யாருக்கு லாபம்?, யாருக்கு நஷ்டம்?


யாருக்கு லாபம்?, யாருக்கு நஷ்டம்?
x
தினத்தந்தி 21 Sep 2017 9:30 PM GMT (Updated: 2017-09-21T18:40:23+05:30)

இன்று செப்டம்பர் 22–ந் தேதி. ஒரு கேப்டன் இல்லாத கப்பல்போல அ.தி.மு.க. தத்தளிக்கும் நிலைமை உருவாகி ஓராண்டாகிறது.

ன்று செப்டம்பர் 22–ந் தேதி. ஒரு கேப்டன் இல்லாத கப்பல்போல அ.தி.மு.க. தத்தளிக்கும் நிலைமை உருவாகி ஓராண்டாகிறது. இதே நாளில்தான் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு ஒருநாளைக்கு முன்புதான் மெட்ரோ ரெயிலின் 2–வது திட்டத்தொடக்கவிழா சின்னமலையில் நடந்தது. தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அப்போது மத்திய மந்திரியாக இருந்தார். ‘தமிழ்நாட்டின் நண்பர்’ என்று ஜெயலலிதாவால் அடிக்கடி வர்ணிக்கப்படும் வெங்கையா நாயுடுவும், ஜெயலலிதாவும் இந்த விழாவில் கலந்துகொண்டு தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால், ஜெயலலிதா விழாமேடைக்கு போகவில்லை. மிகவும் பலவீனமான நிலையில் சோர்வோடு இருந்த அவர், தலைமைச்செயலகத்தில் இருந்தே வீடியோ கான்பரன்சிங் மூலம் பச்சைக்கொடி அசைத்து திட்டத்தை தொடங்கிவைத்தார். இதுதான் அவர் கலந்துகொண்ட கடைசி விழா.

அதன்பிறகு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் இருந்து 74 நாட்களில் உயிரைவிட்டார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22–ந் தேதி முதல் அ.தி.மு.க.வில் ஒரு நிலையற்ற தன்மை ஏற்படத்தொடங்கிவிட்டது. கட்சிக்கு யார் தலைமை? என்பதில் பெரும் போராட்டம் நடக்கிறது. தற்போது எடப்பாடி பழனிசாமி அணி, தினகரன் அணி என்று முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன. டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இப்படிப்பட்ட அரசியல் சூழ்நிலையில், 2 வழக்குகள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. சட்டசபையை உடனடியாக கூட்டி, எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் தன் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருந்தார். தங்களை தகுதிநீக்கம் செய்தது செல்லாது என்று டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்.துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், ஆஜராக டெல்லியிலிருந்து பிரபல வக்கீல்கள் சென்னை ஐகோர்ட்டுக்கு வந்திருந்தனர். நீதிபதி எம்.துரைசாமி இந்த வழக்கில் ஒரு இடைக்கால உத்தரவை மட்டும் அளித்து, மீண்டும் விசாரணையை அக்டோபர் 4–ந் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த இடைக்கால உத்தரவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. அவர்களை தகுதிநீக்கம் செய்தது சரியா?, தவறா? என்று இந்த இடைக்கால உத்தரவில் குறிப்பிடவில்லை. ஆனால், அந்த 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளிலும் ஐகோர்ட்டின் மறுஉத்தரவு வரும்வரை தேர்தல் நடத்த எந்தவித ஏற்பாடும் செய்யக்கூடாது. இதேபோல, மறுஉத்தரவு வரும்வரை சட்டசபையைக்கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆக, அக்டோபர் 4–ந் தேதி வரை அல்லது ஐகோர்ட்டின் மறுஉத்தரவு வரும்வரை இப்போதைய நிலையே நீடித்துவருகிறது.

சபாநாயகரை பொறுத்தமட்டில், 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் தொடர்கிறது என்று பெருமிதம் கொள்ளலாம். 18 எம்.எல்.ஏ.க்களை பொறுத்தமட்டில், எங்கள் தொகுதியில் மறுஉத்தரவு வரும்வரை மறுதேர்தல் நடத்துவதற்காக அறிவிப்பு வெளியிடமுடியாது என்று மனநிறைவு கொள்ளலாம். முதல்–அமைச்சரை பொறுத்தமட்டில், அவையில் மெஜாரிட்டியை நிரூபிக்கவேண்டிய அவசியமோ, சட்டசபையை கூட்டவேண்டிய அவசியமோ இப்போது இல்லை. குறைந்தபட்சம் மறுஉத்தரவு வரும்வரை எந்தவித சிக்கலும் இல்லாமல், அரசை நடத்தமுடியும் என்று நினைத்துக்கொள்ளலாம். ஆனால், இந்த இடைக்கால உத்தரவால், யாருக்கு லாபம்?, யாருக்கு நஷ்டம்? என்பது அக்டோபர் 4–ந் தேதி மீண்டும் விசாரணை தொடங்கி தீர்ப்பு வந்தபிறகுதான் தெரியும். ஆனால், அதற்குப்பிறகும் ஐகோர்ட்டு பெஞ்சுக்கு அப்பீல், உச்சநீதிமன்றத்துக்கு அப்பீல் என்று நீண்ட நெடும்தூரம் நீதிபயணத்தை இந்த வழக்கு கொண்டுசெல்லும் என்பதால், இப்போதைக்கு இந்த பிரச்சினைக்கு நிச்சயமாக இறுதி தீர்வு கிடைக்கப்போவதில்லை.

Next Story