சினிமா டிக்கெட்டுகள் மீது வரிகள்


சினிமா  டிக்கெட்டுகள்  மீது  வரிகள்
x
தினத்தந்தி 9 Oct 2017 9:30 PM GMT (Updated: 9 Oct 2017 1:34 PM GMT)

தமிழக மக்களுக்கு சினிமா என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. ஒருகாலத்தில் 2 ஆயிரம் தியேட்டர்களுக்குமேல் தமிழ்நாட்டில் இருந்தன.

மிழக மக்களுக்கு சினிமா என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. ஒருகாலத்தில் 2 ஆயிரம் தியேட்டர்களுக்குமேல் தமிழ்நாட்டில் இருந்தன. கிராமப்புறங்களில் டூரிங் தியேட்டர்கள் என்று கூறப்படும் கொட்டகை தியேட்டர்களும், நகர்ப்புறங்களில் எழில்மிகு கட்டிடங்களாலான தியேட்டர்களும் இருந்து வந்தன. கலை உலகில் மக்களின் மனதை கொள்ளைக்கொண்ட எம்.ஜி.ஆர்.தான் பின்நாட்களில் முதல்–அமைச்சர் ஆனார். இதுபோல, ஜெயலலிதாவுக்கும் திரைப்பட உலகம்தான் முதலில் மக்களிடம் செல்வாக்கை வாங்கிக்கொடுத்தது. பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரும் திரை உலகோடு தொடர்பு கொண்டவர்கள்தான். டெலிவி‌ஷன்களில் 24 மணி நேரமும் சினிமா ஒளிபரப்பப்படுவதாலும், திருட்டு வி.சி.டி.களின் தாக்கத்தாலும், சினிமா தியேட்டர்களின் எண்ணிக்கை குறைந்து, தற்போது 1,169 தியேட்டர்கள்தான் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றன. சினிமா படங்களுக்கு ஏற்கனவே சரக்கு சேவைவரி இருக்கிறது. ரூ.100–க்கு குறைந்த டிக்கெட்டுக்கு 18 சதவீதமும், ரூ.100–க்கு மேல் உள்ள டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதமும் சரக்கு சேவைவரி விதிக்கப்படுகிறது.

இந்த சரக்கு சேவைவரிக்கு மேலாக தமிழக அரசும், புதிய தமிழ் திரைப்படங்களுக்கு 10 சதவீதமும், பிறமொழி படங்களுக்கு 20 சதவீதமும், பழைய தமிழ்படங்களுக்கு 7 சதவீதமும், பழைய பிறமொழி படங்களுக்கு 14 சதவீதமும் கேளிக்கை வரி விதித்திருக்கிறது. இதனால் திரைப்படத்துறையினர் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அவர்களின் குறையை ஓரளவு போக்கும்விதத்தில், இப்போது இருக்கும் சினிமா டிக்கெட் கட்டணத்தில் 25 சதவீதம் உயர்த்திக்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு திரைப்பட உலகில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள சரக்கு சேவைவரி, இப்போது உயர்த்தப்பட்டுள்ள டிக்கெட் கட்டண உயர்வு, இதற்கு மேலாக கேளிக்கை வரி எல்லாமே சேர்ந்து ரசிகர்களின் தலையில்தான் வந்து விழும்.

தமிழ்நாட்டில் சினிமா என்பது ஏதோ ஒரு சாதாரண கேளிக்கையாக மட்டும் கருதப்படுவதில்லை. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாகவும், சமுதாய மாற்றங்களுக்கு வித்திடுவதாகவும் அமைந்துள்ளது. தமிழக மக்களுக்கு அதுவும் நாளெல்லாம் உழைத்து களைக்கும் மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு என்றால் அது சினிமாதான். இந்தியா முழுவதிலும் ஒரே தேசம், ஒரே வரி என்று சொல்லிக்கொண்டுதான் சரக்கு சேவைவரியை அறிமுகப்படுத்தினார்கள். அப்படியிருக்க, அதற்கு மேலும் சுமையை திணிக்கும் வகையில், இப்போது மேலும் ஒரு வரியாக கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. பிறமாநிலங்கள் எங்கும் இத்தகைய கேளிக்கை வரி இல்லை. இதுமட்டுமல்லாமல், தமிழ்படங்களுக்கும் வரிவிதித்து, பிறமொழி படங்களுக்கும் வரி விதித்தால், மற்ற மாநிலங்களில் தமிழ்படம் திரையிடும்போது அவர்களுக்கும் இந்த உணர்வு வந்துவிடக்கூடாது. மேலும், சினிமா தொழில் என்பது லட்சக்கணக்கான மக்களுக்கு பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பும் அளிக்கும் பெரிய தொழிலாகும். படப்பிடிப்புக்கான அடிமட்ட தொழிலாளர்கள் முதல் சினிமா தியேட்டரில் பணிபுரியும் தொழிலாளரையும் சேர்த்து பலதரப்பில் ஏராளமான வேலைவாய்ப்புகளை வாரிவழங்குவது கனவு தொழிற்சாலை என்று அழைக்கப்படும் சினிமா தொழில்தான். அந்த வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படக்கூடாது. இதுமட்டுமல்லாமல், இப்போது திரைப்பட தயாரிப்புக்கும், சினிமா தியேட்டர் நடத்துவதற்கும் பெரும் செலவாகிறது. எந்த ஒரு பொருளையும் உற்பத்தி செய்பவருக்கே அதன் விலையை நிர்ணயம் செய்வதற்கு உரிமை இருப்பது போல, சினிமா படங்களை பொறுத்தமட்டில், உற்பத்தி செலவுக்கேற்ப கட்டணங்களை நிர்ணயிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கலாம். பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள தரமான திரைப்படங்களுக்கு அந்த செலவுக்கு ஏற்ப டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்க உரிமை வழங்கலாம். மார்க்கெட் நிலவரத்திற்கு ஏற்ப டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமையை அவர்களுக்கு வழங்கினால், நிச்சயமாக இதுபோன்ற வரிகளை விதிப்பதினால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

Next Story