விலை உயர்ந்த தீபாவளி திருநாள்!


விலை  உயர்ந்த  தீபாவளி  திருநாள்!
x
தினத்தந்தி 15 Oct 2017 9:30 PM GMT (Updated: 2017-10-15T18:03:00+05:30)

நாளை மறுநாள் இல்லங்களிலும், மக்கள் உள்ளங்களிலும், குடும்பங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடும் ‘தீபாவளி திருநாள்’ கொண்டாடப்படுகிறது.

நாளை மறுநாள் இல்லங்களிலும், மக்கள் உள்ளங்களிலும், குடும்பங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடும் ‘தீபாவளி திருநாள்’ கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதம் அமாவாசை நாள் நெருங்கும்போது தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. ஆனால், அன்று இருள் இருக்காது, ‘எங்கும் தீப ஒளி விளக்குகள் ஏற்றப்பட்டு, வண்ண வண்ண மத்தாப்புகள் கொளுத்தப்பட்டு, பட்டாசுகள் வெடிக்கப்பட்டு ஒளிமிகுந்த இரவாக இருக்கும்’. இந்துக்களை பொறுத்தமட்டில், கொடிய நரகாசுரனை, கிருஷ்ணனும், சத்தியபாமாவும் சேர்ந்து வதம்செய்து கொண்டாடிய நன்னாளாக தீபாவளி திருநாள் விளங்குகிறது. அதாவது ஒவ்வொரு இல்லத்திலும், தனிமனித வாழ்க்கையிலும் தீமைகள் அகன்று, நன்மைகள் பொங்கிவழியும் நாள்தான் தீபாவளி திருநாள். ஆக, மகிழ்ச்சியின் எல்லைக்கே ஒவ்வொருவரையும் கொண்டுசெல்லும் நாள் இந்த நன்னாள்.

அதிகாலையில் பொழுது புலரும்முன்பே, தலையில் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, புத்தாடை அணிந்து, இறைவனை வழிபட்டுவிட்டு, தித்திக்கும் பலகாரங்களை உண்டு, பட்டாசுகளை வெடித்து தங்கள் வீட்டில் உள்ள மகிழ்ச்சியை மற்றவர்களுக்கும் பங்கிடும்வகையில், அண்டை அயலார், நண்பர்கள், உறவினர்கள் வீட்டிற்கும் பலகாரங்களை கொண்டுபோய் கொடுத்து பரிமாறிக்கொள்ளும் நன்னாள் இது. எந்த ஊர்களில் இருந்தாலும், ஒட்டுமொத்த குடும்பமே ஒன்றாகக்கூடி குலவும் நாள் இது. இதுமட்டுமல்லாமல், தங்கள் விருப்பமான படங்கள் இந்த நாளில் ரிலீசாகி இருக்கும்போது, தியேட்டர்களுக்கு சினிமா பார்க்க ரசிகர்கள் அலை அலையாய் செல்வார்கள். ஆனால், இந்த ஆண்டு சரக்கு மற்றும் சேவைவரிக்கு பிறகு, தீபாவளி கொண்டாட்டத்தில் முக்கியமாக இருக்கும் அனைத்து செலவுகளும் உயர்ந்துவிட்டது. ஜவுளி கடைக்குச்சென்றால் ஆயிரம் ரூபாய்க்கு குறைவான துணிக்கு 5 சதவீதமும், அதற்குமேல் உள்ள துணிக்கு 12 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மதிப்புக்கூட்டு வரியாக 5 சதவீதம்தான் விதிக்கப்பட்டது. கடைகளில் போய் இனிப்பு வாங்கப்போனால் இனிப்பு வகைகளுக்கு 2 சதவீதமும், மற்ற பலகாரங்களுக்கு 12 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. ஆக, அதிக விலை கொடுத்து துணி வாங்கிவிட்டோம். இனிப்புகள் வாங்கிவிட்டோம். இனி பட்டாசு வாங்குவோம் என்று போனால், 28 சதவீதம் பட்டாசுக்கு வரி விதிக்கப்படுகிறது. அதிக விலை கொடுத்தாலும் பரவாயில்லை. நல்ல புத்தாடைகள் அணிந்துவிட்டோம். தித்திக்கும் பலகாரங்களை சாப்பிட்டுவிட்டோம். பட்டாசுகளை போட்டு மகிழ்ந்துவிட்டோம். இனி, சினிமாவுக்குச் செல்வோம் என்று நினைத்தால் அங்கே சினிமா டிக்கெட்டுகளின் விலை அபரிதமாக உயர்ந்துவிட்டது.

மல்டிபிளக்ஸ் தியேட்டரில் அடிப்படை கட்டணம் ரூ.150 என்று வைத்துக்கொண்டால், 28 சதவீத சரக்கு மற்றும் சேவைவரியாக ரூ.42, 8 சதவீத கேளிக்கை வரியாக ரூ.12. ஆக மொத்தம் ரூ.204 பணம் கொடுத்துதான் ஒரு டிக்கெட் வாங்க வேண்டியநிலை. சரி குறைந்தபட்சம் ரூ.50 கட்டணத்திற்கு போகலாம் என்றால் அதிலும் சரக்கு சேவைவரி, கேளிக்கை வரி சேர்த்து ரூ.68 ஆகிறது. இதுபோல, ஏ.சி. தியேட்டரில் 100 ரூபாய் டிக்கெட் 136 ரூபாயாகவும், 40 ரூபாய் டிக்கெட் 54.40 ரூபாயாகவும் கொடுக்க வேண்டியதிருக்கிறது. எதற்கு இவ்வளவு செலவு ஏ.சி. வசதி இல்லாத தியேட்டருக்குச் செல்லலாம் என்றால், அங்கும் வரிகளுக்கு உட்பட்டு 80 ரூபாய் டிக்கெட் 108.80 ரூபாயாகவும், 30 ரூபாய் டிக்கெட் 40.80 ரூபாயாகவும் இருக்கிறது. ஆக, இந்த தீபாவளி மகிழ்ச்சி திருநாளாக இருந்தாலும், மக்களின் பட்ஜெட்டை இறுக்கிப்பிடிக்கும் செலவுமிகுந்த தீபாவளியாக இருக்கிறது என்பதுதான் பொதுமக்களின் கருத்து. ஆனால், செலவு ஒருபக்கம் இருக்கட்டும், இந்த நாளில் அடையபோகும் மகிழ்ச்சிக்கு எவ்வளவு செலவானாலும் கொடுப்போம் என்று மக்கள் நினைக்கிறார்கள். அரசாங்கம் தான் இதை கருத்தில்கொண்டு, அடுத்த தீபாவளியாவது சற்று செலவு குறைவான தீபாவளியாக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பமாகும்.

Next Story