இவ்வளவு கட்டுப்பாடுகள் வேண்டுமா?


இவ்வளவு  கட்டுப்பாடுகள்  வேண்டுமா?
x
தினத்தந்தி 10 Sep 2017 9:30 PM GMT (Updated: 2017-09-10T17:36:52+05:30)

எந்தவொரு அரசாங்கமும் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்றால் நிச்சயமாக அதற்கு வருவாய் வேண்டும்.

ந்தவொரு அரசாங்கமும் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்றால் நிச்சயமாக அதற்கு வருவாய் வேண்டும். மத்திய, மாநில அரசாங்கங்கள் தங்களுக்கான வருவாயில் பெரிதும் நம்பியிருப்பது மக்களிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் வசூலிக்கும் வரிதான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால், அந்த வரியை வசூலிக்கும்போது, ‘மயில் இறகால் வருடுவதைப்போல’ வலிக்காமல் வசூலிக்கவேண்டுமே தவிர, கசக்கி பிழிந்து வசூலிக்கக்கூடாது. சிலநேரங்களில் வரி வசூலிக்கிறோம் என்றபெயரில், மக்களை பெரிதும் அவதிக்குள்ளாக்கும் நிலை இருக்கிறது. இப்போதெல்லாம் வருமான வரித்துறை அதிக மக்களை வரி வளையத்திற்குள் கொண்டுவருவதிலும், முறையாக வரி கட்டுபவர்களிடம் இருந்து கூடுதலாக வரி வசூலிப்பதிலும் மிகத்தீவிரமாக இருக்கிறது. எந்தவொரு பொருள் வாங்கினாலும், சொத்துகள் வாங்கினாலும், பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டாலும், ‘பான்கார்டு’ எண்ணை கொடுப்பதாலும், ஆதார் எண் கட்டாயம் என்பதாலும், ஆதார் எண்ணை ‘பான்கார்டு’ எண்ணுடன் இணைக்க கட்டாயப்படுத்துவதாலும் எதையும் அரசாங்கத்திடமிருந்து மறைக்கமுடியாது என்று வருமான வரித்துறை கருதுகிறது.

இந்தநிலையில், கடந்த 2 ஆண்டுகளில் ரூ.50 லட்சத்துக்கு மேல் சொத்துகள் வாங்கியவர்களுக்கும், மியூச்சுவல் பண்டு அல்லது கார் வாங்க ரூ.10 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்தவர்களுக்கும் வருமான வரித்துறை எஸ்.எம்.எஸ். மூலம் செய்தி அனுப்பி வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய சொல்லப்படுகிறது. ரூ.50 லட்சத்துக்கு மேல் சொத்துகள் வாங்கியவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவதில் தவறு இல்லை. ஆனால், ரூ.10 லட்சம் சேமிப்புக்கு முதலீடு செய்வது என்பது இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொருவரின் தேவையாகும். சேமிப்புகளில் ரூ.10 லட்சம் முதலீடு செய்வதால் கையில் இருக்கும் பணம் கணக்குக்கு வந்துவிடுகிறது. அதில் இவ்வளவு கெடுபிடி தேவையில்லை. இதுமட்டுமல்லாமல், ரொக்கப்பரிவர்த்தனையை முழுமையாக தடைசெய்து, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் செய்யமுடியுமே தவிர, உடனடியாக செய்துவிடுவது என்பது இயலாத காரியமாகும். இப்போது ரொக்கப்பரிவர்த்தனை முழுமையாக தடைசெய்வதற்காக வருமான வரித்துறை சில அறிவுப்புகளை வெளியிட்டுள்ளது.

எந்தவொரு நிகழ்வு, நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்காக ஒரேநாளில் ஒருவர் ரூ.2 லட்சத்துக்குமேல் உள்ள தொகையை ரொக்கமாக கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல, நிலம், மனை போன்ற அசையா சொத்துகளை வாங்குவதற்கோ, விற்பதற்கோ மற்றும் முன்பணமாகவோ ரூ.20 ஆயிரத்துக்குமேல் ரொக்கமாக பெறுவதும் தடைச்செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், எந்தவொரு வர்த்தகத்திலும் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கமாக அல்லது தொழில் செலவினமாக ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கத்தொகையாக பெறக்கூடாது என்று சொல்லுவது நிச்சயமாக மக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். ரூ.10 ஆயிரத்துக்குமேல் ரொக்கமாக செலுத்தக்கூடாது என்றால், எல்லோருமே ‘இன்டர்நெட் வங்கி மூலமோ, செக் மூலமோ, டெபிட் கார்டு’ மூலமோ நிச்சயமாக பணப்பரிவர்த்தனை செய்யமுடியாது. கிராமப்புறங்களில் நிலம், சொத்துகள் வாங்கும்போது, அட்வான்சாக ரொக்கம் கொடுப்பது வழக்கம். கிராமங்களில் எல்லோருமே வங்கி பரிவர்த்தனைகளை வழக்கமாக கொண்டிருப்பதில்லை. ரூ.2 லட்சத்துக்குமேல் ரொக்க பரிவர்த்தனை வேண்டாம் என்பதில் பொருள் இருக்கிறது. ஆனால், 2 ஆயிரம் ரூபாயை கரன்சியாக புழக்கத்தில் விட்டுவிட்டு, 5 நோட்டு கூட அல்லது 10 நோட்டு கூட கையில் வைத்துக்கொண்டு பரிவர்த்தனை செய்யக்கூடாது என்றால் நிச்சயமாக அது ஏற்புடையதல்ல. பணத்துக்கு உள்ள அதிகாரம், மதிப்பு இருக்கட்டும். சுற்றி வரட்டும். அதற்கு முட்டுக்கல் போடும் வகையில் இந்த கடுமையான அறிவிப்பு இருக்கிறது. கையில் ரொக்கத்தை வைத்துக்கொண்டும் பணபரிவர்த்தனை நடக்கட்டும்.

Next Story