தபால் வழி கல்வி தரமாக வேண்டும்


தபால் வழி கல்வி தரமாக வேண்டும்
x
தினத்தந்தி 17 Nov 2017 9:30 PM GMT (Updated: 17 Nov 2017 1:19 PM GMT)

உலகில் எத்தகைய செல்வங்கள் இருந்தாலும், அதில் தலையாய செல்வம் கல்விதான். கல்வியின் மாண்பை தமிழ்நாட்டில் பண்டைய காலத்திலிருந்தே திருவள்ளுவர் தொடங்கி, அனைத்து அறிஞர் பெரு மக்களும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

லகில் எத்தகைய செல்வங்கள் இருந்தாலும், அதில் தலையாய செல்வம் கல்விதான். கல்வியின் மாண்பை தமிழ்நாட்டில் பண்டைய காலத்திலிருந்தே திருவள்ளுவர் தொடங்கி, அனைத்து அறிஞர்  பெரு மக்களும் வலியுறுத்தி இருக்கிறார்கள். திருக்குறளில் ஒரு அதிகாரமே கல்வியின் மேன்மை பற்றி இருக்கிறது. சீனாவில் உள்ள ஒரு பழையகாலத்து முதுமொழி என்ன வென்றால், ‘நீ ஒரு ஆண்டைப்பற்றி நினைத்தால் நெல் பயிரிடு, 10 ஆண்டுகளைப்பற்றி நினைத்தால் மரக்கன்று களை நடு, 100 ஆண்டுகளைப்பற்றி நினைத்தால் மக்களுக்கு கல்வி புகட்டு’ என்று இருக்கிறது. ஆக, கல்வியின் சிறப்பு உலகெங்கும் பரவி உள்ளது. எல்லோரும் கல்வி கற்கவேண்டும் என்றநோக்கில் அரசு எடுத்திருக்கும் முயற்சிகளால் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடித்துவிடுகிறார்கள். ஆனால் இடையில் தேர்ச்சி பெறாதவர்களும், குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்கூட படிப்பை முடித்தோ, முடிக்காத நிலையிலோ உள்ளவர்களும் படிப்பை விட்டுவிட்டு, வேலைக்கு போகவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள். ஆனால், வேலைக்குச்சென்றாலும் கல்வித்தாகம் குறையாத நிலையில், கல்லூரியில் சென்று படிக்காமலேயே தொலைதூரக்கல்வி என்று அழைக்கப்படும் தபால்மூலம் கல்வி கற்று ஏராளமானவர்கள் பட்டப்படிப்பு, முதுகலை படிப்பை முடித்துவிடுகிறார்கள். இவ்வாறு தபால்மூலம் படிப்பவர்கள் தங்கள் பணிகளிலும் இந்த பட்டங்களையே பயன்படுத்துகிறார்கள்.

சமீபகாலமாக இவ்வாறு தொலைதூரக்கல்வி மூலம் பட்டம்பெறும் முறைகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வரத்தொடங்கின. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் ஒரு வழக்கில், ‘பிளஸ்–2 படிக்காமல், 5–வது, 6–வது படித்தவர்கள் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி மூலம் பி.ஏ., எம்.ஏ. என்று பட்டம் பெற்றுவிட்டு, சட்டக் கல்லூரியில் சேர்ந்துவிட்டு அங்கும் சட்டப்படிப்பு தொடர்பான பட்டங்களை பெற்றுவிட்டு வக்கீலாக தொழில் செய்ய வந்துவிடுகிறார்கள். இதுகுறித்து பார்கவுன்சில் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறியுள்ளார். தற்போது சென்னை பல்கலைக்கழகம் நடத்திய ஒரு விசாரணையில், தொலைதூரக்கல்வி நிலையம் நடத்திய தேர்வுகளில் பெரிய முறைகேடு நடந்துள்ளது என்று கண்டுபிடித்து, 500 மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்திவைத்துள்ளது. இந்த விசாரணையில், ‘மும்பை போன்ற பல வெளிமாநில மையங்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு எழுதியபிறகு, வெற்று விடைத்தாள்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு அதில் அவர்கள் சரியான விடையை எழுதிக்கொடுத்து, அவர்கள் எழுதிய ஒரிஜினல் விடைத்தாள்களுக்கு பதிலாக இவை மாற்றப்படுகிறது’ என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து இப்போது விரிவான விசாரணை நடத்தப் படுகிறது.

மும்பை, ஐதராபாத், மைசூரு, கேரளாவில் உள்ள ஒரு மையம் போன்ற இடங்களில் படிப்பு மையங்களில் இத்தகைய முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகின்றன. சென்னை, திருவள்ளூர் மாவட்ட தேர்வுமையங்களில் எழுதவேண்டியவர்கள் இந்த மையங்களில் எழுதாமல், வெளிமாநில மையங்களில் எழுதி அதில் சில விடைத் தாள்களில் 10 வித்தியாசமான கையெழுத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில விடைத்தாள்களில் ஒரே மாதிரியான கையெழுத்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு விடைத்தாள்கள் மாற்றுவதற்கு ஒரு விடைத் தாளுக்கு ரூ.15 ஆயிரம் வசூலிக்கப்பட்டது அம்பலமாகி யுள்ளது. இத்தகைய முறைகேடுகள் பல ஆண்டுகளாக நடந்திருக்கும் என்று கருதப்படுகிறது. பல்கலைக்கழகங்கள் இதுபோன்ற தவறுகள் கண்டுபிடிக்கப்படுவதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளவேண்டும். உடனடியாக மத்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டு  அமைச்சகம், தமிழக உயர்கல்வித்துறை, பல்கலைக்கழகங்கள் ஒன்றாக இணைந்து இதுபோல முறைகேடுகள் இல்லாதவகையில், எவ்வாறு மிகுந்த விழிப்புடன் தேர்வுகளை நடத்தமுடியும் என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கல்லூரியில் படிக்க வாய்ப்பு இல்லாமல் பட்டம் பெற்றே தீரவேண்டும் என்ற வேட்கையில் கடினமாக உழைத்து தேர்வு எழுதி மதிப்பெண்கள் பெறுபவர்கள் மத்தியில், இவ்வாறு ரூபாய் கொடுத்து தேர்வில் வெற்றி பெறமுடியும் என்றநிலை உருவாவது நிச்சயமாக சமுதா யத்திற்கும் நல்லதல்ல, கல்வி வளர்ச்சி என்ற இலக்கை நோக்கிச்செல்லும் பயணத்திற்கும் இது ஒருபெரிய தடைக் கல்லாக அமைந்துவிடும்.

Next Story