‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள்


‘நீட்’  தேர்வு  பயிற்சி  மையங்கள்
x
தினத்தந்தி 12 Sep 2017 9:30 PM GMT (Updated: 12 Sep 2017 5:25 PM GMT)

‘நீட்’ தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.

‘நீட்’ தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. பிளஸ்–2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்தும், ‘நீட்’ தேர்வில் 86 மதிப்பெண்கள் மட்டுமே பெறமுடிந்த அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். தமிழகமே கண்ணீர் வடிக்கிறது.

இந்தநிலையில், அடுத்த ஆண்டு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்குபெற முயற்சி செய்கிறோம், ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும் என்று வீண் நம்பிக்கையை மாணவர்களிடம் வளர்க்காமல், இனி ‘நீட்’ தேர்வு மூலம்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற நோக்கில் ஒருவழியாக தமிழக அரசு அதற்குரிய நடவடிக்கையை தொடங்கிவிட்டது.

இந்த ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில், மொத்தம் உள்ள 3,534 இடங்களில், மாநில கல்வித்திட்டத்தின்கீழ் படித்த 2,314 மாணவர்களுக்கும், சி.பி.எஸ்.இ. கல்வித்திட்டத்தின்கீழ் படித்த 1,220 மாணவர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது. மாநில கல்வித்திட்டத்தின்கீழ் படித்த மாணவர்களுக்குத்தான் அதிக இடங்கள் கிடைத்துள்ளது என்று நாம் பெருமைப்பட்டுக்கொள்ளமுடியாது. ஏனெனில், இதில் 43 சதவீத மாணவர்கள் அதாவது, 1,004 மாணவர்கள் ஒரு ஆண்டுக்கோ அல்லது 2 ஆண்டுகளுக்கு முன்போ படித்த பழைய மாணவர்கள். இதில் பெரும்பாலானோர் ‘நீட்’ தேர்வுக்காக பயிற்சி மையங்களில் படித்து தங்களை தயார்படுத்திக்கொண்டவர்கள். அனைத்து மாணவர்களுக்கும் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கவேண்டியது அவசர அவசியமாகிவிட்டது. இதை புரிந்துகொண்ட காரணத்தினால் தமிழக அரசு, மாணவர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 412 ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்க முடிவுசெய்துள்ளது என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தது, மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இதுமட்டுமல்லாமல், பள்ளிக்கூடங்களிலும் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளும் வகையில் கல்வித்தரம் உயர்த்தப்படும். இனிமேலும் அனிதா உயிரிழப்பு போன்ற சம்பவம் ஏற்படாதவகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

வார இறுதி நாட்களில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ராஜஸ்தான், டெல்லி, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து திறமைமிக்க ஆசிரியர்கள் மூலம் ‘நீட்’ தேர்வுக்கு நமது மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். இந்த பயிற்சியை மாணவர்களுக்கு செல்போனில் உள்ள ‘ஸ்கைப்’ மூலமாக பெற்றுக்கொள்வதற்கும் வகைசெய்யப்படும். ‘நீட்’ தேர்வுக்கு 54 ஆயிரம் கேள்விகள், விடைகள் அடங்கிய குறிப்பேடுகளை அதற்குரிய வரைபடத்துடன் தமிழிலும், ஆங்கிலத்திலும் மாணவர்களுக்கு வழங்குவதற்கும் அரசு ஏற்பாடு செய்யும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். எந்த தேர்வு வந்தாலும், அதை ஜெயித்துக்காட்டுகிற வல்லமை தமிழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு உள்ளது என்ற சரித்திரம் படைக்கப்படும் என்ற உறுதியையும் அளித்துள்ளார். நிச்சயமாக இந்த அறிவிப்புகள் எல்லாம் வரவேற்கத்தக்கது. நமது மாணவர்களால் முடியாது என்று சொல்லிக்கொண்டிருக்காமல், நமது மாணவர்களாலும் நிச்சயமாக முடியும் என்ற நிலையை உருவாக்குவதுதான் சிறந்ததாகும். ஆனால், இதை வெறும் அறிவிப்பு அளவில் நிறுத்திவிடாமல், இந்த கல்வி ஆண்டு தொடங்கும் இந்த நேரத்திலேயே அடுத்த ஒரு மாதங்களுக்குள்ளேயே தொடங்கினால்தான், வரும் ஆண்டு மாணவர்களால் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளமுடியும். இப்போது உருவாக்கப்படும் பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக அல்ல, சி.பி.எஸ்.இ.க்கு மேல் உள்ள தரத்தில் தயாரிக்கப்படவேண்டும். இதை கற்றுக்கொடுக்கும் அளவில் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கவேண்டும். மொத்தத்தில், எங்கள் மாணவர்கள் ‘நீட்’ தேர்வை எழுதி எளிதில் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கையை ஊக்குவிக்கும் விதத்தில் பயிற்சியும், பாடத்திட்டமும் இருக்கவேண்டும்.

Next Story