தொடரும் மாணவர் தற்கொலைகள்


தொடரும்  மாணவர்  தற்கொலைகள்
x
தினத்தந்தி 28 Nov 2017 9:30 PM GMT (Updated: 28 Nov 2017 1:23 PM GMT)

கற்பிப்பதில், கற்பதில் மகிழ்ச்சி. இனிமை நிலவினால்தான் பள்ளிக்கூடங்களுக்கு, கல்லூரிகளுக்கு செல்வதற்கு மாணவர்களுக்கு உற்சாகம் பிறக்கும்.

ற்பிப்பதில், கற்பதில் மகிழ்ச்சி. இனிமை நிலவினால்தான் பள்ளிக்கூடங்களுக்கு, கல்லூரிகளுக்கு செல்வதற்கு மாணவர்களுக்கு உற்சாகம் பிறக்கும். ஆனால், சிலநாட்களாக அப்படிப்பட்ட ஒருநிலை இருக்காமல் தொடர்ந்து நடக்கும் மாணவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் தமிழ் நெஞ்சங்களை பெரும் சோகத்தில் ஆழ்த்துகின்றன. அதுவும் இந்த ஒருவாரத்தில் நிறைய தற்கொலைகள், மாணவர்களுக்கு அவமானங்கள் குறித்த செய்தி ஏராளமாக வருகின்றன. சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் படித்த மாணவி தேர்வு எழுதும்போது காப்பி அடித்ததாக கூறி, தேர்வுநடைபெறும் இடத்திலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டதால் அவமானம் தாங்கமுடியாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுபோல, வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்–1 படித்து வந்த 4 மாணவிகள் ஆசிரியர்கள் திட்டியதால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். திருவாரூர் மாவட்டம் புளிக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த 8–ம் வகுப்பு மாணவர் தலையில் அதிகம் முடிவளர்த்திருந்தார் என்பதற்காக ஆசிரியையே சகமாணவர் மூலம் அதை பிளேடால் வெட்டிய சம்பவம் வெளிவந்துள்ளது.

நேற்று முன்தினம் திருவள்ளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்ய நிர்ப்பந்திக்கும் படம் வெளிவந்ததை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பெரும் கொதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று கோவை கருமத்தம்பட்டியைச் சேர்ந்த பிளஸ்–2 மாணவரை, வேதியியல் ஆசிரியை அடிக்கடி திட்டியதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் ஒரு செய்தி வந்துள்ளது. ஆக, கடந்த ஒருவாரகாலமாக இதுபோன்ற செய்திகள் தினமும் வெளிவந்துகொண்டிருக்கும் இந்தவேளையில், மாணவர்களின் தற்கொலை உணர்வுகள் காட்டுத்தீபோல பரவிவிடக்கூடாது என்றவகையில், தமிழக அரசு கல்வித்துறை உடனடியாக அதிவேக நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டது. பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்–மாணவர் உறவு மேம்படவேண்டும். மாணவர்களுக்கு தாயாய், தந்தையாய் இருக்கவேண்டிய ஆசிரியர்கள், சர்க்கசில் மிருகங்களை சாட்டையால் அடிக்கும் ரிங்மாஸ்டர் போல செயல்படக்கூடாது.

மாணவர்களை கண்டிப்பது என்றாலும், சகமாணவர்கள் முன்னால் கண்டிப்பதை கூடுமானவரை தவிர்த்து, தனியாக கூப்பிட்டு கண்டிக்கலாம். அதுவும் அன்புகலந்த கண்டிப்பாக இருக்கவேண்டும். பெற்றோருடைய அணுகுமுறைகளும் மாறவேண்டும். ஒரு மாணவர் குறைந்த மதிப்பெண் எடுத்தால் ஆசிரியர்களும் கண்டிக்கிறார்கள், வீட்டுக்கு சென்றால் பெற்றோர்களும் கண்டிக்கிறார்கள். எங்கு சென்றாலும் மாணவருக்கு ஆதரவு இல்லாதநிலை இருக்கிறது. ஆக, நம் மீதுதான் குற்றம் இருக்கிறதோ? என்ற தாழ்வுநிலையும், இனியும் உயிர்வாழவேண்டுமா? என்ற தன்னம்பிக்கை இல்லாத நிலையும் மாணவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. இந்தமுறை மார்க் குறைவாக எடுத்துவிட்டாய் பரவாயில்லை, அடுத்தமுறை அதிக மதிப்பெண்கள் எடுக்கவேண்டும். நீ நினைத்தால், உழைத்தால் நிச்சயமாக முடியும் என்று உற்சாகப்படுத்தும் மனோபக்குவம் வேண்டும். மாணவர்களுக்கும் பலவீனமான மனம் இருக்கக்கூடாது. எதையும் தாங்கும் இதயம், எதையும் எதிர்நோக்கும் உணர்வு வேண்டும். ஆசிரியர்களும், பெற்றோர்களும் கண்டித்தால் நமக்கு நல்லதுக்குதானே சொல்கிறார்கள் என்று ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவத்தை வளர்க்கவேண்டும். மாணவர்களை அதுவும் தகவல் தொழில்நுட்பத்தில் மிகவும் திறமையை வளர்த்துக்கொண்ட மாணவர் சமுதாயத்தை எவ்வாறு கையாளவேண்டும் என்ற அணுகுமுறையை பாசமாக, அரவணைப்பாக மாற்றும் வகையிலான கவுன்சிலிங்கை அவ்வப்போது பள்ளிக்கூடங்களில் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக வழங்கவேண்டும். மாணவர்களுக்கும் மனோதைரியத்தை ஊட்டும்வகையில் கவுன்சிலிங் வழங்கவேண்டும்.

பள்ளிக்கூடங்களில் மாணவர்களை பெருக்கச்சொல்வது, கழிவறையை சுத்தம்செய்ய சொல்வது, தலைமுடியை வெட்டிவிடுவது போன்ற மனதைப்புண்படுத்தும் நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ளக்கூடாது. ஏனெனில், இப்போதைய மாணவர்கள் எல்லாம் சுயமரியாதைமிக்கவர்கள். இதையெல்லாம் பெரிய அவமானமாக நினைக்கிறார்கள். வெகுகாலமாக பலதரப்பிலிருந்து விடுக்கப்பட்டுவரும் கோரிக்கையான மனநல ஆலோசகர்களை ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் மாதம் ஒருமுறை அனுப்பி, இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை மாணவர்களுக்கும், ஒவ்வொரு பிரச்சினையையும் எவ்வாறு கையாளவேண்டும் என்ற பயிற்சியை பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கண்டிப்பாக வழங்கவேண்டும்.

Next Story