மலிவு விலையில் வெளிநாட்டு மணல்


மலிவு  விலையில்  வெளிநாட்டு மணல்
x
தினத்தந்தி 30 Nov 2017 9:30 PM GMT (Updated: 30 Nov 2017 1:31 PM GMT)

கடந்த பல ஆண்டுகளாகவே, ஆறுகளில் தொடர்ந்து மணல் கொள்ளையடிப்பது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறது.

டந்த பல ஆண்டுகளாகவே, ஆறுகளில் தொடர்ந்து மணல் கொள்ளையடிப்பது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் உத்தரவுப்படி, ஆற்றுப்படுகைகளில் 3 அடி ஆழத்திற்கு மட்டுமே மணல் எடுக்கவேண்டும். ஆனால், மணல் எடுப்பவர்கள் சட்டவிரோதமாக 25 அடி முதல் 30 அடி ஆழம்வரை மணல் எடுப்பதால் ஆறுகள் கட்டாந்தரையாகிவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மழைபெய்து ஆறுகளில் வேகமாக தண்ணீர் ஓடிவரும்போது மணல் இல்லாததால், எந்தவித பிடிப்பும் இன்றி தண்ணீர் நிற்காமலும், பூமிக்கு அடியில் செல்லாமலும் நேராக கடலில் கலந்துவிடுவதால் நிலத்தடிநீர் பெருகுவதற்கும் வழியில்லாமல் பல இடங்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. வெகுகாலமாகவே, மணல் கொள்ளையை தடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் பலத்த குரல்கள் எழும்பி வருகின்றன. இந்தப்பிரச்சினை வந்ததே 1990–ம் ஆண்டுக்குப்பிறகுதான். ஏனெனில், அதற்குமுன்பு மண்வெட்டியால் வெட்டித்தான் மணலை சேகரித்து மாட்டு வண்டிகள், லாரிகள் மூலம் எடுத்துச்சென்றார்கள்.

இந்த வி‌ஷயத்தில் நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிபதி ஆர்.மகாதேவன் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் அடுத்த 6 மாதங்களுக்குள் மூடிவிடவேண்டும். புதிய மணல் குவாரிகள் எதையும் திறக்கக்கூடாது. மணல் குவாரிகள் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும்வகையில் கருங்கல் ஜல்லிக்குவாரிகளைத்தவிர, கிரானைட் போன்ற எல்லா கனிமவள குவாரிகளையும் மூடவேண்டும். மணல் தட்டுப்பாட்டைப்போக்க, வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யலாம் என்பது உள்பட சட்டவிரோத மணல் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க எடுக்கவேண்டிய பல நடவடிக்கைகள் அடங்கிய உத்தரவுகளையும் பிறப்பித்தார். இப்போது உடனடியாக மணல் குவாரிகளை மூடவேண்டிய அவசியம் இல்லையென்றாலும், 6 மாதங்களுக்குள் கண்டிப்பாக மூடவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் கட்டுமானத்தொழில் பெருமளவில் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது 10 கோடி சதுரஅடி அளவில் வீட்டுவசதி திட்டங்கள், வணிக நிறுவன கட்டிடங்கள் மற்றும் பொதுமக்களுக்கான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

தினமும் 20 ஆயிரம் லோடு மணல் தேவை. தற்போது தமிழ்நாட்டில் உள்ள 19 மணல் குவாரிகளிலிருந்து 4 ஆயிரம் லோடும், ‘எம் சாண்ட்’ என்று அழைக்கப்படும் செயற்கை மணலை பொறுத்தமட்டில், 15 ஆயிரம் லோடுகளும் கிடைக்கிறது என்று கட்டுமான தொழிலில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், பொதுப்பணித்துறையை பொறுத்தமட்டில், தினசரி 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் மணல் லோடு தேவை என்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவிக்கும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. இவர்களது நிலையை கருத்தில்கொண்டு, அதற்குரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும். மணல்கொள்ளை நிச்சயமாக தடுத்து நிறுத்தப்படவேண்டும். ஆனால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டால் கட்டுமானத்தொழில் மட்டுமல்லாமல், சிமெண்ட் உற்பத்தி, இரும்பு, செங்கல், மின்சார சாதனபொருட்கள் போன்ற பல்வேறு வகையான கட்டுமான பொருட்களின் உற்பத்தியும் பாதிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த பொருட்களின் அடிப்படையிலான வர்த்தகமும் பெரிதும் நிலைகுலைந்துவிடும். சரக்கு மற்றும் சேவைவரியை நம்பியிருக்கும் அரசாங்கத்திற்கும் வருமானம் கிடைக்காமல் போய்விடும். இதற்கிடையில், பிலிப்பைன்ஸ், கம்போடியா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்தால், இப்போது ஆற்றுமணல் ஒரு கனஅடிக்கு ரூ.140 என்பதற்கு பதிலாக, அதிகபட்சம் ரூ.90–க்கு வெளிநாட்டு மணல் கிடைக்க வழிஇருக்கிறது. இவ்வாறு மணல் இறக்குமதி செய்ய அரசும் முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கவேண்டும். தனியாருக்கும் எல்லா சலுகைகளையும் அளித்து, கட்டுப்பாடு இல்லாமல் மணல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கவேண்டும். பொதுப்பணித்துறையின் தர ஒப்புதலைப்பெற்ற நல்ல தரமான செயற்கை மணல் உற்பத்தியையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Next Story