கலெக்டர்கள் மாநாடு வேண்டும்


கலெக்டர்கள் மாநாடு வேண்டும்
x
தினத்தந்தி 30 Oct 2017 9:30 PM GMT (Updated: 2017-10-30T22:49:33+05:30)

ஜனநாயகம் என்பது சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், பத்திரிகை ஆகிய 4 தூண்களால்தான் இயங்குகிறது. இதில், சட்டமன்றமும், நிர்வாகமும் ஒன்றுக்கொன்று பின்னி பிணைந்ததாகும்

னநாயகம் என்பது சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், பத்திரிகை ஆகிய 4 தூண்களால்தான் இயங்குகிறது. இதில், சட்டமன்றமும், நிர்வாகமும் ஒன்றுக்கொன்று பின்னி பிணைந்ததாகும். ஒரு அரசாங்கத்தின் கொள்கைகள், திட்டங்கள் போன்றவை சட்டமன்றத்தில்தான் சட்டங்களாக நிறைவேற்றப்படுகின்றன. அவற்றையெல்லாம் நடைமுறைக்கு கொண்டுவருவதற்காக நிதியும் ஒதுக்கப்படுகிறது. அந்த சட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு முழுக்க முழுக்க நிர்வாகத்திடம்தான் இருக்கிறது. அந்தவகையில், மாவட்ட நிர்வாகத்தின் பங்கு மிக மிக முக்கியமானதாகும். எந்தவொரு திட்டத்தின் பலனும் கடைக்கோடி மக்களுக்கு போய்ச்சேர வேண்டும் என்றால், மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாட்டு திறமையில்தான் அடங்கியிருக்கிறது. மாவட்ட நிர்வாகம் என்பது மாவட்ட கலெக்டரின் நிர்வாகத்தின்கீழ் இயங்குகிறது. அதனால்தான் மாவட்ட கலெக்டர் தமிழில், ‘மாவட்ட ஆட்சித் தலைவர்’ என்று அழைக்கப்படுகிறார்.

இதுபோல, மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு நிலைநிறுத்தப்படவேண்டும், பொது அமைதி நிலவவேண்டும், குற்றங்கள் தடுக்கப்படவேண்டும்.  சாதி, மத, இன கலவரங்கள் தலையெடுக்கக்கூடாது என்பது போன்று பல பணிகள் காவல் துறையிடம்தான் இருக்கிறது. காவல் துறையிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் திறமையான நிர்வாகத்தின் கீழ்தான் அந்த மாவட்டத்தில் பொதுஅமைதியை நிலைநாட்ட முடியும். அந்தவகையில், மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் பணிகள் ஒரு மாநில அரசின் நிர்வாகத்திற்கு மிக மிக முக்கியமானதாகும். மாவட்ட கலெக்டருக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கும் மேல் எத்தனை உயர் அதிகாரிகள் இருந்தாலும், அங்குள்ள பணிகளை ஆய்வு செய்வதற்கும், களத்தில் உள்ள நிலைமைகளை ஆராய்வதற்கும், அவர்களுக்குள்ள பிரச்சினைகளை நேரடியாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்வதற்கும் ஆண்டுக்கு ஒருமுறை முதல்–அமைச்சர், மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மாநாட்டை கூட்டுவது வழக்கம். இந்தக்கூட்டத்தில் அமைச்சர்கள், அரசு துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், காவல்துறையில் போலீஸ் சூப்பிரண்டுகள், அதற்குமேல் உயர்பதவியில் இருக்கும் அதிகாரிகள் அனைவரும் கலந்துகொள்வார்கள். இந்த மாநாடு பொதுவாக 2 நாட்கள் நடக்கும், 3 நாட்களும் நடந்தது உண்டு.

இந்தக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் தங்கள் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளை அவர்கள் கோரும் உதவிகளை நேரடியாக முதல்–அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவருவர். பல கோரிக்கைகளை, உயர் அதிகாரிகள் அங்கேயே இருப்பதால் அந்த நேரத்திலேயே முதல்–அமைச்சர் தீர்வுகாண்பதற்கு உத்தரவிடுவார். மேலும் நாள்கணக்கில், மாதக்கணக்கில் உள்ள பல பிரச்சினைகளுக்கு அந்த இடத்திலேயே தீர்வுகாணப்படும். இறுதியில் முதல்–அமைச்சர் பல அறிவுரைகளை, அறிவிப்புகளை வழங்குவார். அந்தக்கூட்டம் முடிந்து சில நாட்களுக்குள் முதல்–அமைச்சர் வெளியிட்ட உத்தரவுகள் நிறைவேற்றப்படும். கடைசியாக நடந்த கூட்டத்தில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ‘மக்களுக்காக நீட்டப்பட்டுள்ள அரசின் கருணை கரங்களாக மாவட்ட கலெக்டர்கள் இருக்கவேண்டும்’ என்று உருக்கமாக பேசினார். இந்த ஒரு கூட்டத்தினாலேயே நிர்வாகம் செம்மைப்படும். இதுபோன்ற கூட்டங்களில் நூற்றுக்கணக்கான முடிவுகள் எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படும். சிறந்த முறையில் பணியாற்றிய மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அடுத்த ஆண்டு பரிசு வழங்கப்படும் என்பதால் ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கும். ஆண்டுதோறும் நடக்க வேண்டிய இந்தக்கூட்டம் கடைசியாக 2013–ம் ஆண்டு டிசம்பர் 11, 13–ந்தேதிகளில் நடந்தது. அதன்பிறகு இப்போது 4 ஆண்டுகளாக இந்த கூட்டம் நடைபெறவில்லை. இந்தக் கூட்டம் ஆட்சி நிர்வாகத்தில் மிகமுக்கிய பங்கு வகிக்கும். இன்றியமையாத கூட்டம் என்பதால் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் இந்தக்கூட்டத்தை கூட்டி, முதல்–அமைச்சர் மாவட்டங்களில் உள்ள நிலைமைகளை ஆய்வுசெய்து உரிய உத்தரவை பிறப்பிக்கவேண்டும். இப்போது வீடியோ கான்பரன்சிங் முறை இருப்பதால் மாதத்திற்கு ஒருநாள் ஒவ்வொரு கலெக்டரிடமும், முதல்–அமைச்சரோ, அமைச்சர்களோ, உயர் அதிகாரிகளோ ஆய்வு நடத்தி, நிர்வாக எந்திரத்தை வேகமாக சுழல செய்யவேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும்.

Next Story