அதிகாரிகள், மக்களுடன் இணைய வேண்டும்


அதிகாரிகள்,  மக்களுடன்  இணைய  வேண்டும்
x
தினத்தந்தி 23 Oct 2017 9:30 PM GMT (Updated: 2017-10-23T19:53:01+05:30)

மறைந்த பிரதமர் நேருவும், பேரறிஞர் அண்ணாவும் மிகவும் விரும்பி தங்கள் தொண்டர்களுக்கு அடிக்கடி சொல்லும் வாசகங்கள், அதுவும் அறிவுரையாக சொல்லும் வாசகங்கள், சீன நாட்டு தத்துவமேதை லாவோ சூ கூறிய வார்த்தைகளாகும்.

றைந்த பிரதமர் நேருவும், பேரறிஞர் அண்ணாவும் மிகவும் விரும்பி தங்கள் தொண்டர்களுக்கு அடிக்கடி சொல்லும் வாசகங்கள், அதுவும் அறிவுரையாக சொல்லும் வாசகங்கள், சீன நாட்டு தத்துவமேதை லாவோ சூ கூறிய வார்த்தைகளாகும். உலகம் முழுவதும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், ஏன் மக்கள் பணியில் உள்ள அனைவரும் பின்பற்றவேண்டிய அறிவுரைதான் அது. ‘மக்களிடம் செல்லுங்கள், அவர்களோடு வாழுங்கள், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள், அவர்களை நேசியுங்கள், அவர்களுக்கு தெரிந்தவற்றில் இருந்து தொடங்குங்கள், அவர்களிடம் இருப்பதை வைத்து கட்டுங்கள்’ என்பதுதான். எத்தனை 100 ஆண்டுகளானாலும் எல்லோருக்கும் பாடமாக விளங்கும் வாசகங்களாகும். அதே பாடத்தைத்தான் மத்திய ரெயில்வே அமைச்சகம் இப்போது ரெயில்வே துறையில் பணிபுரியும் உயர்அதிகாரிகளுக்கு உத்தரவாக பிறப்பித்துள்ளது.

இந்தியா முழுவதும் 12 ஆயிரத்து 617 ரெயில்கள் தினமும் ஏறத்தாழ 2 கோடியே 20 லட்சம் பயணிகளை, 7 ஆயிரத்து 216 ரெயில் நிலையங்கள் வழியாக ஏற்றிச்செல்கின்றன. 14 லட்சம் ரெயில்வே ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்திய ரெயில்வே 17 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்தினுடைய கிளைக்கு கீழேயும் பல கோட்டங்கள் இருக்கின்றன. ரெயில்வே துறையில் இப்போது பல நடவடிக்கைகளை அமைச்சகம் எடுத்துவருகிறது. உயர்அதிகாரிகள் அனைவரும் ஆங்காங்கு தங்கள் பணிநிமித்தம் செல்வதற்கும், சோதனை நடத்துவதற்கும் ரெயிலில் செல்லும்போது அவர்கள் பயணம் செய்ய ‘சலூன்’ என்று அழைக்கப்படும் சிறப்பு வசதிகளைக்கொண்ட சொகுசு ரெயில்பெட்டி இணைக்கப்படும். ஒரு அதிகாரியும், அவரைச் சார்ந்த ஒருசில அலுவலர்களும் பயணம் செய்வதற்காக அனைத்து வசதிகளையும் கொண்டது இந்த சொகுசு ரெயில்பெட்டி. மேலும், இவ்வாறு தனியாக ஒரு சொகுசு பெட்டியில் செல்லும்போது, மற்ற பயணிகளையோ, ஓடும் ரெயிலில் பணியாற்றும் அதிகாரிகளையோ, போலீஸ்காரர்களையோ அவர்கள் சந்திக்கும் வாய்ப்பு இல்லை. மக்களுடைய குறைகளையும் நேரில் கண்டறிய முடியாது. இந்த குறையெல்லாம் தீர்க்க, ரெயில்வே மண்டல பொதுமேலாளர் முதல் கோட்ட மேலாளர்கள் உள்பட அனைத்து அதிகாரிகளும் அலுவலக ரீதியாக பயணம் செய்யும்போது, தூங்கும் வசதிகொண்ட ரெயில்பெட்டி அல்லது 3–வது வகுப்பு குளுமை வசதி செய்யப்பட்ட பெட்டியில்தான் பயணம் செய்யவேண்டும். அப்போதுதான் அவர்களால் மற்றபயணிகளோடு உட்கார்ந்து அவர்களுடைய குறை, நிறைகளை கேட்டறிந்து ரெயில்பெட்டி சுத்தமாக இருக்கிறதா?, பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இருக்கிறதா?, ரெயில் நிலையங்கள் சுத்தமாக இருக்கிறதா? போன்றவற்றை நேரில் கண்டறிய முடியும் என்று கூறியிருக்கிறது. ஏற்கனவே இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை அறிக்கையில், ரெயிலில் கிடைக்கும் உணவு வகைகள், படுக்கை விரிப்புகள் தரம் இல்லாமல் இருப்பது, ரெயில் நிலையங்கள் சுத்தமில்லாமல் இருப்பது போன்ற குறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், நிச்சயமாக இது ஒரு நல்லமுடிவு. மேலும், ரெயிலில் உயர் அதிகாரிகள் பயணம் மேற்கொள்ளும்போது, முன்கூட்டியே கீழ்மட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், சாதாரண பயணிகளைப்போல டிக்கெட் எடுத்து பயணம் செய்தால், அதிகாரிகள் வருவதை தெரிந்துகொண்டு எல்லா குறைகளையும் கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் அன்று ஒருநாள் மட்டும் நிவர்த்தி செய்துவிடும் போக்கை தடுத்துவிடமுடியும்.

ரெயில்வேயில் மட்டும் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், மத்திய–மாநில அரசுகளில் உள்ள அரசு துறைகள் அனைத்திலும் பொதுமக்களோடு நேரடி தொடர்பில் உள்ள அனைத்து பணிகளையும் பார்வையிட உயர் அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால், பணிகளும் ஒழுங்காக நடக்கும். மக்களுக்கும் அதிகாரிகள் மீதும், அரசின் மீதும் முழு நம்பிக்கை பிறக்கும். இதுபோல, தமிழ்நாட்டிலும் அரசு போக்குவரத்துக்கழகங்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுக்குள்ள குறைகள் எல்லாவற்றையும் தெரிவிக்க, அதைக்கேட்டு சரிசெய்ய தகவல் தொழில்நுட்பத்தின் நல்ல வழிமுறைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story