விவசாயிகள் கேட்பது ‘காவிரி மேலாண்மை வாரியம்’


விவசாயிகள் கேட்பது ‘காவிரி மேலாண்மை  வாரியம்’
x
தினத்தந்தி 1 Oct 2017 9:30 PM GMT (Updated: 2017-10-01T17:45:35+05:30)

தமிழ்நாட்டில் 13 மாவட்ட மக்கள் காவிரி ஆற்றில் ஓடும் தண்ணீரை நம்பியே வாழ்கிறார்கள். இந்த மாவட்டங்கள் ‘‘டெல்டா மாவட்டங்கள்’’ என்று அழைக்கப்படுகின்றன.

மிழ்நாட்டில் 13 மாவட்ட மக்கள் காவிரி ஆற்றில் ஓடும் தண்ணீரை நம்பியே வாழ்கிறார்கள். இந்த மாவட்டங்கள் ‘‘டெல்டா மாவட்டங்கள்’’ என்று அழைக்கப்படுகின்றன. காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடவேண்டும் என்றால், கர்நாடகா மாநிலத்திலிருந்து திறந்துவிடப்படும் நீர் மேட்டூர் அணையில் சேமித்து வைக்கப்பட்டு, பின்பு திறந்தால்தான் முடியும். 1934–ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12–ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்படவேண்டும் என்பதுதான் நியதி. அப்போதுதான் விவசாயிகள் சம்பா பயிரை பயிரிடத் தொடங்க முடியும். ஆனால், இந்த ஆண்டோடு சேர்த்து இந்த 83 ஆண்டுகளில் 58 முறை காவிரியில் ஜூன் 12–ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. முதல்முறையாக 1934–ம் ஆண்டில் ஜூன் 12–ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் இல்லாததாலும், பருவமழை பொய்த்ததாலும், ஏற்கனவே குறுவை பயிரை காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள் இழந்து விட்டனர். ஜூன் மாதம் முதல் சம்பா பயிருக்காக தண்ணீர் திறந்து விடப்படுமா? என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த சீசனில், ஆரம்பத்தில் பெய்யவேண்டிய தென்மேற்கு பருவமழை பெய்யாவிட்டாலும், முடியும் தருவாயில் கர்நாடகா மாநிலத்தில் பெய்த நல்லமழையால் அங்குள்ள அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு, நேற்று முன்தினம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92 அடியாக இருந்தது. மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கு இன்று முதல் தண்ணீர் திறந்துவிட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருந்தார். இந்த தண்ணீர் கல்லணைக்கு வந்துசேர 4 நாட்கள் ஆகும். இவ்வளவு தாமதாக தண்ணீர் வருவதால் இந்த ஆண்டு பெரும்பாலும் நேரடி விதைப்பு மூலம் நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். சம்பா பயிரை பொறுத்தமட்டில், ஏறத்தாழ 12 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்படும்.

இவ்வளவு தாமதமாக தண்ணீர் திறந்துவிடப்படுவதால், வழக்கமாக ஜூலை கடைசி முதல் டிசம்பர் வரை பயிரிடப்படும் வழக்கமான காலஅளவு இந்த ஆண்டு மாறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து காவிரி தண்ணீர் திறந்துவிடப்படுவதில் ஒரு நிச்சயமற்றதன்மை இருப்பதால் இதற்கு ஒரு நிரந்தர தீர்வுகாண ‘காவிரி மேலாண்மை வாரியம்’ அமைக்கவேண்டும். ஆனால், அதற்குரிய ஒரு நம்பிக்கை ஒளி இப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், மத்திய அரசாங்கத்தை பார்த்து கேட்ட கேள்விகள் மூலம் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலஉரிமை பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் எஸ்.ரங்கநாதன் தெரிவித்துள்ளார். 2013–ம் ஆண்டு காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு, அதில் முக்கிய தீர்ப்பான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசாங்கம் தயங்குவதற்கான காரணம், கர்நாடகா மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபை தேர்தல்தான். சுப்ரீம் கோர்ட்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? என்று மத்திய அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவித்தபிறகும், தேர்தல் அரசியல் குறுக்கிடுவதால், மத்திய அரசாங்கம் தயங்குகிறது. இந்தநிலையில், சுப்ரீம் கோர்ட்டாவது காவிரி நதிநீரை பங்கிடுவதற்கும், நிர்வகிப்பதற்கும் ஒரு ஆணையத்தை அமைக்கவேண்டும் என்று தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எந்தநேரத்திலும் வெளியாகலாம் என்றநிலையில், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, இப்போதுள்ள நிலையில் தமிழக விவசாயிகளின் ஒரேநம்பிக்கை சுப்ரீம் கோர்ட்டுதான். நல்ல தீர்ப்புவரும் அந்த நல்ல நாளைத்தான் விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அரசியல் பார்க்காமல் மத்திய அரசாங்கமே முன்வந்து அதுவரை காத்திருக்காமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கலாமே!.

Next Story