படிக்கத்தானே மாணவர்களை அனுப்புகிறோம்


படிக்கத்தானே  மாணவர்களை  அனுப்புகிறோம்
x
தினத்தந்தி 25 Sep 2017 9:30 PM GMT (Updated: 25 Sep 2017 1:50 PM GMT)

பல நேரங்களில் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புக்குப்பிறகு, அரசு நிர்வாகம் சில செயல்களை வேகமாக செய்யும்போது, இதை முதலிலேயே அரசு செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

ல நேரங்களில் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புக்குப்பிறகு, அரசு நிர்வாகம் சில செயல்களை வேகமாக செய்யும்போது, இதை முதலிலேயே அரசு செய்திருக்கலாமே என்று  தோன்றுகிறது.  அப்படி  ஒரு வழக்கு  நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ளது. ஏ.பி.சூர்யபிரகாசம் என்ற ஐகோர்ட்டு வக்கீல் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் மக்கள் எல்லோருடைய மனதிலும் குறிப்பாக மாணவர் மனதில் சுழன்று கொண்டிருந்த ஒரு பெரியகுறையை பிரதிபலித்துள்ளது. அவர் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழக அரசு சமீபகாலங்களில் கல்விசாராத அரசியல் பொதுநிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி அழைத்து வருகிறது. நிகழ்ச்சி நடப்பது மாலையில் என்றாலும், அந்த நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் காலையிலேயே மாணவர்களை அழைத்து வந்து காத்திருக்க வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் முறையாக செய்துகொடுப்பதில்லை. அரசு நடத்தும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக மாணவர்களை அழைத்துச் செல்லும் போது அவர்களின் பெற்றோர்களிடம் முறையாக அனுமதியை பெறுவதில்லை. சில இடங்களில் மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி மாணவர்கள் காயமடையும் நிலை ஏற்படுகிறது. மனதளவில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளிக்கூடங்களுக்கு பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்புவது கல்வி கற்பதற்காகத்தானேயொழிய, இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அல்ல. எனவே, பள்ளிக்கூட மாணவர்களை கல்விசாராத அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச்செல்வதற்கு தடைவிதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அக்டோபர் 6–ந் தேதி அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

வெகுகாலமாகவே மாணவர்களை அரசு நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் சேருவதை காட்டுவதற்காக இவ்வாறு அழைத்துச்செல்லப்படும் நிலை உள்ளது. இப்போது அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் அழைத்துச் செல்கிறார்கள். பொதுவாக அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆட்களை அழைத்துவரும் வழக்கம் இப்போது அதிகமாக இருக்கிறது. ஆனால், மாணவர்களை அழைத்து வந்தால் பணம் இல்லாமல் கொண்டுவரும் வேலை எளிதாக முடிவடைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாமல், அவ்வப்போது ஏதாவது போக்குவரத்து தினம், எய்ட்ஸ் ஒழிப்பு தினம், காசநோய் ஒழிப்பு தினம், குடிப்பழக்கம் தவிர்ப்பு, ஹெல்மெட் அணிவதை கட்டாயப்படுத்தும் நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை காரணமாக வைத்து மாணவர்களை பேரணியாக அழைத்துச்செல்கிறார்கள். மனித சங்கிலியாக சாலையில் நிற்க வைக்கிறார்கள். எய்ட்ஸ் பற்றி தெரியவேண்டிய அவசியம் இல்லாத பச்சிளம் வயது மாணவர்கள் கையில் எய்ட்சை ஒழிப்போம் என்ற பதாகைகளை வைத்துக் கொண்டு நிற்பதைப் பார்க்கும்போது சாலையில் செல்பவர்களின் மனமெல்லாம் பதறுகிறது. இந்த மாணவர்கள் எல்லாம் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி இல்லாமல் சோர்ந்து துவண்டு விடுகிறார்கள்.

காலையில் பேரணியில் நின்றுவிட்டு, பள்ளிக்கூடத்திற்கு சென்றால் எப்படி படிக்க முடியும்? அதுபோல, அரசு நிகழ்ச்சிகள் என்றாலும், இவ்வாறு அவர்களை கொண்டு போய் பல மணிநேரம் உட்கார வைத்து விட்டு, வீட்டிற்கு அனுப்பினால் அவர்களால் எப்படி படிக்க முடியும்?, படிக்க வேண்டிய வயதில் அவர்கள் படிப்பை சிதறவைக்கும் வகையில், இப்படிப்பட்ட செயல்களில் கல்வித்துறை ஈடுபடுத்தினால் மாணவர்களின் கல்வி நிச்சயமாக பாழாகி போய்விடும். எனவே, இந்த வி‌ஷயத்தில் நீதிபதி தீர்ப்பு கூறும் முன்பே, பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் இனி இவ்வாறு மனித சங்கிலியில் நிற்க வைக்கப்பட மாட்டார்கள், பேரணியில் கலந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்பட மாட்டார்கள், படிப்புக்கு சம்பந்தமில்லாத அரசின் பொதுநிகழ்ச்சிகளிலோ, அரசியல் நிகழ்ச்சிகளிலோ கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறும்வகையில், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு தடை உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் படிக்க மட்டுமே செல்லட்டும். அவர்களின் எண்ணங்களை சிதறடிக்கும், அவர்களை சோர்வடைய வைக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை இனி தமிழ்நாட்டில் பார்க்கும் நிலைமை வேண்டாம், வேண்டாம், வரவே வேண்டாம்.

Next Story