மகிழ்விக்கும் சரக்கு சேவை வரி குறைப்பு


மகிழ்விக்கும் சரக்கு சேவை வரி  குறைப்பு
x
தினத்தந்தி 12 Nov 2017 9:30 PM GMT (Updated: 2017-11-12T17:45:13+05:30)

நாடு முழுவதும் ஒரேவிதமான வரியை விதிக்கவேண்டும் என்றநோக்கில், கடந்த 17 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டன.

நாடு முழுவதும் ஒரேவிதமான வரியை விதிக்கவேண்டும் என்றநோக்கில், கடந்த 17 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டன. 2014–ல் நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற பின்பு, ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி என்றவகையில் சரக்கு சேவைவரியை கொண்டுவர தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன. கடந்த ஜூன் மாதம் 30–ந்தேதி நள்ளிரவில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் சரக்கு சேவைவரி என்று கூறப்படும் ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த விழாவில் நரேந்திரமோடி பேசியபோது, ‘17 வகையான மத்திய–மாநில வரிகள் மற்றும் 23 மேல்வரிகளுக்கு மாற்றாக இந்த வரி அமலுக்கு வருகிறது’ என்று பறைசாற்றினார். இதன்கீழ் 0 வரி, 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என்று வரிவிதிப்பில் பொருட்கள் வகைப்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில் இருந்தே இந்த சரக்கு சேவைவரி தொடர்பாக ஆலோசனை நடத்தி, மேலும் பல முடிவுகளை எடுக்க மத்திய நிதி மந்திரி தலைமையில், மாநில நிதி மற்றும் வணிக வரித்துறை அமைச்சர்கள் கொண்ட ‘‘சரக்கு சேவைவரி கவுன்சில்’’ அமைக்கப்பட்டது.

சரக்கு சேவைவரி அமலுக்கு வந்தபின்னர் விலைவாசி உயர்ந்துவிட்டது. பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் பெரும் பாதிப்பாக இருக்கிறது என்று பல குறைபாடுகள் கூறப்பட்டன. மொத்தம் 1,211 பொருட்கள், சேவைகள் இந்த வரிவிதிப்பில் உட்படுத்தப்பட்டன. சரக்கு சேவைவரி கவுன்சில் இதுவரை 23 முறை கூடி பல்வேறு பொருட்களின் வரி விகிதத்தை மாற்றி அமைத்தது. கடந்த 10–ந்தேதி கவுகாத்தியில் நடந்த 23–வது சரக்கு சேவைவரி கவுன்சில் கூட்டம் முடிந்தபிறகு நிதி மந்திரி அருண்ஜெட்லி நல்ல அறிவிப்புகளை வெளியிட்டார். பொதுமக்கள் பயன்படுத்தும் 178 பொருட்களுக்கு 28 சதவீத வரிவிதிப்பிலிருந்து 18 சதவீத வரியாக குறைக்கப்பட்டுள்ளது. 2 பொருட்களுக்கு 28 சதவீதவரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இனி 28 சதவீத வரி 50 பொருட்களுக்கு மட்டும்தான்.

இதன்பிறகு 28 சதவீத வரிவிதிப்பு எதற்கென்றால், மேல்வரிகள் விதிப்பதற்கு தகுதியான பாவபொருட்கள் என்று அழைக்கப்படும் புகையிலை போன்ற பொருட்கள், சிமெண்ட், பெயிண்ட், மோட்டார் வாகனங்கள், சொகுசு படகின் உதிரிபாகங்கள் போன்றவைகளுக்குத்தான். இதுதவிர 13 பொருட்களுக்கு 18 சதவீத வரிவிதிப்பிலிருந்து 12 சதவீதமாகவும், 6 பொருட்களுக்கு 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும், 8 பொருட்களுக்கு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும், 6 பொருட்களுக்கு 5 சதவீதத்திலிருந்து சரக்கு சேவைவரி இல்லாத இனமாகவும் குறைக்கப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு மிகவும் மகிழ்ச்சித்தரக்கூடிய வரிகுறைப்பு என்னவென்றால், குளுமை செய்யப்படாத ஓட்டல்களில் உள்ள உணவு பண்டங்களுக்கு 12 சதவீதமாகவும், குளுமை செய்யப்பட்ட ஓட்டல்களில் 18 சதவீதமாகவும் இருந்த சரக்கு சேவைவரி ஒரேவரியாக 5 சதவீத வரியாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இருந்த உள்ளீட்டுவரி பலன்கள் ஓட்டலில் சாப்பிடுபவர்களுக்கு கிடைக்காததால் அது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 100 பொருட்களுக்கு வரிகுறைப்பு செய்தநிலையில், இந்த வரிகுறைப்பு நிச்சயமாக வரவேற்கத்தகுந்ததுதான். ஆனால், இந்த வரிகுறைப்பினால் பொதுமக்களுக்கு வரிச்சுமை இல்லாமல் இருக்கிறதா?, பொருளாதாரம் உயருமா?, உற்பத்தியாளர்களுக்கு தொழில் நடத்துவது எளிதாக இருக்கிறதா?, வியாபாரிகளுக்கு வர்த்தகம் எளிதாக நடக்க துணைபுரிகிறதா?, வரிவசூல் எளிமையாக இருக்கிறதா?, வலியில்லாத வரியாக இருக்கிறதா? இன்னும் ஏதாவது வரிகுறைப்பு வேண்டுமா? என்பதையெல்லாம் சரக்கு சேவைவரி கவுன்சில் இன்னும் ஆழமாக முடிவு செய்து, மேலும் மாற்றங்கள் தேவைப்பட்டால் கண்டிப்பாக செய்ய வேண்டும். நிச்சயமாக இது சரியான நடவடிக்கை. சரியான பாதை. இந்த பாதையை மேலும் செம்மைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story