மீனவர்களுக்கு மாற்று வருமானம்


மீனவர்களுக்கு மாற்று வருமானம்
x
தினத்தந்தி 19 Oct 2017 9:30 PM GMT (Updated: 19 Oct 2017 2:04 PM GMT)

கடல்வளம் மிகுந்த மாநிலம் தமிழ்நாடு. 1,076 கி.மீ. நீளமுள்ள கடற்கரை தமிழ்நாட்டில் இருக்கிறது. 13 கடலோர மாவட்டங்களில் உள்ள 10 லட்சம் மீனவர்களுக்கு இந்த கடல்பகுதிதான் வாழ்வாதாரமாக விளங்குகிறது.

டல்வளம் மிகுந்த மாநிலம் தமிழ்நாடு. 1,076 கி.மீ. நீளமுள்ள கடற்கரை தமிழ்நாட்டில் இருக்கிறது. 13 கடலோர மாவட்டங்களில் உள்ள 10 லட்சம் மீனவர்களுக்கு இந்த கடல்பகுதிதான் வாழ்வாதாரமாக விளங்குகிறது. 2009–ம் ஆண்டுவரை கடலில் எந்தவித இன்னல்களும் இல்லாமல் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் வாழ்க்கையில், அதற்குப்பிறகு நித்தம் நித்தம் மீன்பிடிக்க செல்லும்போது திரும்பவந்தால்தான் நிச்சயம் என்றநிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, பாக்ஜலசந்தியில் மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்களை, தங்கள் நாட்டு எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததாகவும், இழுவலைகளோடு தங்கள் எல்லைக்குள் புகுந்ததோடு மட்டுமல்லாமல், இலங்கை மீனவர்களின் வலைகளை அறுத்துக்கொண்டு போய்விடுவதாகவும், மீன்வளத்தை எடுத்துச்சென்றுவிடுவதாகவும் இலங்கை அரசு குற்றம்சாட்டி, மீனவர்களையும் கைது செய்து, அவர்களது படகுகளையும் கைப்பற்றி வருகிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும்வகையில், கடந்த 5.11.2016 அன்று டெல்லியில் நடந்த இருநாட்டு வெளியுறவுத்துறை, வேளாண்மைத்துறை கூட்டத்தில் கூட்டுப்பணிக்குழுவை அமைத்து, இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வுகாண முடிவெடுக்கப்பட்டது. இருநாட்டு மீன்வளத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட இந்தக்கூட்டம் 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அந்தவகையில், கடந்தவாரம் சனிக்கிழமை இலங்கையில் இந்த கூட்டுப்பணிக்குழு கூட்டம் நடந்தது. இந்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதாமோகன்சிங்கும், இலங்கை மந்திரி மகிந்தா அமரவீராவும் இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தமிழக மீனவர்கள் இழுவலைகளை பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது. அவர்களின் படகுகளை ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக அதாவது, டியூனா மீன்கள் பிடிக்கும்வகையிலான படகுகளாக மாற்றி நீலப்புரட்சி திட்டத்தின்கீழ் அவர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும், இதற்காக மூக்கையூர், பூம்புகார் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படுவதாகவும் இந்திய தரப்பில் தெரிவித்தனர். இதுமட்டுமல்லாமல், தமிழக மீனவர்களுக்கு கடலில் கடல்பாசி வளர்ப்பது, கூண்டுகள் அமைத்து மீன்கள் வளர்ப்பது போன்ற திட்டங்களை செயல்படுத்த தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்தனர். கடல்பாசி வளர்ப்பது நிச்சயமாக நல்ல லாபம் ஈட்டுவதாக இருந்தாலும், கடல்பாசி மூலம் பல்வேறு ரசாயன பொருட்களை தயாரிக்கமுடியும். கடலில் அலை இல்லாத இடங்களில் மூங்கில் மிதவைகளை கட்டி, அதன்மீது ஒரு வலைபோல மிகநுண்ணிய வலைகளை கட்டுவார்கள். கடலில் மிதந்து கொண்டே செல்லாமல், அந்த இடத்திலேயே இருக்கும்வகையில் அமைப்புகள் ஏற்படுத்தப்படும். 50 கிராம் கடல்பாசியை ஒரு நூலில் வைத்து கட்டினால் 45 நாளுக்குப்பிறகு அது 1½ கிலோவாக வளர்ந்துவிடும். இதை கடற்கரைக்கு கொண்டுவந்து பிரித்து எடுத்துவிட்டு, மீண்டும் அதிலிருந்து 50 கிராம் கடல்பாசியை எடுத்து அந்தமிதவையில் கட்டுவதுதான் அந்த திட்டமாகும். மீனவர்கள் மத்தியில் இந்தத்திட்டத்துக்கு வரவேற்பு இருந்தாலும், சில கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் இதை செயல்படுத்த எளிதாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

இதுபற்றி தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் கூறும்போது, ‘இந்த தொழிலை முறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து, இந்த தொழிலை செய்ய முன்வரும் மீனவர்களுக்கு மானிய உதவியும், கடன் உதவியும் அளிக்கவேண்டும்’ என்று கருத்து தெரிவித்தார். இதுபோல, கடலில் இரும்புக் கூண்டுகளை அமைத்து, மீன்குஞ்சுகளை வளர்த்துப்பிடிக்கும் திட்டம் அறிமுகத்திட்டமாகத்தான் இருக்கிறது. இந்தத்திட்டத்தையும் மிகப்பெரிய அளவில் செய்து மீனவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்வகையில் செய்யவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. கடல்பாசி திட்டம் என்றாலும் சரி, கடலில் கூண்டு அமைத்து மீன்வளர்க்கும் திட்டம் என்றாலும் சரி, இவை மீனவர்களுக்கு ஆபத்து இல்லாத திட்டம். இலங்கை கடல்பகுதிக்கு செல்லவேண்டியது இல்லாத திட்டம். எனவே, இந்தத்திட்டங்களை மத்திய அரசாங்கம் பிரபலப்படுத்தி, இதுகுறித்து இன்னும் ஆய்வுகளை மேற்கொண்டு இதை செய்ய முன்வரும் மீனவர்களுக்கு பயிற்சியும், நிதி உதவியும் அளிக்கவேண்டும்.

Next Story