குஜராத்தை பின்பற்றலாமே தமிழ்நாடு


குஜராத்தை பின்பற்றலாமே தமிழ்நாடு
x
தினத்தந்தி 25 Oct 2017 9:30 PM GMT (Updated: 2017-10-25T20:21:53+05:30)

சாலைபோக்குவரத்தில் ஏராளமான வாகனங்கள் பயணிகளை ஏற்றிக் கொண்டும், சரக்குகளை ஏற்றிக் கொண்டும் செல்கின்றன.

சாலைபோக்குவரத்தில் ஏராளமான வாகனங்கள் பயணிகளை ஏற்றிக் கொண்டும், சரக்குகளை ஏற்றிக் கொண்டும் செல்கின்றன. தரைவழி போக்குவரத்தில் நெரிசலை குறைப்பதற்காகவும், செலவை குறைப்பதற்காகவும், கடல்வழி போக்குவரத்துத்தான் சாலச்சிறந்தது. சாலை மூலம் சரக்கு போக்குவரத்தை மேற்கொண்டால் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1.50 காசும், ரெயில் மூலம் மேற்கொண்டால் கிலோ மீட்டருக்கு 1 ரூபாயும், நீர்வழி மூலம் மேற்கொண்டால் கிலோ மீட்டருக்கு 20 காசும் செலவாகும். கடல்வழியாக பயணிகள் போக்குவரத்தையும், சரக்கு போக்குவரத்தையும் ஒருங்கே மேற்கொண்டால் நிச்சயமாக மிகவும் பயன் விளைவிக்கும். அந்தவகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சவுராஷ்டிரா பகுதியையும், தெற்கு குஜராத்தையும் இணைக்கும் வகையிலான ‘ரோ ரோ’ படகு போக்குவரத்தை தொடங்கினார். தென்கிழக்கு ஆசியாவிலேயே இது தான் முதல் திட்டம். அங்கு கம்பட் வளைகுடாவை சுற்றியுள்ள பகுதிகளை இவ்வளவு நாளும் பயணிகள் சாலைபோக்குவரத்து மூலமே மேற்கொண்டனர். இந்தத்திட்டம் நீண்ட பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த திட்டம். பாவ் நகர் மாவட்டம் கோஹா நகரில் இருந்து தஹேஜ் நகருக்கு செல்லும் வகையிலான திட்டம் தரைவழியாக சென்றால் ஆகும் 360 கி.மீ. தூரத்தை, கடல்வழியாக 31 கி.மீ தூரமாக குறைக்கிறது.

தரைவழியாக 8 மணி பயண நேரத்தை, இந்த கடல்வழி பயணம் ஒருமணி நேரமாக குறைத்துவிடுகிறது. இது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம். 2012–ம் ஆண்டு அங்கு குஜராத் முதல்–மந்திரியாக இருந்தபோது அடிக்கல் நாட்டியதிட்டம். அப்போது திட்ட மதிப்பீடு ரூ.296 கோடி. ஆனால், இப்போது ரூ.651 கோடி செலவாகியிருக்கிறது. இந்தத்திட்டத்தை நிறைவேற்ற பா.ஜ.க. அரசால் எப்படி சாத்தியமானது? என்று பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது, எனது சிறுவயதில் இருந்தே இந்த திட்டம் பேசப்பட்டு வந்தது. ஆனால், இப்போது தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய அரசாங்கங்கள் இதுபோன்ற படகு போக்குவரத்தை தொடங்க முனையங்களையும், உள்கட்டமைப்பு வசதிகளையும், தனியார் முதலீட்டாளர்களே கட்டி படகு போக்குவரத்தை மேற்கொள்ளவேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், எந்தவொரு தனியார் முதலீட்டாளர்களும் அதை ஏற்றுக்கொண்டு படகு போக்குவரத்தை தொடங்க முன்வரவில்லை. ஆனால், பா.ஜ.க. அரசு முனையத்தையும் உருவாக்கி, கடலையும் ஆழப்படுத்தி கொடுத்ததால், தனியார் இந்த படகு போக்குவரத்தில் ஈடுபடமுன்வந்துள்ளன. அரசாங்கமும் லாபத்தில் பங்குதாரர்களாக இருக்கும். குஜராத் கடல்சார் வாரியம் இந்த படகு போக்குவரத்தை நிர்வகிக்கிறது. குஜராத் மாநில அரசு எடுத்த இந்த நடவடிக்கை நிச்சயமாக வரவேற்கத்தக்கதாகும். எப்படி குஜராத் மாநில கடல்சார் வாரியம் படகு போக்குவரத்தை நடத்துவதற்கான முயற்சிகள் எடுத்ததோ, அதுபோல தமிழ்நாட்டின் முதல்–அமைச்சர் தலைமையில் உள்ள தமிழக கடல்சார் வாரியமும் இதுபோன்ற படகு போக்குவரத்துகளை தமிழ்நாட்டில் தொடங்கவேண்டும். மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். தொடங்கவேண்டும் என்று ஆசைப்பட்ட அவரது கனவுத்திட்டம் இது.

தமிழ்நாட்டில் 1,076 கி.மீ. நீள கடற்கரை இருக்கிறது. 3 பெரிய துறைமுகங்களும், மேலும் பல சிறிய துறைமுகங்களும் இருக்கிறது. குஜராத்தில் இந்த பிரமாண்டமான படகில் பஸ்கள், கார்கள், லாரிகள் போன்ற 100 வாகனங்களையும், 300 பயணிகளையும் ஒரேநேரத்தில் ஏற்றிச் செல்ல முடியும். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், ஒரே நேரத்தில் சரக்குகளையும், பயணிகளையும் இதுபோன்று படகுகள் மூலம் ஏற்றிச்செல்ல முடியும் என்பதால், போக்குவரத்து நெரிசலை குறைக்க உடனடியாக குஜராத் மாநிலத்தில் தொடங்கிய இதுபோன்ற படகு போக்குவரத்தை தமிழ்நாட்டிலும் தொடங்க தமிழக அரசும், தமிழ்நாடு கடல்சார் வாரியமும் நடவடிக்கை எடுக்கவேண்டும். முயற்சிகளை தொடங்கவேண்டும். அதற்குரிய உள்கட்டமைப்பு வசதிகளை முதலில் செய்துவிட்டு, படகு போக்குவரத்துக்கான முதலீடுகளை அரசாங்கம் செய்யாவிட்டாலும், குஜராத்போல தனியார் முதலீட்டாளர்களை ஊக்குவித்து, இத்தகைய போக்குவரத்தை தொடங்கவேண்டும். மத்திய அரசாங்கமும் இதற்குரிய ஒத்துழைப்பை நல்கவேண்டும்.


Next Story