கோவில்களையும், சிலைகளையும் கணக்கெடுக்க வேண்டும்


கோவில்களையும்,  சிலைகளையும்  கணக்கெடுக்க  வேண்டும்
x
தினத்தந்தி 14 Nov 2017 9:30 PM GMT (Updated: 2017-11-14T19:38:08+05:30)

உலகில் எதை எடுத்துக்கொண்டாலும், அது எப்போது தோன்றியது?, எப்படி வளர்ந்தது? என்பதையெல்லாம் ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

லகில் எதை எடுத்துக்கொண்டாலும், அது எப்போது தோன்றியது?, எப்படி வளர்ந்தது? என்பதையெல்லாம் ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், இந்துசமயம் என்பது எந்தக்காலத்தில் தொடங்கியது?, யார் அதை உருவாக்கினார்கள்?, அதை வளர்த்தது யார்? என்பதையெல்லாம் எந்த ஆய்வும் கண்டுபிடிக்க முடியாது. இந்தியாவிலும் அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டிலும் மனித குலம் தோன்றியது முதலே வாழ்வின் வழியாக இந்துசமயம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழன் ஒருவன் தான், ‘‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம், கோபுரதரிசனமே கோடிப்புண்ணியம்’’ என்ற முதுமொழிகளை சொல்லி, 10 பேர் கொண்ட குடியிருப்பு என்றாலும், அங்கே ஒரு கோவிலை அமைத்தான். ஒரு கோவிலின் வரலாற்றை பார்த்தாலே அந்த ஊரின் நாகரிகம், ஸ்தலபுராணம் அந்த ஊரிலுள்ள மக்களின் வாழ்க்கை முறை என்று பலவற்றை அறிந்துகொள்ளமுடியும். அதிலும் தமிழ்நாட்டிலுள்ள இந்துகோவில்களில் உள்ள அருள்பாலிக்கும் தெய்வங்களின் சிலைகள் மிகவும் கலைநுணுக்கங்களோடு உருவாக்கப்பட்டவை. சிற்பக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றால், தமிழ்நாட்டில் குக்கிராமங்களிலும்கூட இருக்கும் கோவில் சிலைகள்தான்.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் எண்ணிக்கையை யாராலும் கணக்கிடமுடியாது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மட்டும் 38,630 கோவில்கள் இருக்கின்றன. இதுதவிர ஊர் ஊருக்கு சிறு சிறு கோவில்களாக எண்ணற்ற கோவில்கள் இருக்கின்றன. பல கோவில்கள் காலப்போக்கில் மண்ணுக்குள் புதைந்து போயிருக்கின்றன. நமது அகழ்வாராய்ச்சிகளை இன்னும் தீவிரமாக்கினால் எத்தனையோ அரிய பெரிய கோவில்களை கண்டுபிடிக்கமுடியும். சமீபத்தில் ராமநாதபுரம் அகழ்வாராய்ச்சி மற்றும் சரித்திர பராமரிப்பு மையம் தெற்கு நரிப்பையூர், வெட்டுக்காடு ஆகிய இரண்டு கடலோர குடியிருப்புகளில் மண்ணுக்குள் புதைந்துகிடந்த 2 சிவன் கோவில்களை கண்டுபிடித்திருக்கிறது. இந்த கோவில்களை பார்த்தால் 13–ம் நூற்றாண்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் அந்தப்பகுதியை ஆண்டபோது கட்டப்பட்டது என்று தெரிகிறது. மேலும் அகழ்வாராய்ச்சிகளை வேகப்படுத்தினால் இதுபோன்ற நிறைய கோவில்களை கண்டுபிடிக்கமுடியும். இத்தகைய கோவில்களை கண்டுபிடிப்பதன்மூலம் அதில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வுசெய்தால் பழைய சரித்திரங்கள் பல வெளியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், இதுபோன்ற பழைய கோவில்களிலுள்ள சிலைகள் நிறைய திருடப்பட்டு வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டிருப்பதை கண்டுபிடிக்க முடியும். வெளிநாடுகளில் குறிப்பாக ஆஸ்திரேலியா, லண்டன், நியூயார்க் போன்ற அருங்காட்சியகங்களில் தமிழ்நாட்டிலுள்ள பழையகால சாமி சிலைகளை பெருந்தொகை கொடுத்து வாங்குவதால், சாமி சிலைகளை திருடும் கோஷ்டி, கோவில் அதிகாரிகள், உள்ளூர் பெரியவர்களின் துணையோடு பல நூதனமுறையில் திருட்டுகளை நடத்துகிறார்கள். உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக சிலைதிருட்டு தடுப்பு போலீஸ் ஐ.ஜி.யாக பொறுப்பேற்று இருக்கும் பொன் மாணிக்கவேல், 1,300 ஆண்டுகளுக்கும் மேலான பழமை கொண்ட ரூ.150 கோடி மதிப்பிலான பல கோவில் சிலைகள் குறிப்பாக விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவில், திருப்புரந்தான் பிரகதீசுவரர் கோவில் சிலைகளை ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூரில் இருந்து மீட்டு கொண்டுவந்திருக்கிறார். கடந்தவாரத்தில் கூட விநாயகர், முருகன், லட்சுமி சிலைகளை திருடி விற்க முயன்றவர்களை குடியாத்தம் அருகே கைது செய்திருக்கிறார். இப்போது, பொன் மாணிக்கவேல் கணக்குப்போட்டதில் ரூ.1,000 கோடி மதிப்புள்ள சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகங்களில் மட்டும் இருக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலுள்ள கலைக்கூடம் ஒன்றில் தமிழ்நாட்டைச்சேர்ந்த 18 சிலைகள் இருக்கின்றன. உடனடியாக இந்துசமய அறநிலையத்துறையும், தமிழக போலீசாரும் கிராமப்புறங்களிலுள்ள சிறிய கோவில்கள் தொடங்கி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கோவில்களின் ஸ்தல புராணங்களையும், ஏட்டுச்சுவடுகளையும், வரலாற்று ஆய்வுகளையும் நிபுணர்களைக்கொண்டு ஆய்வுநடத்தி, எந்தெந்த ஊரில் இவ்வாறு கோவில்களில் போலி சிலைகள் வைக்கப்பட்டு, ஒரிஜினல் சிலைகள் திருடப்பட்டிருக்கின்றன என்பதை கண்டுபிடித்து, வெளிநாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ள கலைசெல்வங்கள் அனைத்தையும் மீட்டுக்கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Next Story