கிராமப்புறங்களை தத்து எடுங்கள்


கிராமப்புறங்களை  தத்து  எடுங்கள்
x
தினத்தந்தி 2 Nov 2017 9:30 PM GMT (Updated: 2 Nov 2017 1:06 PM GMT)

பிரதமர் நரேந்திரமோடி ஆட்சிக்குவந்த முதல் ஆண்டு அதாவது, 2014–ம் ஆண்டு ஆற்றிய சுதந்திரதின உரை, காலம்காலமாக மக்களால் மறக்கமுடியாத ஒரு உரையாகும்.

பிரதமர் நரேந்திரமோடி ஆட்சிக்குவந்த முதல் ஆண்டு அதாவது, 2014–ம் ஆண்டு ஆற்றிய சுதந்திரதின உரை, காலம்காலமாக மக்களால் மறக்கமுடியாத ஒரு உரையாகும். அந்த உரையில் பல முக்கியமான திட்டங்களை அறிவித்து சில திட்டங்களை தொடங்கிவைத்தார். பிரதம மந்திரி வலியோருக்கும் வளம் திட்டம், இந்தியாவுக்கு வாருங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள், உலக நாடுகளை அழைக்கும் திட்டம், டிஜிட்டல் இந்தியா திட்டம், தூய்மை இந்தியா திட்டம் என்பதுபோன்ற பல திட்டங்களை அறிவித்த பிரதமர், தன் உரையை முடிக்கும் முன்பு ‘பாராளுமன்ற மாதிரி கிராம திட்டம்’ என்ற ஒரு திட்டத்தையும் அறிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் தங்கள் தொகுதியில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை மக்கள் தொகையை கொண்ட ஒரு கிராமத்தை தேர்ந்தெடுக்கவேண்டும். அதற்கு ‘மாதிரி கிராமம்’ என்று பெயர். முழுஅளவில் சுகாதாரம், சுற்றுசூழல், விவசாயம், கல்வி அறிவு, சமூக நல்லுறவு பெற்ற கிராமமாக மாற்றிக்காட்டவேண்டும் என்று அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தத்திட்டம் பற்றி அறிவிக்கவேண்டும் என்ற நோக்கம் வந்ததற்கு காரணமே, அவர் குஜராத் முதல்–மந்திரியாக இருந்தபோதே கிராமப்புற வளர்ச்சியில் கொண்ட அக்கறைதான். குஜராத்தில் புன்சாரி என்ற கிராம மேம்பாட்டில் அவர் தீவிரமாக இருந்த காரணத்தால் இந்த கிராமம் நாட்டிலேயே முதல் மாதிரி கிராமமாக அடையாளம் காணப்பட்டது. இதுபோல, தெலுங்கானா மாநிலம் கங்காதேவிபள்ளி, மராட்டிய மாநிலத்தில் உள்ள ஹிவாரே பஜார் போன்ற மாதிரி கிராமங்களை பார்த்துவிட்டு, அதேபோல எல்லா கிராமங்களும் அனைத்து சிறப்புகளையும் கொண்டதாக மாறவேண்டும் என்று கொண்ட ஆர்வத்தின் விளைவாகத்தான், இந்தத்திட்டம் அவர் மனதில் பதிந்தது. ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற மேம்பாட்டு தொகுதி நிதியில் இருந்து ஆண்டுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது. மொத்தம் 800 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு எம்.பி.யும் இந்த திட்டத்தின்கீழ் தங்கள் சொந்த தொகுதியில் ஒரு கிராமத்தை தத்தெடுத்து, தங்கள் மேம்பாட்டு நிதியை அந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு குறிப்பாக, பணியாளர் நலன், மனிதவளம், சமூக பொருளாதார சுற்றுச்சூழல் போன்றவற்றை வளர்த்து, அடிப்படை கட்டமைப்பு வசதிகள், உள்கட்டமைப்புகள், சமூக பாதுகாப்பு, நல்ல நிர்வாகம் ஆகியவற்றை உருவாக்குவதற்காக தங்கள் நிதியை பயன்படுத்தவேண்டும் என்று இந்தத்திட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

2019–ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு எம்.பி.யும் 3 கிராமங்களை தத்தெடுத்து அனைத்து வசதிகளையும் அளித்து, மாதிரி கிராமங்களாக மாற்றவேண்டும். இதில், ஒரு கிராமத்தின் வளர்ச்சி பணிகள் 2016–ம் ஆண்டுக்குள் முடிவடையவேண்டும். தான் அறிவித்த திட்டத்தை சொன்னதோடு நிற்காமல், தான் போட்டியிட்ட வாரணாசியில் ககாரியா என்ற கிராமத்தை தத்தெடுத்து அனைத்து வசதிகளையும் அளித்தார். சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர்கூட தங்கள் தொகுதியில் கிராமங்களை தத்தெடுத்தனர். தமிழ்நாட்டில் கனிமொழி உடனடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் என்ற கிராமத்தை தத்தெடுத்தார். இப்போது 3 கிராமங்களில் இந்த பணிகள்   நடக்கவேண்டிய  நிலையில்,   ஏராளமான  எம்.பி.க்கள் இன்னும் இந்தத்திட்டத்தின்கீழ் கிராமங்களை தத்து எடுக்காத நிலை இருக்கிறது. பிரதமர் ஒரு நல்ல திட்டத்தை அறிவித்திருக்கிறார். 2019–ல் அடுத்த பாராளுமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் 3 கிராமங்களை தத்தெடுத்து, மாதிரி கிராமங்களாக மாற்றிவிட்டோம் என்ற சாதனை கார்டை மக்கள் முன்பு தாக்கல்செய்யவேண்டும். எம்.பி.க்கள் மட்டுமல்லாமல், சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற மேம்பாட்டு தொகுதி நிதியான ஆண்டுக்கு ரூ.2½ கோடியை கொண்டு இதுபோன்ற கிராமங்களை தத்தெடுத்து அனைத்து வசதிகளையும் கொண்ட மாதிரி கிராமங்களாக மாற்றும் ஒரு நல்லதிட்டத்தை தமிழக அரசும் அறிவிக்கவேண்டும்.

Next Story