‘டுவிட்டர்’ அரசியல்


‘டுவிட்டர்’  அரசியல்
x
தினத்தந்தி 11 Sep 2017 9:30 PM GMT (Updated: 2017-09-11T19:52:29+05:30)

காலம் மாற மாற, அரசியல் நடைமுறைகளும் மாறிக்கொண்டே இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசும், தி.மு.க.வும் எதிரெதிர் கருத்துக்களை சொல்லும்போது, ஒருவர் ஒரு இடத்தில் பொதுக்கூட்டம் போடுவார்கள்.

காலம் மாற மாற, அரசியல் நடைமுறைகளும் மாறிக்கொண்டே இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசும், தி.மு.க.வும் எதிரெதிர் கருத்துக்களை சொல்லும்போது, ஒருவர் ஒரு இடத்தில் பொதுக்கூட்டம் போடுவார்கள். அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை, அடுத்த கட்சியும் ஒரு பொதுக்கூட்டம் போட்டு மறுப்பு தெரிவிக்கும். பிறகு பரஸ்பர அறிக்கை போர்கள் நடந்தன. அதேபோல, பத்திரிகை நிருபர்களை இரு தரப்பும் சந்தித்து தங்கள் கருத்துக்களை மாறி மாறி சொல்லி வந்தனர். இப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ந்தவுடன், பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி, தமிழக அரசியல் கட்சிகள், தமிழக அரசு எல்லோருமே சமூக வலைதளமான டுவிட்டரில் கணக்கு தொடங்கி, டுவிட்டரிலேயே அறிவிப்புகள், எதிர்மறை கருத்துகள் என எல்லாமே நான்கைந்து வரிகளில் கூறப்படுகின்றன. பத்திரிகை நிருபர்களுக்கு டுவிட்டரில் செய்திகளை பார்க்க வேண்டும் என்பது அவசர அவசியமாகிவிட்டது. குறிப்பாக தமிழக அரசியலில் இப்போது முதலில் அரசியலுக்கு வரத்துடிக்கும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும், டுவிட்டரில் தங்கள் செய்திகளை பதிவு செய்து வருகிறார்கள்.

1972–வரையில் தமிழ்நாட்டில் காங்கிரசா, தி.மு.க.வா? என்ற நிலையிலேயே அரசியல் சுற்றி சுற்றி வந்தது. 1972–ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியபிறகு இன்று வரை தி.மு.க.வா?, அ.தி.மு.க.வா? என்ற நிலையில்தான் தமிழக அரசியல் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. 1967–ல் தோல்வி அடைந்த காங்கிரஸ் மீண்டும் தனியாக ஆட்சி அமைக்க முடியாமல் தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு கட்சிகளை சார்ந்தே தங்கள் அரசியல் பாதையை வகுத்துக் கொண்டது. தற்போது நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்குள் நுழைவதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கி விட்டனர். 1996–ல் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, ‘அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆண்டவனால்கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது’ என்று சொல்லி அரசியல் மாற்றத்துக்கு வித்திட்டவர் ரஜினிகாந்த். ஆனால், அதன்பிறகு ‘இதோ வருகிறார்’, ‘அதோ வருகிறார்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாலும், அவர் இன்றுவரை அரசியலுக்குள் கால் எடுத்து வைக்கவில்லை. ஆனால், கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்த நேரத்தில் அரசியலுக்குள் வருவதை சூசகமாக தெரிவித்தார். கடந்த மாதம் திருச்சியில் நடந்த ‘காந்திய மக்கள் இயக்கம்’ சார்பில் நடந்த அரசியல் விழிப்புணர்வு மாநாட்டில், ‘நான் அரசியலுக்கு வருவது என்று முடிவு எடுத்துவிட்டேன். இது ஆண்டவன் எனக்கு இட்ட கட்டளை’ என்று ரஜினிகாந்த் சொன்னதாக தமிழருவி மணியன் பகிரங்கமாக அந்தக் கூட்டத்தில் அறிவித்தார். நான் ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் தென்னக நதிகளை இணைத்து, தமிழக தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பது, ஊழலற்ற ஆட்சியை தருவது, வெளிப்படையான ஆட்சியை தருவது என்பதே எனது மூன்று கனவுத்திட்டங்கள் என்று ரஜினிகாந்த் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

கமல்ஹாசனை பொறுத்தமட்டில், ஒவ்வொரு பிரச்சினைக்கும் டுவிட்டரில் அரசியல் தொடர்பான கருத்துக்களை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தெரிவித்துக் கொண்டே வருகிறார். சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த ஒரு திருமண விழாவில், ‘நான் அரசியலுக்கு நேரடியாக வந்துவிட்டேன். அந்த அரசியல் டுவிட்டரிலேயே தொடங்கி விட்டேன். எனது அரசியல் பிரவேசம் எப்போதோ தொடங்கிவிட்டது’ என்று பட்டவர்த்தனமாக தெரிவித்துவிட்டார். நேற்று முன்தினம் நதிநீர் இணைப்பு குறித்து ரஜினிகாந்த் டுவிட்டரில் செய்தி அனுப்பியுள்ளார். இருவருமே அறிக்கையோ?, பத்திரிகையாளர்கள் சந்திப்பையோ நடத்தாமல், டுவிட்டரிலேயே தங்கள் கருத்துக்களை பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள். இப்போதுள்ள நிலையில், தமிழக அரசியலில் உள்ள பெரிய எதிர்பார்ப்பு, டுவிட்டர் அரசியல் நடத்தும் ரஜினிகாந்தா?, கமல்ஹாசனா?. இதில் யார் முதலில் அரசியல் அரங்கிற்குள் நுழையப்போகிறார்கள்?, அவர்கள் தொடங்கும் அரசியல் கட்சிகள் எந்த அணியோடும் சேருமா? அல்லது தனியாக நிற்கப்போகிறார்களா? என்பதும் பலத்த விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது.


Next Story