குஜராத், இமாசலபிரதேச மாநில தேர்தல்கள்


குஜராத்,  இமாசலபிரதேச  மாநில  தேர்தல்கள்
x
தினத்தந்தி 26 Oct 2017 9:30 PM GMT (Updated: 26 Oct 2017 4:47 PM GMT)

நாடு முழுவதும் இப்போது மிக ஆர்வத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருப்பது குஜராத் மற்றும் இமாசலபிரதேச மாநிலங்களில் நடைபெறப்போகும் சட்டசபை தேர்தல்களின் முடிவுகளைத்தான்.

நாடு முழுவதும் இப்போது மிக ஆர்வத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருப்பது குஜராத் மற்றும் இமாசலபிரதேச மாநிலங்களில் நடைபெறப்போகும் சட்டசபை தேர்தல்களின் முடிவுகளைத்தான். இருமாநில சட்டசபை தேர்தலின் முடிவுகளும் ஒரேநாளில், அதாவது டிசம்பர் 18–ந் தேதிதான் ஓட்டு எண்ணிக்கை முடிந்து அறிவிக்கப்படும். இமாசலபிரதேசத்தில் காங்கிரசும், குஜராத்தில் பா.ஜ.க.வும் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. பொதுவாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அந்தவகையில், நவம்பர் 9–ந் தேதி தேர்தலை சந்திக்க இருக்கும் இமாசலபிரதேசத்திற்கு 12–ந் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலும், டிசம்பர் 9 மற்றும் 14–ந் தேதிகளில் தேர்தல் நடக்க இருக்கும் குஜராத் மாநில தேர்தல் தேதி நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டதிலும் எந்தவித தவறும் இல்லை. ஏனெனில், இருமாநில தேர்தல்களுக்கும் இடைவெளி ஒருமாத காலம் இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் நடந்த வெள்ள நிவாரண பணிகளும் இந்த தாமதத்திற்கு ஒரு காரணம் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது.

இமாசலபிரதேசம் 68 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட மாநிலமாகும். இங்கு கடந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 36 இடங்களிலும், பா.ஜ.க. 26 இடங்களிலும், சுயேச்சைகள் 5 இடங்களிலும், இமாசல் லோகித் கட்சி ஒரு இடத்திலும் வெற்றிபெற்றன. இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தல்களில் 10 முறை காங்கிரசும், 3 முறை பா.ஜ.க.வும், ஒருமுறை ஜனதா கட்சியும் ஆட்சியை பிடித்துள்ளன. 2007–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வும், 2012–ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசும் வெற்றி பெற்றன. அதேபோல், இப்போது வெற்றிபெறப்போவது யார்? என்ற கேள்விக்கு நாங்கள்தான் என்று பதில்கூற இருகட்சிகளும் வேலையைத் தொடங்கிவிட்டன. குஜராத் மாநிலத்தை பொறுத்தமட்டில், இது, ‘நரேந்திரமோடியின் கோட்டை’ என்றே ஒட்டுமொத்த நாடும் நினைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தல்களில் 5 முறை பா.ஜ.க. குஜராத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. 2001–ம் ஆண்டு அக்டோபர் 7–ந் தேதி முதல் 2014–ம் ஆண்டு மே 22–ந் தேதி வரை நரேந்திரமோடி முதல்–மந்திரியாக இருந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சி கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் தோல்வியையே சந்தித்து வந்திருக்கிறது. மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில், 150–க்கும் மேற்பட்ட இடங்களை எப்படியும் பிடித்தே தீருவோம் என்று சில மாதங்களுக்கு முன்பே பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா உறுதியெடுத்துக்கொண்டு பணியாற்றி வருகிறார்.

காங்கிரசும் இந்தமுறை எப்படியும் வெற்றிபெற்றே தீரவேண்டும் என்ற அடிப்படையில், ஏற்கனவே பட்டேல் இனத்திற்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று போராடிய ஹர்திக் பட்டேல், இதர பிற்படுத்தப்பட்டோர் இன தலைவர் அல்பேஷ் தாகோர் மற்றும் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி ஆகியோரை தன்பக்கம் இழுத்துவிட்டது. இதுமட்டுமல்லாமல், ஆம் ஆத்மி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சி போன்ற கட்சிகளுக்கும் அழைப்புவிடுத்து பா.ஜ.க.விற்கு எதிரான கூட்டணியை அமைக்க பாடுபட்டுவருகிறது. ஆனால், இப்போது நடந்த தேர்தல் கணிப்புகளெல்லாம் பா.ஜ.க. இதற்கு முன்பு வெற்றிபெற்ற இடங்களைவிட, கூடுதலாக வெற்றிபெறும் என்று கூறியுள்ளது. பா.ஜ.க.வை பொறுத்தமட்டில், குஜராத் மாநிலம் தங்கள் ஆட்சியில் அடைந்துள்ள வளர்ச்சியையும், இப்போது பிரதமர் அறிவித்த அறிவிப்புகளையும், இதுவரை பெரியஅளவில் ஊழல் புகார்கள் எதுவும் அரசு மீது சொல்லாததையும், எல்லாவற்றுக்கும் மேலாக மோடி அலையையும் தன்னுடைய பெரிய பலமாக கருதுகிறது. இமாசலபிரதேசம், குஜராத் 2 மாநிலங்களிலும் யார் வெற்றிபெற்றாலும் சரி, நிச்சயமாக 2019–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை நோக்கி நடக்கும் அரசியல் பயணத்துக்கு ஒரு பெரிய வலுவை அளிக்கும் என்று மக்கள் கருதுகிறார்கள்.

Next Story