ஒரே நேர தேர்தலுக்கு, தமிழக அரசு ஆதரவா?


ஒரே நேர தேர்தலுக்கு, தமிழக அரசு ஆதரவா?
x
தினத்தந்தி 24 Sep 2017 9:30 PM GMT (Updated: 24 Sep 2017 11:57 AM GMT)

அரசியல் அரங்கில் அவ்வப்போது பல ஆச்சரியங்கள் நிகழ்வது உண்டு. அதுபோல, ஒட்டுமொத்த இந்தியாவே ஆச்சரியத்துடன் பார்க்கும் ஒரு நிகழ்வு பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தின் மூலம் ஏற்பட்டுள்ளது.

ரசியல் அரங்கில் அவ்வப்போது பல ஆச்சரியங்கள் நிகழ்வது உண்டு. அதுபோல, ஒட்டுமொத்த இந்தியாவே ஆச்சரியத்துடன் பார்க்கும் ஒரு நிகழ்வு பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தின் மூலம் ஏற்பட்டுள்ளது. வெகுகாலமாகவே பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஒரே நேரத்தில் பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தவேண்டும் என்ற ஒரு திட்டம் இருக்கிறது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற பல கட்சிகள் இது ஜனநாயகத்திற்கு விரோதமானது, அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று கருத்து கூறி வந்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இதெல்லாம் நடப்பதற்கு சாத்தியமே இல்லை என்று தள்ளிவிட்டன. அ.தி.மு.க. 2015–ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த கருத்தை ஏற்றுக்கொண்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில், தம்பிதுரை இவ்வாறு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்துவதால், காலத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்த முடியும். அரசின் நிர்வாகத்திற்கும் எந்தத்தடையும் இருக்காது. பாராளுமன்றத்திற்கும், சட்டசபைகளுக்கும் 2019–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசியிலோ, அல்லது மார்ச் மாதம் தொடக்கத்திலோ ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தலாம். 2018 ஜனவரி முதல் 2019–ம் ஆண்டுகளில் 10 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் நடக்க இருக்கிறது. ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தினால், இந்த மாநிலங்களில் தேர்தலை ஒரு ஆண்டுவரை தள்ளிவைக்கலாம். அல்லது ஜனாதிபதி ஆட்சிக்கு உத்தரவிடலாம் என்றும் ஆலோசனை கூறியிருக்கிறார்.

இந்திய அரசியல் சட்டப்படி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாராளுமன்ற தேர்தலும், சட்டசபை தேர்தலும் நடத்தப்படவேண்டும். 1952 முதல் 1967 வரை இவ்வாறு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தும் முறை பலமாநிலங்களில் கடைப்பிடிக்கப்பட்டுத்தான் வந்தது. 1959–ல் முதலாவதாக கேரளாவில் 2 ஆண்டுகளே பதவிகாலத்தை முடித்திருந்த கம்யூனிஸ்டு கட்சி அரசாங்கம் ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டதிலிருந்து இவ்வாறு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்துவது அந்தமாநிலத்தில் தடைபட்டது. அதன்பிறகு பல்வேறு மாநிலங்களில் ஆட்சிகள் ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டதினாலோ, மெஜாரிட்டி இல்லாததினாலோ, அரசாங்கங்களே ராஜினாமா செய்ததினாலோ அவ்வப்போது ஆட்சிகள் மாறி புதிய தேர்தல்களை நடத்தவேண்டிய சூழ்நிலையில், இவ்வாறு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தும்முறை மாறிவிட்டது.

பாராளுமன்ற தேர்தல் நடத்துவதற்கு ரூ.4 ஆயிரம் கோடி செலவாகும். இதுபோல, மாநிலங்களில் தேர்தல் நடத்த ஒவ்வொரு மாநிலத்திற்கும் ரூ.300 கோடிக்கும் மேல் செலவாகும். ஆனால், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் மொத்தமே ரூ.4,500 கோடிதான் செலவாகும். இதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு தேர்தலின்போதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு, அரசாங்கத்தால் எந்த புதிய திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல் போய்விடும். இதுதவிர, தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார், ஊர்க்காவல்படையினர் என்று பல ஊழியர்கள் தங்கள் வழக்கமான பணிகளிலிருந்து சென்றுவிடுவதால் அரசு நிர்வாகமும் பாதிக்கும். நிதி ஆயோக் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்துவதையே ஆலோசனையாக வழங்கியிருக்கிறது. 1989–ம் ஆண்டுக்குப்பிறகு 31 முறை பல்வேறு மாநிலங்களில் மாநில சட்டசபைகளுக்கும், பாராளுமன்றத்திற்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டாலும், 1989, 1991, 1996 ஆகிய 3 ஆண்டுகளில் ஒரேநேரத்தில் தேர்தல் நடந்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல், ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தினால் மாநிலத்திற்கும், மத்திய அரசாங்கத்திற்கும் ஒரேகட்சிக்கு ஓட்டுப்போடும் மனோபாவம் வாக்காளர்களுக்கு வந்துவிடும் என்ற கருத்தை தமிழ்நாட்டில் ஒரேநேரத்தில் தேர்தல் நடந்தபோது மாற்றிக்காட்டியிருக்கிறது. எனவே, இந்தக்கருத்தும் அடிபட்டுப்போய்விடுகிறது. எனவே, 2019–ம் ஆண்டிலிருந்து இவ்வாறு ஒரேநேரத்தில் பாராளுமன்ற தேர்தலையும், சட்டசபை தேர்தலையும் நடத்தும் முடிவை மத்திய அரசாங்கமும், தேர்தல் கமி‌ஷனும் நிறைவேற்றுவதற்கு முயற்சி எடுக்கவேண்டும். மாநில அரசுகளும் அதற்கு துணை நிற்கவேண்டும்.

Next Story