நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!


நிதி  மிகுந்தவர்  பொற்குவை  தாரீர்!
x
தினத்தந்தி 29 Oct 2017 9:30 PM GMT (Updated: 29 Oct 2017 5:50 PM GMT)

2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘‘தமிழ்மொழியின் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு செல்லும்வகையில், புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை ஏற்படுத்தப்படும்’’ என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘‘தமிழ்மொழியின் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு செல்லும்வகையில், புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை ஏற்படுத்தப்படும்’’ என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்ற ஒரு மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டார். ஹார்வர்டு பல்கலைக்கழகம் என்பது அமெரிக்காவில் உள்ள உலகப்புகழ்பெற்ற தொன்மையான ஒரு பல்கலைக்கழகமாகும். இந்த பல்கலைக்கழகம் தோன்றி 380 ஆண்டுகள் முடிந்து, தற்போது 381–வது ஆண்டை தொடங்கியுள்ளது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் செம்மொழிகளான சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீன மொழியான மாண்டிரின், பாரசீகம் ஆகிய மொழிகளுக்காக தனி இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டு, அதன்மூலம் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு எல்லோரும் வியக்கத்தக்க வகையில் முடிவுகள் வெளியிடப்பட்டன. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 38 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில்தான், ‘‘யோகா கலை இந்தியாவிலிருந்து தோன்றியது, உடல் ஆரோக்கியத்திற்கும், மனவளத்திற்கும் மிகவும் சிறந்தது’’ என்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இதுபோல, செம்மொழியான தமிழ்மொழியில் சொல்லப்பட்டுள்ள அரிய பொக்கி‌ஷங்கள் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டுமென்றால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அதற்கென தனி இருக்கை அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொண்டு முடிவுகள் வெளியிடப்படவேண்டும். அப்போதுதான், ‘அன்னை தமிழின் மகுடத்தில் பதிக்கப்பட்டுள்ள வைரங்கள் உலகம் முழுவதிலும் ஒளிவீசும்’ என்ற உன்னதமான நோக்கில் வெளிநாட்டு தமிழரான பேராசிரியர் வைதேகி ஹெர்பட் என்பவர்தான் முதலில் குரல் கொடுத்தார்.

வெளிநாட்டு இந்தியர்கள் அனைவரும் குறிப்பாக அமெரிக்கா வாழ்தமிழர்கள், அதிலும் தமிழ் மீது நீங்கா பற்றுள்ள இதயநோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜானகிராமன், புற்றுநோய் சிகிச்சை நிபுணரான திருஞானசம்பந்தம், தமிழக பேராசிரியர் மு.ஆறுமுகம், அமெரிக்காவில் உள்ள தொழில்அதிபர் பால்பாண்டியன் போன்ற பலர் இதற்காக பெரும் முயற்சி எடுத்தனர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கவேண்டும் என்றால், 60 லட்சம் டாலர் அதாவது ஏறத்தாழ ரூ.39 கோடி அந்த பல்கலைக்கழகத்தில் ஆதாரத்தொகையாக கட்டவேண்டும். இந்த தொகையில் டாக்டர்கள் ஜானகிராமனும், திருஞானசம்பந்தமும் ரூ.6½ கோடியை கட்டிவிட்டனர். 2018–ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மீதமுள்ள பணத்தை கட்டிமுடிக்கவேண்டும் என்றநிலையில், இப்போது தமிழக அரசு ரூ.10 கோடி கொடுக்க முன்வந்துள்ளது. டாக்டர்கள் கொடுத்த ரூ.6½ கோடியும் சேர்த்து உலக தமிழர்கள் இதுவரை ரூ.19 கோடியை சேர்த்துவிட்டனர். தமிழக அரசு கொடுத்த ரூ.10 கோடியும் சேர்த்து ரூ.29 கோடி ஆகிவிட்டது. இன்னும் ரூ.10 கோடி வேண்டும். அரசு தந்ததுபோல, அரசியல் கட்சிகளும், தமிழ் ஆர்வலர்களும், தமிழ் மீது பற்றுக்கொண்டவர்களும் இந்த ரூ.10 கோடியை உடனடியாக தந்தால் அடுத்த ஆண்டே ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை தொடங்கப்படும். பாரதியார் சொன்னதுபோல,

‘நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!

நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்! என்ற வகையில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு

  Wire transfer to Harvard University: Bank of America,100 Federal Street, Boston, MA 02110, USA
President & Fellows of Harvard College,
RSO Account # : 9429263621
ACH ABA:011000138
Wire ABA:026009593
Swift Code:BOFAUS3N
Donor:(To be provided by donor)
Purpose:Sangam professorship in Tamil


 என்ற முகவரிக்கு வங்கிகள் மூலம் அனுப்பலாம், அங்கிருந்து ரசீது அனுப்பப்படும் என்று பேராசிரியர் மு.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

Next Story