வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்


வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்
x
தினத்தந்தி 13 Oct 2017 9:30 PM GMT (Updated: 13 Oct 2017 1:39 PM GMT)

நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசிய பிறகு, நிருபர்களுக்கு பேட்டியளித்தார்

நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியபிறகு, நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, ‘மத்திய அரசின் மருத்துவக்குழுவை தமிழகத்திற்கு அனுப்பி என்னென்ன தேவை? என்பதை கண்டறிய உத்தரவு பிறப்பித்திருப்பதாக பிரதமர் என்னிடம் கூறியிருக்கிறார்’ என்றார். ஆனால், துணை முதல்– அமைச்சர் சந்திக்கும் முன்பே, மத்தியக்குழுவை சென்னைக்கு அனுப்ப பிரதமர் உத்தரவிட்டிருக்கிறார்.

5 பேர் கொண்ட உயர்மட்ட மருத்துவக்குழுவில் மருத்துவ நிபுணர்கள், பூச்சியியல் வல்லுனர்கள் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் சிகிச்சைக்குரிய நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். நேற்று காலையில் அவர்கள் தமிழக அதிகாரிகளோடு ஆலோசனை நடத்திவிட்டு, மருத்துவ மனைகளுக்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து சென்னையிலும், மேலும் பல இடங்களுக்கும் செல் கிறார்கள். டெங்கு வேகமாக பரவியுள்ள நிலையில், இதை ஒழிக்கும் பணிகளுக்கு உதவ மத்திய அரசாங்கம் ரூ.256 கோடி நிதி உதவி தரவேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதை மத்திய அரசாங்கம் வழங்கவேண்டும்.

டெங்கு காய்ச்சல் என்பது ஏடிஸ் எஜிப்டி என்ற கொசு வகைகளில் பெண் கொசுவால் ஏற்படுகிறது. இந்த கொசு உற்பத்தி சாக்கடை தண்ணீரிலோ அல்லது கழிவு நீரிலோ உற்பத்தியாவதில்லை. சுத்தமான தண்ணீர் எங்கு இருக்கிறதோ, அங்குதான் முட்டையிட்டு உற்பத்தியை பெருக்குகிறது. இந்த கொசு ஒருவரை கடித்தால் முதல் 5 நாட்களுக்குள் அவர் உடலில் டெங்கு நோயை ஏற்படுத்தும் தொற்றுநோய் கிருமி பரவுகிறது. அவருடைய உடலை ஏதாவது கொசுகடித்து மீண்டும் மற்றொருவரை கடிக்கும்போது இந்த நோய் அவருக்கும் பரவிவிடுகிறது. இப்படி கொசு கடிப்பதால்தான் இந்த டெங்கு காய்ச்சல் பரவுகிறதே தவிர, ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் நோய் அல்ல. தமிழ்நாட்டில் இந்த நோய்க்கு நிலவேம்பு கசாயத்தை மட்டுமே இப்போது தருகிறார்களே தவிர, இதற்கென்று பிரத்யேகமாக ஒரு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை. எல்லா நோய்களுக்கும் தடுப்பூசி இருக்கிறது. டெங்கு நோய்க்கு இப்போதுதான் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் இது பரிசோதனை அடிப்படையில்தான் இருக்கிறது. டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இதை பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி யுள்ளது. உடனடியாக சென்னை உள்பட தமிழ்நாட்டில் டெங்கு பாதித்த இடங்களில் இந்த தடுப்பூசியை பயன்படுத்த லாமா? என்பது குறித்து அரசு பரிசீலிக்கவேண்டும்.

இந்தநிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறையால் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத்தான் முடியுமேதவிர, அதை வராமல் தடுக்க வேண்டும் என்றால், உள்ளாட்சி அமைப்புகளின் சீரிய பணிகளில்தான் இருக்கிறது. இதில் மக்களின் பங்களிப்பு தான் பெருமளவில் இருக்கவேண்டும். கழிவுநீர் தேங்கி யிருந்தால் இதை நான் எப்படி அகற்ற முடியும்? என்று பொதுமக்கள் சொல்லலாம். ஆனால், சுத்தமான நீர் தேங்கி இருக்கும் இடத்தில்தான் இந்த ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் முட்டையிடுகின்றன. எனவே, வீட்டின் சுற்றுப் புறங்களில் சுத்தமான தண்ணீர் தேங்காமல் இருப்பதை பார்த்துக்கொள்வது பொதுமக்கள் கையில்தான் இருக்கிறது. தோட்டங்களில் செடிகளுக்கு தண்ணீர்விடும் போது தேங்காமல் பார்த்துக் கொள்வது, பாத்திரங்களை திறந்து வைத்துள்ள நிலையில் தண்ணீர் நிரப்பி வைத்தி ருப்பது, தண்ணீர் தொட்டிகளை திறந்துவைப்பது போன்ற வற்றை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும். ஏபிடமிக் மாநிலம், அதாவது டெங்கு வேகமாக பரவும் மாநிலம் என்று அறிவித்தால் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல நிபுணர்கள் வந்து இந்த நோய்பற்றி ஆராய்ந்து சிகிச்சை அளிக்கவும், பல்வேறு உதவிகளை வழங்கவும் வழி இருக்கிறது. உடனடியாக டெங்கு நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவிட முடியுமா? அல்லது இவ்வாறு டெங்கு நோய் பரவும் மாநிலம் என்று அறிவித்துவிடலாமா? என்பதை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

Next Story