சிறுவணிகர்களுக்கு பெரும்பாதிப்பு


சிறுவணிகர்களுக்கு பெரும்பாதிப்பு
x
தினத்தந்தி 28 Sep 2017 9:30 PM GMT (Updated: 2017-09-28T18:33:44+05:30)

இன்று உலக இதயநாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதயத்தை காப்பதற்கு, இதயநோய் வராமல் தடுப்பதற்கு மிகமுக்கியமான காரணங்களாக கூறப்படுவது, புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பதுதான்.

ன்று உலக இதயநாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதயத்தை காப்பதற்கு, இதயநோய் வராமல் தடுப்பதற்கு மிகமுக்கியமான காரணங்களாக கூறப்படுவது, புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பதுதான். இதுபோல, புற்றுநோய் வருவதற்கும் முக்கிய காரணம் புகையிலைப் பொருட்கள் பயன்பாடுதான் என்பது உலகளவில் மருத்துவ நிபுணர்களால் நிரூபணம் ஆகியுள்ள ஒன்றாகும். கடந்த சிலமாதங்களுக்கு முன்பு ‘லான்செட்’ என்ற மருத்துவ இதழில், உலகளாவிய அளவில் இதயநோய் தாக்கத்தைப்பற்றி ஒரு ஆய்வு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதில், உலகம் முழுவதில் 10 பேர் மரணமடைந்தால், அதில் ஒரு மரணம் புகைப்பழக்கத்தால் ஏற்படுகிறது. இந்த சாவுகளில் 50 சதவீத சாவுகள் சீனா, இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில்தான் ஏற்படுகிறது என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால், இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியா இருக்கிறது. இந்த 10 நாடுகளில்தான் உலகில் புகைப்பிடிப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்குபேர் இருக்கிறார்கள். புகைப்பழக்கத்தை ஒழிக்க எத்தனையோ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், பொதுஇடங்களில் புகைப்பிடிக்கத் தடை இருக்கிறது. ஆனால், இந்த தடை ஏட்டளவில்தான் இருக்கிறதே தவிர, நடைமுறையில் இல்லை என்பது எல்லா இடங்களிலும் தெரிகிறது. இதுபோல, பான்மசாலா, குட்கா விற்க தமிழ்நாட்டில் தடை இருக்கிறது. ஆனால், கடைகளில் சாக்லேட் எப்படி தாராளமாக கிடைக்கிறதோ, அதுபோல பான்மசாலாவும் கிடைக்கிறது. ஆக, புகைப்பிடிக்கும் பழக்கத்தை போக்க இந்த நடவடிக்கைகள் போதாது என்பது யதார்த்தமான உண்மையாகிவிட்டது. இந்தநிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வேறொரு திட்டத்தை வகுத்துள்ளது. இதன்படி, சிகரெட், பீடி போன்ற புகையிலைப் பொருட்களை விற்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து முறையான அனுமதியை பெறவேண்டும். மேலும், இவ்வாறு புகையிலைப் பொருட்கள் விற்க அனுமதிபெறும் கடைகளில் வேறு எந்த பொருட்களையும் குறிப்பாக பிஸ்கெட், மிட்டாய், சிப்ஸ் போன்ற பொருட்களை விற்க அனுமதிக்கக்கூடாது.

ஏனெனில், புகைப்பழக்கம் இல்லாதவர்கள் மற்றும் குழந்தைகள் வேறு பொருட்களை வாங்க வரும்போது, அவர்களது கவனத்தை ஈர்க்கும் வகையில் புகையிலை பொருட்கள் அங்கு இருக்கத்தேவையில்லை என்பது அமைச்சகத்தின் கருத்தாகும். எப்படி மது விற்பனைக்கு லைசென்சு வாங்கிக் கொண்டுதான் மது விற்பனை செய்ய முடியுமோ, அதுபோல இந்த புகையிலை விற்பனைக்கும் லைசென்சு கொடுத்தே விற்க அனுமதிக்கலாம் என்பது மத்திய அரசாங்கத்தின் முடிவாகும். லைசென்சு வாங்கிக்கொண்டுதான் புகையிலை பொருட்களை விற்கவேண்டும் என்பது வரவேற்புக்குரியதுதான். அதேநேரத்தில் சிகரெட், பீடி போன்ற புகையிலை பொருட்களை விற்கும் கடைகளில் மற்ற பொருட்களை விற்க தடைவிதித்தால் நிச்சயமாக பெட்டிக்கடை போன்ற சிறிய கடைகளை வைத்திருக்கும் சிறுவியாபாரிகளை பெருமளவில் பாதிக்கும். வியாபாரம் தொடங்குபவர்கள் பெரும்பாலும் இதுபோல சிறிய அளவில்தான் கடைகளை தொடங்குவார்கள். அங்கு விற்கப்படும் சாக்லெட், மிட்டாய், கடலைமிட்டாய், சிப்ஸ், குளிர்பானங்கள் போன்றவற்றின் விற்பனையில்தான் அவர்களது வியாபாரமே ஓடும். தமிழ்நாட்டில் மட்டும் லட்சக்கணக்கில் இத்தகைய வியாபாரங்களை மேற்கொள்ளும் சிறிய கடைகள் இருக்கின்றன. எனவே, மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலுக்கு தமிழக அரசு பதில் அளிக்கும்போது, புகையிலை பொருட்கள் விற்கப்படும் சிறிய கடைகளில் மற்றபொருட்களை விற்கக்கூடாது என்ற தடையை அமல்படுத்தக்கூடாது என்ற கடுமையான அழுத்தத்தை பதிவு செய்யவேண்டும். மத்திய அரசாங்கமும் உடனடியாக சிறுவியாபாரிகளை பாதிக்கும் இந்தத்திட்டத்தை கைவிடவேண்டும். இதற்குபதிலாக, பொதுஇடங்களில் புகைப்பிடிக்க தடை, பான்மசாலா, குட்கா விற்கத்தடை, மைனர் குழந்தைகளுக்கு புகையிலைப்பொருட்கள் விற்பது தடைபோன்ற சட்டங்களையெல்லாம் மிகத்தீவிரமாக செயல்படுத்தவேண்டிய முயற்சிகளை இந்த உலக இதயநாளில் அரசாங்கங்கள் எடுக்க வேண்டும்.

Next Story