உயர்ந்து வரும் சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை


உயர்ந்து வரும்  சமையல்  கியாஸ், பெட்ரோல்,  டீசல்  விலை
x
தினத்தந்தி 4 Oct 2017 9:30 PM GMT (Updated: 2017-10-04T23:31:52+05:30)

நாட்டில் விலைவாசி அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அக்டோபர் முதல் மார்ச் வரை பணவீக்கம் 4.2 சதவீதத்தில் இருந்து 4.6 சதவீதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

நாட்டில் விலைவாசி அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அக்டோபர் முதல் மார்ச் வரை பணவீக்கம் 4.2 சதவீதத்தில் இருந்து 4.6 சதவீதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. பெருகிவரும் விலைவாசி உயர்வில் மாதாந்திர செலவை கட்டுப்படுத்த மக்கள் ஆடம்பர செலவுகளை தவிர்த்துவிடலாம். ஆனால், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை நிச்சயமாக கைவிடமுடியாது. அந்தவகையில்தான் சமையல் கியாஸ் வாங்கும் செலவையும், பெட்ரோல், டீசலுக்காகும் செலவையும் எந்த குடும்பத்திலும் நிச்சயமாக நிறுத்த முடியாது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே இந்த மூன்று பொருட்களின் விலை உயர்வும் விண்ணைத்தொடும் அளவில் உயர்ந்துகொண்டே போகிறது. சமையல் கியாசை பொறுத்தமட்டில், மாதந்தோறும் விலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசலை பொறுத்தமட்டில், கடந்த ஜூன் மாதம் 16–ந் தேதி முதல் உலக கச்சா எண்ணெய் விலையின் ஏற்றம், இறக்கத்திற்கேற்ப பெட்ரோல் நிறுவனங்களே ஒருசில காசுகள் விலையை உயர்த்திக்கொண்டும், ஒருசில காசுகள் விலையை குறைத்துக்கொண்டும் இருக்கின்றன. கடந்த 2015–ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பெங்களூருவில் ஒரு கூட்டத்தில் பிரதமர் பேசும்போது, ‘வசதிபடைத்தவர்கள் தங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை வேண்டாம்’ என்று தாங்களே முன்வந்து ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். வசதி படைத்தவர்கள் வேண்டாமென்று கூறும்போது மானியத்தொகை ஏழை மக்களின் சமையலறையில் அடுப்பெரிய உதவும் என்றும் கூறினார்.

ஏராளமானவர்கள் இந்த திட்டத்தின் அடிப்படையில், தாங்களாகவே முன்வந்து மானியம் வேண்டாம் என்று கூறிவிட்டனர். இதுமட்டுமல்லாமல், ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்குமேல் உள்ளவர்களுக்கும் மானியம் நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால், இவ்வாறு மானியம் வேண்டாம் என்று கூறியவர்களுக்கு போனஸ் அளிப்பதற்குப் பதிலாக அவர்களை கஷ்டப்படுத்தும் அளவில் சமையல் கியாஸ் விலை மிகக்கடுமையாக உயர்ந்துகொண்டு இருக்கிறது. அந்தவகையில், கடந்த ஜூன் மாதம் 1–ந் தேதி மானியத்தோடு கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.434.15 ஆக இருந்தது. தற்போது ரூ.479.11 ஆக உயர்ந்துவிட்டது. மானியம் வேண்டாம் என்று சொன்னவர்களுக்கு தற்போது சிலிண்டர் விலை அபரிமிதமாக உயர்த்தப்பட்டு, இப்போதைய விலை ரூ.656.50 ஆக இருக்கிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.121.50 ஆக உயர்ந்துள்ளது. வர்த்தக வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் சிலிண்டரின் விலை ரூ.1,244.50 ஆக உள்ளது.

பெட்ரோல் விலையை எடுத்துக்கொண்டால், ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூ.20.50–ஐ சுற்றி சுற்றித்தான் இருக்கிறது. சுத்திகரிப்பு செலவு, எண்ணெய் நிறுவனங்கள் லாபம், போக்குவரத்து செலவு, ‘பங்க்’ லாபம் ஆகியவற்றை சேர்த்தாலும் ஏறத்தாழ ரூ.33 தான் ஆகிறது. இதற்குமேல் மத்திய அரசாங்கத்தின் கலால்வரி, மாநில அரசின் 34 சதவீத மதிப்பு கூட்டுவரியை சேர்த்துத்தான் ரூ.70–க்குமேல் ஆகிவிடுகிறது. இப்போது மத்திய அரசாங்கம் பெட்ரோல், டீசலுக்கு கலால்வரியை லிட்டருக்கு ரூ.2 குறைத்துள்ளது. இது போதாது. இதை மேலும் குறைக்கவேண்டும். இதுபோல, தமிழக அரசும் மதிப்பு கூட்டுவரியை பெட்ரோலுக்கு 34 சதவீதத்தில் இருந்தும், டீசலுக்கு 25 சதவீதத்தில் இருந்தும், ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இருந்ததுபோல முறையே 27 சதவீதமாகவும், 21.4 சதவீதமாகவும் குறைக்கவேண்டும். மொத்தத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை சற்றுக்குறைத்தால், பொதுமக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரிய தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கமுடியும். ஆனால், மக்கள் எல்லோருடைய மனதிலும் ஒரு கோரிக்கை இருக்கிறது. பெட்ரோல், டீசல் ஆடம்பர பொருள் அல்ல. அத்தியாவசிய பொருள் என்ற வகையில் சமையல் கியாஸ் போல, சரக்கு சேவைவரி வளையத்துக்குள் கொண்டுவந்து அதிகபட்சம் 28 சதவீதம் வரிவிதிக்க முடியுமா? என்பதையும் பரிசீலிக்க வேண்டும். அப்படியானால் பெட்ரோல் விலை ஏறக்குறைய ரூ.42–க்கு வந்து விடும்.

Next Story