வேலைநிறுத்தம் வேண்டாமே!


வேலைநிறுத்தம் வேண்டாமே!
x
தினத்தந்தி 8 Sep 2017 9:30 PM GMT (Updated: 8 Sep 2017 1:08 PM GMT)

பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்யவேண்டும், 7–வது ஊதியக்குழுவின் அடிப்படையில்

ழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்யவேண்டும், 7–வது ஊதியக்குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்கவேண்டும், அவ்வாறு புதிய ஊதியம் நிர்ணயிக்க காலதாமதம் ஏற்படும் நிலையில், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கங்களில் 79 சங்கங்களைக்கொண்ட ஒரு பிரிவான ஜாக்டோ–ஜியோ என்று கூறப்படும் தமிழக அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு கடந்த சில தினங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது. மேலும், முதல்–அமைச்சரே ஈரோட்டில் இந்த சங்கங்களை அழைத்து பேசினார். இதில் ஒருபிரிவினர் முதல்–அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த் தையை ஏற்று வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் என்றனர். ஆனால், மற்றொரு பிரிவினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள்.

அரசு நிர்வாகத்தில் பெரியளவில் பாதிப்பு இல்லா விட்டாலும், பல அலுவலகங்களில் பொதுமக்களுக்கு இன்றியமையாத பணிகளில் தொய்வு ஏற்பட்டது. ஆசிரியர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், பல பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் வரவில்லை. சேலம் மாவட்டம், கருத்தராஜாபாளையம் என்ற ஊருக்கு வேறொரு பணியாக சென்ற மாவட்ட கலெக்டர் ரோகிணி, அங்குள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் வெளியே நின்றுகொண்டிருந்ததை பார்த்து, உடனடியாக அவர்களை பள்ளிக்கூடத்திற்குள் அழைத்துச்சென்று, தானே ஆங்கில பாடம் நடத்தினார், போர்டில் ஒரு திறமைமிக்க ஆசிரியரைப்போல் பாடங்களை எழுதிக்காட்டி விளக்கம் அளித்தார். மாணவர்கள் மகிழும் வண்ணம் ஆசிரியரான கலெக்டர் ரோகிணியை தமிழ்நாடே பாராட்டு கிறது. இந்தநிலையில், மதுரை ஐகோர்ட்டு கிளையில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டதில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர், ஜாக்டோ–ஜியோ நடத்தும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் பணி விதிமுறைகளை மீறியதாகும். இது போன்ற வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் எந்தவித இன்னலையும் அனுபவிக்கக்கூடாது. அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேலைநிறுத்தத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது. ஆசிரியர்கள் போராட்டம், மாணவர்களின் கல்வியை பாதிக்கக்கூடாது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் டி.கே.ரங்கராஜனுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நடந்த ஒரு வழக்கில் அளிக்கப்பட்ட ஒரு தீர்ப்பில், ‘அரசு ஊழியர்களுக்கு வேலைநிறுத்தம் செய்வது என்பது அடிப்படை உரிமையோ, சட்டபூர்வ உரிமையோ, தார்மீக உரிமையோ இல்லை. தங்கள் கோரிக்கைகளுக்காக வேறுவழிகளை பின்பற்ற லாம்’ என்று வழங்கப்பட்ட தீர்ப்பை நீதிபதிகள் சுட்டிக் காட்டினர். இப்போது ஜாக்டோ–ஜியோவை சேர்ந்தவர்கள் இது காலவரையற்ற போராட்டம் இல்லை என்றுகூறி, நேற்றும் பணிக்குச் செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிப்பது தவறு இல்லை. ஆனால், அவர்களுடைய கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தம் செய்து பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டால், மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்பட்டால் நிச்சயமாக பொதுமக்களும், மாணவர்களும் அதை வரவேற்கமாட்டார்கள். அவர்களின் அதிருப்தியைத்தான் சம்பாதிக்கவேண்டும். ஜப்பான் நாட்டில் தங்கள் கோரிக்கைக்காக போராட்டம் செய்பவர்கள் வழக்கமான பணிகளைவிட, கூடுதலாக தங்களை வருத்திக் கொண்டு வேலைசெய்து, உற்பத்தியை பெருக்கிக்காட்டி, அதன்மூலம் அனுதாபத்தை சம்பாதித்துக்கொள்வார்கள். அதுபோல, பொதுமக்களின் ஆதரவு இருந்தால்தான் எந்த போராட்டமும் வெற்றிபெறும் என்றவகையில், அரசு பணி களிலோ, பொதுமக்களுக்கான பணிகளிலோ, மாணவர் களின் கல்வி பணிகளிலோ பாதிப்பு ஏற்படாமல் வேறு பலவழிகளில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவதுதான் சாலச்சிறந்ததாகும். அரசும் இதுபோல அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும்போது, வேலை நிறுத்தம் வரை செல்லவிடாமல் சுமுகமான முடிவுகளை பேச்சுவார்த்தை மூலம் எடுக்க வகை செய்யவேண்டும். மொத்தத்தில், அரசும், அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது.

Next Story