மீனவர்களை சுட்டது யார்?


மீனவர்களை சுட்டது யார்?
x
தினத்தந்தி 23 Nov 2017 9:30 PM GMT (Updated: 2017-11-23T19:18:36+05:30)

சர்வதேச மீன்வள தினமாக உலகம் முழுவதிலும் உள்ள மீனவர்களால் மகிழ்ச்சியோடு கடந்த 21–ந்தேதி கொண்டாடப்பட்டது.

ர்வதேச மீன்வள தினமாக உலகம் முழுவதிலும் உள்ள மீனவர்களால் மகிழ்ச்சியோடு கடந்த 21–ந்தேதி கொண்டாடப்பட்டது. தங்களுக்கு வாழ்வளிக்கும் மீன்வளம் பெருகவேண்டும் என்பதுதான் அவர்களின் தணியாத ஆசையாகும். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதமாக 1,076 கி.மீ. நீளமுள்ள கடற்கரை இருக்கிறது. இங்குள்ள கடலோரப்பகுதிகளில் வசிக்கும் 608 மீனவ கிராமங்களைச்சேர்ந்த, 9 லட்சத்து 85 ஆயிரம் மீனவர்களும் கடலுக்குப்போய் மீன்பிடித்தால்தான் அவர்களின் வாழ்க்கைசக்கரம் சுழலும். 13 கடலோர மாவட்டங்கள் இருந்தாலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், புதுச்சேரியில் உள்ள காரைக்கால் போன்ற மாவட்ட மீனவர்களுக்குத்தான் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பாக்ஜலசந்தியில் மீன்பிடிக்கச் செல்லும் இந்த மீனவர்கள் குறிப்பாக ராமேசுவரம் பகுதி மீனவர்கள் பல நேரங்களில் சர்வதேச கடல் எல்லையைத்தாண்டி இலங்கை பகுதிக்குள் மீன்பிடிக்க வந்துவிடுகிறார்கள் என்ற புகாரின்பேரில், இலங்கை கடற்படையால் தாக்குதல் நடத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இதுவரையில் இலங்கை கடற்படைதான் எங்களை தாக்கியது. இப்போது இந்திய கடலோர காவல்படையே எங்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டது என்று மீனவர்கள் புகார் கூறுகிறார்கள்.

ராமேசுவரத்தில் இருந்து மீனவர்கள் கடந்த 13–ந்தேதி பாக்ஜலசந்திக்கு மீன்பிடிக்க சென்றனர். ஏறத்தாழ 30 படகுகளில், இரு இரு படகுகளாக 15 ஜோடி படகுகள் மீன்பிடிக்க சென்றநேரத்தில், கடல் எல்லையைதாண்டி எங்கள் பகுதிக்குள் வந்துவிட்டீர்கள் என்று இலங்கை கடற்படை விரட்டியது. சர்வதேச கடல் எல்லைப்பகுதிக்குள் வந்தவுடன், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘ராணி அபக்கா’ என்ற கப்பல் தங்களை விரட்டியதாகவும், பயத்தில் தப்பி ஓட முயன்றபோது 2 படகுகளை தடைச்செய்யப்பட்ட இரட்டைமடி வலை மீன்பிடி முறையில் மீன்பிடித்ததாக கடலோர காவல்படை விரட்டியது. தங்களை பிடித்துவிட்டால் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறையின்படி, மீன்பிடித்ததாக ஒவ்வொரு படகுக்கும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்க வழிஇருக்கிறது என்பதால், கடலோர காவல்படை எச்சரிக்கையை மீறி வேகமாக சென்றபோது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு ஒரு படகை பிடித்து 4 கடலோர காவல்படை வீரர்கள் உள்ளே வந்து இந்தியில் பேசிக்கொண்டு தங்களை தாக்கியதாக மீனவர்கள் புகார் கூறுகிறார்கள். எங்களை தாக்கியது, துப்பாக்கிசூடு நடத்தியது கடலோர காவல்படைதான் என்று மீனவர்கள் உறுதியாக கூறுகிறார்கள். ஆனால், நாங்கள் சுடவில்லை என்றும், மீனவர்கள் பயன்படுத்திய ஒரு படகுதான் கடலோர காவல்படை கப்பல் மீது மோதியது என்றும், மீனவர்கள் கூறும் ரப்பர் குண்டுகள் கடலோர காவல்படையால் பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கடலோர காவல்படை உறுதியாக மறுத்துள்ளது.

சென்னைக்கு வந்த மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், ‘‘ராமேசுவரத்தில் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கைப்பற்றப்பட்ட தோட்டா தங்களது கிடையாது என இந்திய கடலோர காவல்படை மறுத்துள்ளது. மீனவர்களை தாக்கிய குண்டு எங்கிருந்து வந்தது எனத்தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதி அளித்துள்ளார். நிச்சயமாக இதுகுறித்த விசாரணை முடிந்து, மீனவர்களை சுட்டது யார்? என்ற தகவல் மக்களுக்கு தெரிந்தாகவேண்டும். ஆனால், கடலோர காவல்படைக்கும், தமிழக மீனவர்களுக்கும் நிச்சயமாக நல்லுறவு எப்போதும் திகழவேண்டும். மீனவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பெயரில் கடலோர காவல்படை, மீனவர்களிடம் அடையாள அட்டையையோ, மீன்பிடி உரிமையையோ, படகுகளின் பதிவு சான்றிதழையோ கேட்டு நடவடிக்கை எடுத்தால், பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு போகவே முடியாது. எனவே, இருவருக்கும் உள்ள கசப்பான உணர்வுகளை எல்லாம் மறந்து, நல்லுறவு திகழ ஒரு சமாதான கமிட்டி கூட்டம் நடத்த இருதரப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story