நன்மையா?, தீமையா? காலம் சொல்லட்டும்


நன்மையா?, தீமையா? காலம்  சொல்லட்டும்
x
தினத்தந்தி 8 Nov 2017 9:30 PM GMT (Updated: 2017-11-08T19:20:41+05:30)

இந்திய வரலாற்றில் குறிப்பாக பொருளாதாரத்தில், நவம்பர் 8–ந் தேதி என்பது முக்கியமான ஒரு நாளாகும். கடந்த ஆண்டு இந்த நாளில்தான் யாரும் எதிர்பார்க்காத வகையில், பிரதமர் நரேந்திரமோடி டெலிவி‌ஷனில் அன்று நள்ளிரவு முதல் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

ந்திய வரலாற்றில் குறிப்பாக பொருளாதாரத்தில், நவம்பர் 8–ந் தேதி என்பது முக்கியமான ஒரு நாளாகும். கடந்த ஆண்டு இந்த நாளில்தான் யாரும் எதிர்பார்க்காத வகையில், பிரதமர் நரேந்திரமோடி டெலிவி‌ஷனில் அன்று நள்ளிரவு முதல் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். ஊழல், கருப்புபணம், பினாமி சொத்துகள், பயங்கரவாதம், கள்ளநோட்டு ஆகியவற்றை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவித்தார். பணப்புழக்கத்தில் உள்ள ஏறத்தாழ 86 சதவீத ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததால், மக்கள் பணம் இல்லாமல் பெருமளவில் சிரமப்பட்டனர். எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம் என்று அறிவித்தாலும், குறிப்பிட்ட அளவிற்குமேல் டெபாசிட் செய்தவர்களை வருமான வரித்துறை கண்கொத்தி பாம்புபோல கண்காணித்தது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது, நாட்டின் மொத்த பணப்புழக்கத்தில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.15.44 லட்சம் கோடியாக இருந்தது. இதில், 4 முதல் 5 லட்சம் கோடி ரூபாய்வரை வங்கிக்கு திரும்பவராது, அதுதான் கருப்புபணம் என்று எல்லோராலும் கூறப்பட்டது. ஆனால், ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையில், ‘செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99 சதவீதம் திரும்ப வந்துவிட்டதாகவும், 1 சதவீதம் அதாவது, ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான நோட்டுகள் மட்டுமே திரும்பவரவில்லை’ என்று கூறியுள்ளது.

கருப்பு பணமாக ரிசர்வ் வங்கிக்கு வராத நோட்டுகள் ரூ.16 ஆயிரம் கோடி. ஆனால், புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கு ரூ.21 ஆயிரம் கோடி செலவாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல், மொத்த உள்நாட்டு வளர்ச்சிவிகிதம் இந்த நிதிஆண்டின் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தநிலையில், நேற்றுடன் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இந்த நாளை, ‘பொருளாதாரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் ஒரு கருப்பு நாள். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது, திட்டமிடப்பட்ட கொள்ளை மற்றும் சட்டப்பூர்வமான திருட்டு’ என்று விமர்சித்தார்.

கருப்பு பணத்தையும், வரி ஏய்ப்பையும் ஒழிக்க ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது சரியான மருந்தல்ல. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததும், சரக்குசேவை வரி அமல்படுத்தும் முறையும் பொருளாதாரத்தின் மீது விழுந்த இரட்டை அடியாகும்’ என்றும் வர்ணித்தார். நிதிமந்திரி அருண் ஜெட்லியோ, ‘இது கருப்பு பணத்திற்கு எதிரான நாள். கருப்பு பணம் என்ற அச்சுறுத்தும் நோயிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் நாள்’ என்று வர்ணித்துள்ளார். கருப்பு பணத்திற்கும், ஊழலுக்கும் எதிராக 125 கோடி இந்திய மக்கள் தீர்க்கமாக போரிட்டனர், வென்றனர். வரி செலுத்துதலுக்கு பொருந்தாதவகையில், ரொக்கப்பணமாக வங்கியில் செலுத்தியுள்ள 23 லட்சத்து 22 ஆயிரம் வங்கிகணக்குகளில், ரூ.3 லட்சத்து 68 ஆயிரம் கோடி சந்தேகத்திற்குரியதாக கண்டறியப்பட்டுள்ளது. பயங்கரவாதங்கள் குறைந்துள்ளன. 7 லட்சத்து 62 ஆயிரம் எண்ணிக்கையிலான கள்ளநோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. வருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கை 66 லட்சத்து 53 ஆயிரமாக இருந்தது, 84 லட்சத்து 21 ஆயிரமாக உயர்ந்துள்ளது. டிஜிட்டல் பணபரிவர்த்தனை அதிகரித்துள்ளது. பொருளாதாரத்தை சீர்திருத்த நீண்டகால நன்மைக்காக குறைந்தகால வலி என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு நிச்சயமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், மத்திய அரசாங்கம் நீண்டகால பலனுக்கான குறைந்தகால வலி என்று சொல்லியிருக்கிறது. விவசாயத்தில்கூட, சம்பாபயிரை விதைத்தால் 150 நாட்களுக்குப்பின் அறுவடை நடந்தபிறகுதான் தங்க சம்பாவா?, சாவியாகிப்போன சம்பாவா? என்பது தெரியும். அதுபோல, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததும், மக்களுக்கு நன்மை பயக்குமா? அல்லது அதிக பலனில்லாமல் தீமைதான் விளைவித்துள்ளதா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Next Story