எல்லைப்புறத்தில் தீபாவளி கொண்டாடிய பிரதமர்


எல்லைப்புறத்தில்  தீபாவளி  கொண்டாடிய  பிரதமர்
x
தினத்தந்தி 20 Oct 2017 9:30 PM GMT (Updated: 2017-10-20T17:36:48+05:30)

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ண பகவானும், சத்தியபாமாவும் சேர்ந்து நரகா சுரனை கொன்றதினமாக இந்துக்கள் கொண்டாடினார்கள்.

டந்த 2 நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ண பகவானும், சத்தியபாமாவும் சேர்ந்து நரகா சுரனை கொன்றதினமாக இந்துக்கள் கொண்டாடினார்கள். இதுபோல, சமணர்கள் மகாவீரர் மோட்சத்தை அடைந்த தினமாகவும், பவுத்தர்கள் அசோகர் பவுத்த மதத்திற்கு மாறிய தினமாகவும், சீக்கியர்கள் தங்கள் 6–வது குருவான குரு ஹர் கோவிந்த் சிறையில் விடுவிக்கப்பட்ட நாளாகவும் வெவ்வேறு பெயர்களில் மகிழ்ச்சியோடு கொண்டாடி னார்கள். தீபாவளி என்பது தீப ஒளி. அதாவது மகிழ்ச்சியின் பிரதிபலிப்பு என்றவகையில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் எல்லோரும் தங்கள் பெற்றோர்களை தேடிச்சென்று அல்லது பெற்றோர்கள் குழந்தைகளை தேடிச்சென்று ஒட்டுமொத்த குடும்பமும் உறவினர்களோடு ஒன்றாக சேர்ந்து கொண்டாடுவார்கள். எல்லோரும் குடும்பத்தோடு கொண்டாடும் நேரத்தில், எல்லைப்புறத்தில் நாட்டின் பாதுகாப்பிற்காக அடர்ந்தபனியிலும், மலைமுகடுகளிலும் கடமையே கண்ணாக இரவும், பகலும் கையில் துப்பாக்கியோடு நின்றுகொண்டிருக்கும் ராணுவ வீரர்கள் மட்டும் குடும்பத்தை விட்டுவிட்டு தனியே இருந்தனர். அவர்கள் கவலையை போக்கும்வகையில், பிரதமர் நரேந்திரமோடி, ‘‘என்னுடைய குடும்பம் நீங்கள்தான்’’ என்று சொல்லி திடீரென வடக்கு காஷ்மீரில் பந்திப்போரா மாவட்டத்தில் இருக்கும் குரேஸ் பகுதியில் உள்ள எல்லைப்பகுதிக்கு முன்னறிவிப்பு இல்லாமல் சென்றார். அதற்கு முந்தைய நாளில்தான் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி சுட்டதாலும், குண்டுவீசியதாலும், 2 வயது பெண் குழந்தை உள்பட 8 பொதுமக்கள் காயமடைந்ததால் எல்லைப்புற பகுதி முழுவதும் பதற்றமான நிலை நீடித்தது. அந்தநேரத்திலும் கூப்பிடும் தூரத்தில் பாகிஸ்தான் எல்லை இருந்த அந்தப்பகுதிக்கு ராணுவ உடையில் சென்ற பிரதமர் நரேந்திரமோடி அவர்களோடு அவர்களாக இருந்து ஒவ்வொருவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கூறி இனிப்புகளை வழங்கினார்.

பிரதமர் வந்தவுடன் அந்த ராணுவ வீரர்களின் உள்ளத்தில், எங்கள் குடும்பத்தினர் எங்களோடு இல்லை யென்றாலும், ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதியாக எங்கள் நாட்டு பிரதமரே எங்களோடு தீபாவளி கொண் டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற உணர்வில் திக்குமுக்காடி போய்விட்டனர். இந்தப்பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாகும். கடந்த 27 ஆண்டுகளாக ஏராளமான துப்பாக்கிச்சண்டைகள், தீவிரவாதிகள் ஊடுருவல் என்று எப்போதும் பதற்றமாக இருக்கும் பகுதி யாகும். அந்தப்பகுதியில் மிகவும் துணிச்சலாக பிரதமர் சென்றதோடு மட்டுமல்லாமல், அங்குள்ள ராணுவ வீரர் களிடமும், ‘‘எல்லோரும் குடும்பத்தோடு தீபாவளி கொண்டாட விரும்புவார்கள். நானும் உங்களையெல்லாம் எனது குடும்பத்தினர் என்று கருதுவதால், என் குடும்பத் தோடு கொண்டாட இங்கு வந்திருக்கிறேன். 4–வது ஆண்டாக தொடர்ந்து ஒவ்வொரு தீபாவளியின் போதும் நான் எல்லைப்புறத்தில் உள்ள ராணுவ வீரர்களோடு தீபாவளி கொண்டாடுகிறேன்’’ என்று கூறியவுடன், நமது ராணுவ வீரர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவர்களை இன்னும் உற்சாகப்படுத்தும்விதமாக, ராணுவத்தினரிடம், ‘நான் செலவழிக்கும் சில மணிநேரம் எனக்கு புதிய சக்தியை வழங்குகிறது’ என்று கூறினார்.

இதுமட்டுமல்லாமல், உங்கள் அன்புக்குரிய குடும்பத் தினரை பிரிந்து வெகுதூரத்தில் நாட்டை பாதுகாக்கும் பணியில் பாரம்பரிய தியாகத்தை காட்டும் வகையில் நீங்கள் ஈடுபடுகிறீர்கள். எல்லையில் அனைத்து ராணுவ வீரர்களும் வீரத்தின், அர்ப்பணிப்பின் அடையாளங்கள் என்று புகழாரம் சூட்டினார். பதற்றமான எல்லைப்பகுதிக்கு சென்று நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களோடு பிரதமர் தீபாவளி கொண்டாடியது மிகவும் பாராட்டத்தக்கதாகும். பிரதமருக்கும் மகிழ்ச்சி, ராணுவ வீரர்களுக்கும் மகிழ்ச்சி. தீபாவளியன்று இவர் இல்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்த அவர்களது குடும்பத்தின ருக்கும், நம்மோடு இல்லையென்றாலும் நாட்டின் பிரதம ரோடேயே தீபாவளி கொண்டாடினார் என்ற மகிழ்ச்சி. மொத்தத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் இது நெகிழ்ச்சியாக இருந்தது.

Next Story