு அங்கீகாரம்
x

தமிழ்நாடு முழுவதும் இப்போது இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் மற்றும் கார், லாரி, பஸ், டிராக்டர் போன்ற வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே போகிறது.

மிழ்நாடு முழுவதும் இப்போது இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் மற்றும் கார், லாரி, பஸ், டிராக்டர் போன்ற வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டே போகிறது. இதுபோல, விபத்துக்களின் எண்ணிக்கையிலும், விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கையிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் 2–வது இடத்தில் இருக்கிறது என்பது மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய தகவலாகும். பெரும்பாலும் விபத்துக்கான காரணம் சாலை விதிமீறல் என்பதில் சந்தேகமே இல்லை. நிறையபேர் லைசென்சு இல்லாமல் வாகனங்களை ஓட்டுவது விபத்திற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இதை தடுக்கும் வகையில், வாகனம் ஓட்டுபவர்கள் அனைவரும் கண்டிப்பாக தங்களுடன் அசல் டிரைவிங் லைசென்சை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்து துறையினரும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட பெஞ்சு விசாரித்தது. விரிவான விசாரணைக்குப்பிறகு, நீதிபதிகள் இவ்வாறு ஒரிஜினல் லைசென்சை கையில் வைத்திருப்பதில் என்ன சிரமம் இருக்கிறது?. கண்டிப்பாக டிரைவிங் லைசென்சு வைத்திருக்கவேண்டும் என்ற அரசின் அறிவிப்புக்கு தடைவிதிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். நேற்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது.

அசல் டிரைவிங் லைசென்சு கையில் வைத்திருப்பது நிச்சயமாக எல்லோராலும் முடியாது. திருட்டு போய்விட்டால் திரும்ப லைசென்சு வாங்குவதற்கு பல நாட்களாகும். அதுவரையில் வாகனம் ஓட்டாமல் இருக்க வேண்டும் என்றநிலை இப்போது இருக்கிறது. ஆனால், இவ்வாறு டிரைவிங் லைசென்சு தொலைந்து விட்டது என்று கூறுபவர்கள், டூப்ளிகேட் லைசென்சுக்காக விண்ணப்பிக்கும்போது போலீஸ் ஸ்டே‌ஷனில் புகார் கொடுத்து, அங்கிருந்து இதை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழ் பெறவேண்டியதில்லை என்ற அளவில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களின் குழப்பத்தை போக்குவதற்காக சென்னை கூடுதல் போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, சுப்ரீம் கோர்ட்டு நியமித்த குழு பரிந்துரைப்படி, ‘அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லுதல்’ போன்ற 6 விதிமீறல்கள் மட்டுமே கடுமையான குற்றமாக கருதப்பட்டு, 9–ந்தேதி முதல் போலீசார் அசல் டிரைவிங் லைசென்சை கேட்பார்கள் என்று அறிவித்துள்ளார். போலீசாரின் அனாவசியமான கெடுபிடி இருக்கும் என்ற அச்சத்தை தவிர்க்கும்வகையில், இதுபோன்ற நடைமுறைகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து போலீசார் அமல்படுத்தவேண்டும்.

2016–ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசாங்கம், அனைவரும் டிரைவிங் லைசென்சையும், ஆர்.சி.புக் என்ற வாகனப்பதிவு சான்றிதழையும், செல்போனில் உள்ள டிஜிலாக்கரில் பதிவுசெய்து போலீசார் கேட்கும்போது, அதை டவுன்லோடு செய்து காட்டிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதேபோன்று போலீசாரும், வட்டாரபோக்குவரத்து அலுவலகமும் தங்கள் செல்போனில் இதற்கான ‘ஆப்’ என்று கூறப்படும் செயலியை வைத்திருந்தால் இந்த லைசென்சு ஒரிஜினல்தானா? என்பதை உடனடியாக கண்டுபிடித்துக் கொள்ளலாம். செல்போனில் இந்த வசதி இருக்கும்போது, ஒரிஜினல் லைசென்சை கொண்டுவா என்று சொல்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை. தமிழக அரசு உடனடியாக தனது மோட்டார் வாகன விதிகளில் ஒரிஜினல் லைசென்சு வைத்திருக்கவேண்டும் என்ற பிரிவோடு, டிஜிலாக்கரில் பதிவுசெய்து வைத்திருக்கலாம் அதுவும் செல்லும் என்ற திருத்தத்தை கொண்டுவரவேண்டும். மேலும், இதுகுறித்து முறையாக, அதிகாரபூர்வமாக அறிவித்து, டிஜிலாக்கரில் வைத்திருக்கும் லைசென்சு செல்லுபடியாகக் கூடியதுதான், அதையே போலீசாரிடம் காட்டிக்கொள்ளலாம் என்று அங்கீகரிப்பதன் மூலம், இப்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தை நீக்கமுடியும்.

Next Story