தொழில் வளர்ச்சிக்கு உதவும் அவசர சட்டம்


தொழில் வளர்ச்சிக்கு உதவும் அவசர  சட்டம்
x
தினத்தந்தி 3 Nov 2017 9:30 PM GMT (Updated: 2017-11-03T22:46:28+05:30)

தொழில் வளர்ச்சி எந்த மாநிலத்தில் அபரிமிதமாக இருக்கிறதோ, அங்கு பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு இருக்கும், வேலைவாய்ப்புகள் கணிசமாக பெருகும், மக்களின் வாங்கும் சக்தி உயரும், இதனால் வர்த்தகம் தழைக்கும். உள்கட்டமைப்பு வசதி அதிகரிக்கும்.

தொழில் வளர்ச்சி எந்த மாநிலத்தில் அபரிமிதமாக இருக்கிறதோ, அங்கு பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு இருக்கும், வேலைவாய்ப்புகள் கணிசமாக பெருகும், மக்களின் வாங்கும் சக்தி உயரும், இதனால் வர்த்தகம் தழைக்கும். உள்கட்டமைப்பு வசதி அதிகரிக்கும். மொத்தத்தில் அனைத்து வளர்ச்சிகளையும் கொண்ட முன்னேற்றம் ஏராளமாக இருக்கும். அந்த வகையில், ‘தமிழ்நாடு நீண்ட பல ஆண்டுகளாக தொழில் வளர்ச்சியில் அனைவரையும் ஈர்க்கும் மாநிலமாக திகழ்ந்தது. பெருந்தலைவர் காமராஜர் காலத்திலேயே ஏராளமான கனரக, நடுத்தர சிறு தொழில்கள் தொடங்கப்பட்டன. தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டன’. பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தொழில் தொடங்க முனைவோர் முதல்தேர்வாக தமிழ்நாட்டைத்தான் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டனர். இப்போது சில ஆண்டுகளாக இந்த தொழில்வளர்ச்சியில் சற்று மந்தமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல அனுமதிகள் பெறுவதற்கு காலதாமதம் ஆகிறது. ஒவ்வொரு துறையாக ஏறி, இறங்க வேண்டியதிருக்கிறது. ஒட்டுமொத்த அனுமதிகளுக்காக   பல கதவுகளை தட்டவேண்டியதிருக்கிறது என்று தொழில் அதிபர்கள் வருத்தப்பட தொடங்கினார்கள். இதை பயன் படுத்திக்கொண்டு குஜராத், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா போன்ற பல மாநிலங்கள் நாங்கள் அனைத்து அனுமதிகளையும் ஒற்றைச்சாளர முறையில் தருகிறோம். எங்கள் மாநிலங்களுக்கு வாருங்கள், அனுமதிகளை பெறுவது எளிது, பல்வேறு சலுகைகளையும் தருகிறோம் என்று தொழில்முனைவோரை அழைத்து அனைத்து உதவிகளையும் நல்கினார்கள்.

இந்தநிலையில், ‘பிரதமர் நரேந்திரமோடி அனைத்து மாநிலங்களும் தொழில் வளர்ச்சியில் பீடுநடைபோட வேண்டும்’ என்ற நோக்கில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் தொழில் சீர்திருத்த நடவடிக்கை திட்டம் ஒன்றை வெளியிடச்செய்தார். இந்த கொள்கையின்படி, மாநில அரசுகள் பல்வேறு ஒப்புதல்களை ஒரேவழியில் பெற தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இந்த வகையில், தொழில் வளர்ச்சிக்காக பாடுபடும் மாநிலங்களுக்கு தரவரிசை பட்டியல் வகுக்கவும் மத்திய அரசாங்கம் திட்டமிட்டது. இதன்படி, தமிழகத்தில் வணிகம் எளிதாக்கும் அவசர சட்டம் ஒன்று பிறப்பிக்கப் பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் உள்ள 11 துறைகளில் 37 சேவைகளுக்கான அனுமதியை பெற ஒற்றைச்சாளர முறை வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரேவழியில் ஒரே இணையதள வழிமூலம் அனைத்து அனுமதிகளுக்கும் விண்ணப்பித்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்புதலை பெறமுடியும்.

எடுத்துக்காட்டாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் விண்ணப்பித்த சாதாரண கட்டிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 22 நாட்களிலும், சிறப்பு கட்டிடங் களுக்கு 33 நாட்களிலும், அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 66 நாட்களிலும் திட்ட ஒப்புதல் வழங்கப்படவேண்டும். நகர ஊரமைப்பு திட்டத்துறையில் கள அளவில் 22 நாட்களிலும், தலைமை அலுவலகத்தில் 33 நாட்களிலும் அனுமதி வழங்க வேண்டும். இதுபோல, மின்சார இணைப்பு, தண்ணீர் இணைப்பு, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை லைசென்சு, மாசு கட்டுப்பாடு வாரிய ஒப்புதல் போன்ற பல ஒப்புதல்கள் வழங்கப்படுவதற்கு குறிப்பிட்ட காலக்கெடு இந்தச்சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக தனி ஒற்றைச்சாளர இணையதள வழி ஒன்றை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். தொழில் களை தொடங்க விரும்புகிறவர்கள்  (https://www.easybusiness.tn.gov.in) என்ற இணையதளத்தில் அனைத்து அனுமதிகளுக்குமான ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் மிகவும் வரவேற்க தகுந்த அம்சம் என்னவென்றால், இந்த குறிப்பிட்ட காலத் திற்குள் ஒப்புதலோ, மறுப்போ தெரிவிக்கும் வகையில் எந்த தகவலும் வரவில்லையென்றால் இதற்கான ஒப்புதலை வழங்கிவிட்டதாக கருதலாம் என்று இருக்கிறது. நிச்சயமாக தொழில் முனைவோருக்கு இது பெரிய வரப்பிரசாதம். தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்பட, புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட இந்த அவசர சட்டம் நிச்சயமாக உத்வேகம் அளிக்கும். மற்ற மாநிலங் களில் தொழில் முனைவோருக்கு அளிக்கும் சலுகைகளை விட கூடுதல் சலுகைகளை தமிழக அரசு அளித்தால் நிச்சய மாக அனைத்து தொழில்முனைவோர் பார்வையும் தமிழ் நாடு பக்கம் திரும்பும்.


Next Story