எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆச்சு?


எய்ம்ஸ்  மருத்துவமனை  என்ன  ஆச்சு?
x
தினத்தந்தி 31 Oct 2017 9:30 PM GMT (Updated: 31 Oct 2017 1:30 PM GMT)

பொதுவாக மத்திய–மாநில அரசாங்கங்கள் வளர்ச்சித்திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள், கல்வித் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுகின்றன.

பொதுவாக மத்திய–மாநில அரசாங்கங்கள் வளர்ச்சித்திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள், கல்வித் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுகின்றன. இதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டு அதை நிறைவேற்றுவதற்கென நிதியும் ஒதுக்கப்படுகிறது. ஆனால், நிர்வாக காரணங்களினால் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டும், அதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டும், பல திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படாமலும், தொடக்கத்தையே காணாமலும் அப்படியே தேங்கிக்கிடக்கின்றன. பொதுவாக நிதி ஒதுக்கும்போது, அன்றைய மதிப்பீட்டின் அடிப்படையில்தான் ஒதுக்கப்படுகிறது. ஆனால், இப்படி காலதாமதமாவதால் பொதுவான விலையேற்றத்தின் காரணமாக இந்த திட்டமதிப்பீடும் உயர்ந்துவிடுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. இதுபோன்ற நிலைமைகளை தவிர்க்க, மத்திய அரசாங்கம் இப்போது புதிதாக செயல்படு!, நிதி பெறு! என்றவகையில், ‘‘சவால் திட்டம்’’ ஒன்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில், எந்தவொரு திட்டத்தையும் குறிப்பிட்ட காலத்திற்குள் அதற்கான அனைத்து அனுமதிகளையும் வழங்கி நிறைவேற்றும் மாநிலங்களுக்கு பரிசாக கூடுதல் நிதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரெயில்வே, சாலை வசதி, மின்சாரம், புதுப்பிக்கத்தக்க மின்சாரம், ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவை முதல்கட்டமாக இந்தத்திட்டத்தின்கீழ் எடுக்கப்படுகின்றன. இதுபோன்ற திட்டங்களுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கும்போது 20 முதல் 30 சதவீதம்வரை தனியாக வைக்கப்படுகிறது. நிலம் ஒப்படைத்தல் உள்பட பல்வேறு அனுமதிகளை வழங்கி திட்டங்களை குறித்தநேரத்தில் நிறைவேற்றும் மாநிலத்திற்கு, கூடுதலாக அந்தத்தொகையை ஒதுக்கிட இந்த புதிய திட்டம் வகை செய்கிறது. ‘‘சவால் திட்டம்’’ என்று அழைக்கப்படும் இந்தத்திட்டம் மாநிலங்களுக்கு இடையே மத்திய அரசாங்கத்தின் பல உள்கட்டமைப்பு வசதி திட்டங்களை நிறைவேற்றுவதில் ஒரு ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயமாக இந்தத்திட்டம் வரவேற்கத்தகுந்த ஒரு திட்டமாகும். மாநிலஅரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு இந்த ‘‘சவால் திட்டம்’’ கொண்டு வருவது சரிதான். ஆனால், மத்திய அரசாங்கம் அறிவித்த பல திட்டங்கள் தொடங்கப்படாமல் தாமதமாகிக் கொண்டிருப்பதற்கு மத்திய அரசாங்கம் என்ன பதில் சொல்லப்போகிறது?. குறிப்பாக தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று அறிவித்த திட்டம் 2 ஆண்டுகளாக எங்கு தொடங்கப்படும்? என்று இடம் தேர்வு செய்யப்படாத நிலையில் இருக்கிறது.

2014–15–ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தத்திட்டத்திற்காக 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக அனுப்பவேண்டும். அந்த 5 இடங்களில் ஒரு இடத்தை மத்திய அரசாங்கம் தேர்வுசெய்து, அதற்கான பணிகளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இது ஒரு ஆயிரம் கோடி ரூபாய் திட்டம். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா இந்த எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழ்நாட்டில் தொடங்கவேண்டும் என்பதில் அதிக ஆர்வத்தோடு இருந்தார். உடனடியாக அனைத்து வசதிகள் குறிப்பாக சாலை வசதி, தண்ணீர் வசதி, மின்சார வசதிகொண்ட 5 இடங்கள் செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிங்கிப்பட்டி, மதுரை மாவட்டத்தில் உள்ள தோப்பூர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் 200 ஏக்கர் நிலத்தையும் அடையாளம் கண்டு மத்திய அரசாங்கத்திற்கு தமிழக சுகாதாரத்துறை அனுப்பி வைத்தது. இந்த இடத்தை தேர்வுசெய்ய மத்திய அரசாங்கத்தின் குழுவும் வந்து 5 இடங்களையும் பார்த்துவிட்டு சென்றுவிட்டது. மேலும் அனைத்து அலுவலக நடைமுறைகளும் நடந்துள்ள நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. இது மதுரையில் அமைய வாய்ப்பு இருப்பதாக இல.கணேசன் எம்.பி. கூறுகிறார். மத்திய அரசாங்கம் உள்கட்டமைப்பு வசதி திட்டங்களுக்கு ‘‘சவால் திட்டம்’’ கொண்டுவரும் நிலையில், அவர்கள் நிறைவேற்றவேண்டிய இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பை உடனடியாக அதிகாரபூர்வமாக வெளியிடவேண்டும். பணிகளை தொடங்கவேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கோரிக்கையாகும்.

Next Story