‘நீரா’ எடுக்க அரசு ஆணை


‘நீரா’  எடுக்க  அரசு  ஆணை
x
தினத்தந்தி 19 Nov 2017 9:30 PM GMT (Updated: 19 Nov 2017 12:14 PM GMT)

தமிழ்நாட்டில் ஏற்பட்ட கடும் வறட்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

மிழ்நாட்டில் ஏற்பட்ட கடும் வறட்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். நெல், கரும்பு, வாழை மற்றும் மானாவாரி பயிர்களையும் மழையின்மையால் பயிரிட முடியாத நிலையில், தங்களிடம் இருக்கும் பனை, தென்னையாவது கைகொடுக்கும் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. இதுவரையில் இல்லாத அளவிற்கு பனைமரங்கள் பட்டுப்போயின. தென்னை மரங்களும் பெருமளவு பட்டுப்போய், ஏதோ கொஞ்சம் மீதி இருக்கிறது. தென்னை விவசாயிகள் வெகுகாலமாகவே கேரளாவைப்போல தென்னை மரத்தில் இருந்து ‘நீரா’ எடுக்க அனுமதிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். பனைமரத்தில் இருந்து எப்படி ‘பதநீர்’ எடுக்கப்படுகிறதோ, அதேபோல ‘நீரா’ என்பது வெடிக்காத தென்னம்பாளைகளிலிருந்து வடித்தெடுக்கப்படும் சிப்பி வெண்மைநிறம் உள்ள தித்திப்பான தாவர சாறாகும். ‘நீரா’ இனிமையான உடல்நல பானமுமாகும்.

‘நீரா’வில் இயற்கைரக சத்துகளும், தாது உப்புகளும், வைட்டமின்களும் ஏராளமாக உள்ளது. இதுமட்டுமல்லாமல், அதில் அதிகளவு இரும்புச்சத்தும், பாஸ்பரஸ் சத்தும், அஸ்கார்பிக் அமிலமும் அடங்கியுள்ளன. தென்னம்பாளைகள் வெடிக்கும் நிலையில் இருக்கும்போது அவைகளில் இருந்து ‘நீரா’ வடித்து எடுக்கப்படுகிறது. பாளையின் நுனியில் இருந்து ‘நீரா’ கசிந்து சொட்டுவதற்கு 12 முதல் 15 நாட்கள் பிடிக்கும். ‘நீரா’ ஆண்டு முழுவதும் கிடைக்கும். ஒரு தென்னை மரம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 லிட்டர் ‘நீரா’வைத்தரும். பதப்படுத்தப்பட்ட ‘நீரா’வின் சேமிப்புகாலம் ஒருவருடம் ஆகும். ‘நீரா’விலிருந்து தென்னைப்பாகு, தென்னை வெல்லம், தென்னை சீனி மற்றும் ‘நீரா’ தேன், ‘நீரா’ லட்டு, ‘நீரா’ கேக், ‘நீரா’ பிஸ்கட் தயாரிக்க முடியும். தமிழ்நாட்டில் 10 லட்சத்து 74 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், 8 கோடியே 92 லட்சத்து 63 ஆயிரம் தென்னை மரங்கள் இருந்தன. வறட்சியால் ஏராளமான தென்னை மரங்கள் பட்டுப்போனபிறகு இப்போது எத்தனை இருக்கின்றன என்று தெரியவில்லை. மிச்சம் மீதி தென்னைமரங்கள் பராமரிக்கப்பட வேண்டுமென்றால், தென்னை விவசாயிகளுக்கு அதிலிருந்து நீரா எடுக்க அனுமதிக்கொடுத்து வருமானம் ஈட்டவழிவகை செய்யவேண்டும். சில மாதங்களுக்கு முன்பு கோவையில் நடந்த அரசு விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘நீரா’ தயாரிக்க அனுமதி அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது என்று சொன்னார். சொன்னதை செயல்படுத்தும்விதத்தில், உடனடியாக 19.4.2017 அன்று ஆலோசனைக்கூட்டம் கூட்டி தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தமிழகஅரசினால் அனுமதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் சங்கம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தென்னை உற்பத்தியாளர்கள் இணையம் மூலம் மட்டுமே நொதிப்பு எதிர்ப்பு திரவத்தை பயன்படுத்தி ‘நீரா’ உற்பத்தியை அனுமதிப்பது என அரசு முடிவு செய்துள்ளது’ என்று அறிவித்தார். கடந்த ஜூலை மாதம் சட்டமன்றத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ‘நீரா’ பருக கொடுக்கப்பட்டு, ‘நீரா’ இறக்குவதற்கான அனுமதி அளிக்கும்வகையில் தீர்மானமும், சட்டதிருத்தமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுதொடர்பான அரசாணை வெளியிட்டால்தான் விவசாயிகளுக்கு ‘நீரா’ எடுப்பதற்கான சட்டப்பூர்வ அனுமதிக்கிடைக்கும்.

எனவே, அரசுத்துறைகள் உடனடியாக அனுமதிகொடுத்து இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டால், தென்னை விவசாயிகள் அதை வைத்துக்கொண்டு ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம்வரை வருமானம் ஈட்டமுடியும். மழைகாலத்தில் மட்டும் சற்றுக்குறைவாக கிடைக்குமேதவிர, ஜனவரி மாதம் முதல் முழுவீச்சில் ‘நீரா’ இறக்கமுடியும். எனவே, தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கும்வகையில், உடனடியாக ‘நீரா’ எடுப்பதற்கான அனுமதியளிக்கும் அரசாணையை தமிழகஅரசு பிறப்பிக்கவேண்டும் என்பது தென்னை விவசாயிகளின் வேண்டுகோளாகும். ‘நீரா’ தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் நல்லவாய்ப்பு இருக்கிறது. அரசு ஆணை வழங்கப்பட்டுவிட்டால் ஏற்கனவே முதல்–அமைச்சர் அறிவித்தபடி, ‘நீரா’பானம் உற்பத்தி மற்றும் பல்வேறு மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கு தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் விவசாயிகளுக்கு தமிழக அரசின் வேளாண்மைத்துறை பயிற்சிகள் வழங்கும்.

Next Story