7 நாட்கள் நிச்சயம் போதாது


7  நாட்கள்  நிச்சயம்  போதாது
x
தினத்தந்தி 21 Nov 2017 9:30 PM GMT (Updated: 21 Nov 2017 5:16 PM GMT)

ஒரு காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய மாநிலம் தமிழ் நாடு. கடந்த சில ஆண்டுகளாக அந்தப்பெயரை இழந்துவிடுமோ? என்ற அச்சம் உருவாகியுள்ளது.

ரு காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய மாநிலம் தமிழ் நாடு. கடந்த சில ஆண்டுகளாக அந்தப்பெயரை இழந்துவிடுமோ? என்ற அச்சம் உருவாகியுள்ளது. ‘நீட்’ தேர்வில் கூட தமிழக கல்வித்திட்டத்தில் படித்த மாணவர்களால் எளிதில் வெற்றிபெற முடியாத நிலையில், மத்திய கல்வித்திட்டமான சி.பி.எஸ்.இ.யில் படித்த மாணவர்களால் வெற்றி பெற முடிகிறது. காரணம் நமது பாடத்திட்டத்தின் தரம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் தரத்திற்கு இணையாக இல்லை என்பதுதான் எல்லோருடைய குறைபாடாகும். அந்தந்த காலத்திற்கேற்ப பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படவேண்டும். இப்போதுள்ள பாடத்திட்டத்தின்படி நமது மாணவர்கள் நன்றாக படிக்கிறார்கள். ஆனால், வேலைவாய்ப்புகள் தருகிறவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப அவர்களின் கல்வித்தரம் இல்லை. வெகுகாலமாகவே பாடத்திட்டங்கள் மாற்றப்படவில்லை. பொதுவாக பள்ளிக்கூடங்களில் உள்ள பாடத்திட்டங்கள் 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படவேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் 1 முதல் 10–ம் வகுப்புவரை பாடங்கள் மாற்றியமைக்கப்பட்டு 7 ஆண்டுகளும், 11, 12–ம் வகுப்பு பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு 12 ஆண்டுகளும் ஆகின்றன. பிளஸ்–2 படித்தவுடன்தான் ஒரு மாணவர் வேலைக்கு செல்வதற்கும், உயர்படிப்பில் சேருவதற்கும் முடிவுகளை எடுப்பார். அத்தகைய முக்கியமான பிளஸ்–2 பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆகிறது என்றால் நிச்சயமாக ஏற்புடையதல்ல.

இந்தநிலையில், இந்த ஆண்டு தமிழக கல்வித்துறை 1 முதல் 12–ம் வகுப்புவரை பாடத்தில் மாற்றம் கொண்டுவரவும், அந்த பாடத்திட்டம் தரமானதாகவும், சி.பி.எஸ்.இ. உள்பட இதர கல்விவாரியங்களின் பாடத்திட்டத்திற்கு மேலானதாகவும் இருக்கும்படி வடிவமைக்கவும், கம்ப்யூட்டர் படிப்பையும் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக இணைத்திடவும் முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், 1–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்புவரை பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை மாற்றிஅமைத்திடவும், அந்தவகையில் 1, 6, 9, 11–ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை 2018–2019–ம் கல்வி ஆண்டிலும், 2, 7, 10, 12–ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை 2019–2020–ம் கல்வி ஆண்டிலும், 3, 4, 5, 8–ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை 2020–2021–ம் கல்வி ஆண்டிலும் செயல்படுத்த அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தை உருவாக்கிட அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்களான கல்வியாளர்கள் எம்.அனந்தகிருஷ்ணன், இ.பாலகுருசாமி மற்றும் பல்வேறு வல்லுனர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு தற்போது புதிய வரைவு பாடத்திட்டத்தை
www.tnscert.org
என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஏறத்தாழ 500 பக்கங்கள் கொண்ட இந்த வரைவுத்திட்டம் 2 பகுதிகளாக ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. உடனடியாக தமிழிலும் வெளியிட வேண்டும்.

முதல்பகுதியில் 10–ம் வகுப்புவரை உள்ள பாடங்களும், 2–வது பகுதியில் 11, 12–ம் வகுப்புவரை உள்ள பாடங்களும் அடங்கியுள்ளன. இந்த வரைவு பாடத்திட்டத்தின் மீது கருத்துகள், ஆட்சேபங்கள், ஆலோசனைகள் தெரிவிக்க விரும்புகிறவர்கள் அடுத்த 7 நாட்களுக்குள் அதாவது 28–ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நிச்சயமாக 7 நாட்களில் யாராலும் 500 பக்கங்களையும் முழுமையாக படித்து கருத்துகளை சொல்ல முடியாது. மேலோட்டமாக பார்த்தால் மாணவர்களுக்கு தற்போது இருப்பதுபோல கற்பிக்கப்படும் கல்வியாகத்தான் இருக்கிறது. தாமாக கற்றுக்கொள்ளும் கல்வியாக இல்லை என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது. இதுபோல முழுமையான கருத்துகள் வெளிவர வேண்டும் என்றால் நிச்சயமாக குறைந்தபட்சம் ஒரு மாதகாலம் அவகாசம் வேண்டும். ஏனெனில், இந்த வரைவுத்திட்டத்தை கல்வி நிபுணர்கள் மட்டும் படிக்கப்போவதில்லை. பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக இவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நினைக்கும் தொழில்முனைவோர், உயர்கல்வி நிறுவன அமைப்புகள் படித்து அவர்களது எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அரசுக்கு விரிவாக சொல்லவேண்டும். அந்த கருத்துகளை எல்லாம் முழுமையாக அரசு நியமிக்கும் வல்லுனர் குழு ஆய்வு செய்த பிறகுதான், ஒரு முடிவுக்கு வந்து பாடப்புத்தகங்களை அச்சடிக்க பாடத்திட்டங்களுக்கு இறுதிவடிவம் கொடுக்க முடியும்.

Next Story