ராணுவத்தினருக்கு நிறைய சலுகைகள் வேண்டும்


ராணுவத்தினருக்கு நிறைய சலுகைகள்  வேண்டும்
x
தினத்தந்தி 27 Oct 2017 9:30 PM GMT (Updated: 2017-10-27T19:00:54+05:30)

இந்திய நாட்டின் ஜனத்தொகை தற்போது, 134 கோடியே 37 லட்சத்து 58 ஆயிரத்து 943 ஆகும்.

ந்திய நாட்டின் ஜனத்தொகை தற்போது, 134 கோடியே 37 லட்சத்து 58 ஆயிரத்து 943 ஆகும். இவ்வளவு மக்கள் தொகையும் உள்நாட்டில் போலீசார் அளிக்கும் பாதுகாப்பையும், எல்லைப்புறங்களில் ராணுவத்தினர் அளிக்கும் பாதுகாப்பையும் சார்ந்தே இருக்கிறது.

நீதிநெறி விளக்கத்தில் ‘குமரகுருபரர் சுவாமிகள்’ சொன்னது போல,

‘மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்.’  
என்ற பாடலுக்கேற்ப, ராணுவத்தினர் பணியாற்றி வருகிறார்கள். இரவு–பகலாக பசியையும் பொருட்படுத்தாமல், வடக்கே எல்லைப்புறங் களில் ராணுவத்தினரும், வான்வெளி பாதுகாப்பில் விமானப்படையினரும், கடலில் கப்பல்படையினரும் நமக்கு பாதுகாப்பு அளித்துவருகிறார்கள். இந்திய ராணு வத்தில் 41 ஆயிரம் அதிகாரிகளும், 11 லட்சத்து 32 ஆயிரம் ராணுவ வீரர்களும் பணியாற்றுகிறார்கள். விமானப்படையில் 12 ஆயிரம் அதிகாரிகளும், 1 லட்சத்து 30 ஆயிரம் படை வீரர்களும் பணியாற்றுகிறார்கள். கடற்படையில் 9 ஆயிரம் அதிகாரிகளும், 52 ஆயிரம் மாலுமிகளும் உள்ளனர். இதுதவிர கடலோர காவல்படையில் 1,400 அதிகாரிகளும், 10 ஆயிரம் மாலுமிகளும் உள்ளனர். இவர்கள் அனை வருடைய பணியும் மிகவும் மகத்தானது. இவர்கள் இரவு– பகல் பார்ப்பதில்லை. மற்ற எல்லா பணிகளிலும் சனி, ஞாயிறு விடுமுறை உண்டு. அரசு விடுமுறை நாட்கள் உண்டு. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளின்போது எல்லோருமே தங்கள் குடும்பத்தோடு குதூகலமாக கொண்டாடுவார்கள். ஆனால், பனிபடர்ந்த அடர்ந்த மலைப்பகுதி காடுகளி லுள்ள எல்லைப்புறங்களில் கையில் துப்பாக்கியை ஏந்திக் கொண்டு பணியாற்றும் ராணுவவீரர்கள் அவ்வாறு குடும்பத்தோடு கொண்டாடமுடிவதில்லை. குடும்பத்தை பிரிந்து தன்னந்தனியாக தவித்துக்கொண்டிருப்பார்கள்.

அதனால்தான் பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு தீபாவளி நேரத்தின்போதும், முன்அறிவிப்பு வெளியிடாமல் எல்லைப்புறங்களுக்கு சென்று, ராணுவவீரர்களோடு தீபாவளியை கொண்டாடி மகிழ்வார். ராணுவ வீரர்களும், நாங்கள் தனி ஆள் இல்லை. இந்த நாடே எங்களோடுதான் இருக்கிறது என்பதை பிரதிபலிக்கும்வகையில், எங்கள் பிரதமரே இங்கு வந்திருக்கிறார் என்று மகிழ்வோடு தங்கள் கவலையை மறந்திருப்பார்கள். இந்த ஆண்டு காஷ்மீரி லுள்ள குரேஸ் பகுதியில் ராணுவ வீரர்களோடு தீபாவளியை நரேந்திரமோடி கொண்டாடும்போது, பண்டிகை நேரங் களில் குடும்பத்தினரோடு தொடர்புகொள்ள மொபைல் போன் இணைப்புகள் வேண்டும் என்று அவர்கள் சார்பில், முன்னாள் காஷ்மீர் முதல்–மந்திரி உமர்அப்துல்லா வேண்டுகோள் விடுத்தார். எல்லைப்புறங்களில் செல்போன் ‘டவர்’ கிடையாது என்பதால் அங்கிருந்து செல்போனில் வீரர்கள், தங்கள் குடும்பத்தோடு பேசமுடியாது. ‘சாட்டி லைட் போன்’ என்று சொல்லப்படும் செயற்கைகோள் போன் மூலமாகத்தான் அவர்கள் பேசமுடியும். தற்போது இதற்காக அவர்களுக்கு மாதவாடகை கட்டணம் ரூ.500–ம், 1 நிமிடம் பேச ரூ.5–ம் வசூலிக்கப்படுகிறது. பிரதமர் சென்ற 2 நாட்களிலிருந்து எல்லைப் பகுதிகளில் இருக்கும் ராணு வத்தினர் மட்டுமல்லாமல், எல்லைப் பாதுகாப்புபடை போன்ற துணை ராணுவத்தினரும் இனிமேல் தங்கள் குடும்பத்தோடு செயற்கைகோள் போனில் பேசுவதற்கான கட்டணம் நிமிடத்திற்கு ரூ.1 என்றும், மாதம் கட்டவேண்டிய வாடகை கட்டணம் ரூ.500 இனி கிடையாது என்றும் உத்தர விடப்பட்டது. இதன்மூலம் எல்லைப் புறங்களிலுள்ள ராணுவத்தினரும், துணை ராணுவத்தினரும் தங்கள் மனைவி, மக்கள், குடும்பத்தினரோடு அதிகநேரம் செலவு இல்லாமல் பேசமுடியும்.

பிரதமர் எடுத்த இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்புக் குரியது. குடும்பத்தினர் தங்கள் அருகில் இல்லையே, நாம் இப்படி பனிக்குள்ளும், புயலுக்குள்ளும் தன்னந்தனியாக நிற்கிறோமே? என்ற கவலையை அவர்கள் மறந்து நிம்மதியுடனும், மனநிறைவோடும் பணியாற்ற இதுபோன்ற சலுகைகள் உதவும். தொலைத்தூரத்தில் உள்ள அவர் களது குடும்பத்தினருக்கும் இது பெருமகிழ்ச்சியை அளிக்கும். ராணுவத்தினருக்கான இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்கள், சலுகைகளை அவர்களாக கேட்கமுடியாது. அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்கு நிறைய செய்தால் அவர்கள் மட்டுமல்லாமல், அவர்கள் குடும்பத்தினர் மட்டுமல்லாமல், நாடும் நிச்சயமாக வரவேற்கும்.

Next Story