தொழில் வளர்ச்சியில் வேகம் வேண்டும்


தொழில் வளர்ச்சியில் வேகம் வேண்டும்
x
தினத்தந்தி 27 Sep 2017 9:30 PM GMT (Updated: 2017-09-27T18:12:47+05:30)

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மகளும், அவரது ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் ஒரு செய்தியை அனுப்பியிருந்தார்.

மெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மகளும், அவரது ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். அந்த செய்தியில், ‘இந்தியாவில் நடக்கும் 2017–ம் ஆண்டுக்கான சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டுக்கு அமெரிக்க குழுவை அழைத்து செல்வதிலும், பிரதமர் நரேந்திர மோடியையும், உலகம் முழுவதும் இருந்து வரும் ஆர்வமுள்ள தொழில் முனைவோரையும் சந்திக்கும் கவுரவம் எனக்கு கிடைத்துள்ளது’ என்று தெரிவித்திருந்தார். ஏற்கனவே இதுதொடர்பான ஒரு அறிவிப்பை டிரம்பும் வெளியிட்டிருந்தார். பிரதமர் நரேந்திர மோடியும் சமீபத்தில், ‘இந்த ஆண்டு நவம்பர் 28–ந் தேதி இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகள் நடத்தும் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள், அமெரிக்க நாட்டு தொழில் முனைவோர் குழுவை அழைத்து வருகிறார்’ என்று செய்தியை பதிவு செய்திருந்தார். இந்த 3 நாள் மாநாடு இருநாடுகளில் உள்ள தொழில் முனைவோரையும் ஒன்றாக சந்திக்க வைத்து, தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை வழங்கும் என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவில் முதல் முறையாக ஐதராபாத்தில் நடக்கும் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பெண்களை மையமாக வைத்து, பெண் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்கு இந்த மாநாட்டில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து 1,500–க்கும் அதிகமான தொழில் முனைவோர் கலந்துகொள்கிறார்கள். மாநாட்டை நடத்தும் இந்தியா, அமெரிக்கா சார்பில் தலா 400 பேர் கொண்ட மிகப்பெரிய தொழில் முனைவோர் குழு கலந்துகொள்வது நிச்சயமாக மிகவும் பலனளிக்கப்போகிற ஒன்றாக கருதப்படுகிறது. தெலுங்கானா அரசு இந்த மாநாட்டை தங்கள் மாநில தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதில் மிகவும் தீவிரமாக இருக்கிறது. இந்த மாநாட்டில் தொழில்தொடங்க முன்வரும் இந்திய, அமெரிக்க தொழில் முனைவோரின் பார்வை தமிழ்நாட்டில் விழ தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும். தெலுங்கானாவும், ஆந்திராவும் போட்டிப்போட்டுக் கொண்டு, தங்கள் மாநிலங்களில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே ஆந்திரா அரசாங்கம், தமிழக எல்லையில் இருந்து கூப்பிடும் தூரத்தில் ஸ்ரீசிட்டி என்ற ஊரில் மிகப்பெரிய தொழில் பூங்காவை அமைத்து, மிகவும் வேகமாக தொழில்களை தொடங்கி வருகிறது. தெலுங்கானாவிலும் தொழில் வளர்ச்சியிலும், வேலைவாய்ப்பை பெருக்குவதிலும், ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சியிலும் மிகவும் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இந்த வளர்ச்சி எல்லாம் பின்தங்கியே இருக்கிறது. இந்தியாவும், அமெரிக்காவும் இருநாடுகளிலுள்ள, மாநிலங்களுக்குள் பரஸ்பர வர்த்தகம் மற்றும் முதலீடுகளை வளர்ப்பதற்காக துரிதமான முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்திய– அமெரிக்க வர்த்தக கவுன்சில் இதையொட்டி மாநில பணிக்குழுவை அமைத்து, இருநாட்டு மாநிலங்களும் தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளை பரிமாறிக்கொள்ள நல்ல அறிவிப்புகளோடு வர இருக்கிறது. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருக்க வேண்டுமென்றால், தொழில் வளர்ச்சி அதிகமாக இருக்க வேண்டுமென்றால் நிச்சயமாக ஆந்திராவும், தெலுங்கானாவும் எடுக்கும் முயற்சிகளைபோல, மிகவும் தீவிரமான முயற்சிகளை எடுக்க வேண்டும். தொழில் வளர்ச்சி அதிகமாக பெருக வேண்டுமென்றால், அரசு முதலீடு மட்டும் நிச்சயம் போதாது. தனியார் முதலீடுகள் மிக அதிகமாக இருக்க வேண்டும். தனியார் நிறைய தொழில் தொடங்க வரவேண்டுமென்றால், எளிதில் அனைத்து அனுமதிகளும் ஆன்–லைன் மூலமாகவும், துரிதமாகவும், வெளிப்படையாகவும், ஊழல் இன்றியும் கிடைக்க வேண்டும். எளிதில் தொழில் தொடங்குவதற்கான ஒரு நல்ல சூழ்நிலை வகுக்கப்படவேண்டும். வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். வெளிநாட்டு தொழில் முனைவோர்கள் குழுக்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து இங்கு தொழில்தொடங்க உகந்த சூழ்நிலை இருப்பதை காட்ட வேண்டும். தொழில் வளர்ச்சி இருந்தால்தான் தமிழ்நாடு வளரும்.

Next Story