அதிகாரிகள் நினைத்தால் ஆக்கிரமிப்புகளை அகற்றலாம்


அதிகாரிகள் நினைத்தால் ஆக்கிரமிப்புகளை அகற்றலாம்
x
தினத்தந்தி 1 Dec 2017 9:30 PM GMT (Updated: 2017-12-01T18:30:41+05:30)

அண்மையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் ஆக்கிரமிப்பு களை அகற்றுவதற்கு பாராட்டப்பட வேண்டிய ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ண்மையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பாராட்டப்பட வேண்டிய ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடர்பாக நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பேசும்போது, ‘அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து நீர்நிலைகளில் இருக்கின்ற ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறினார். ஆக, முதல்–அமைச்சர் உத்தரவை பிறப்பித்துவிட்டார். இனி அதை நிறைவேற்றுவது அதிகாரிகளின் கையில்தான் இருக்கின்றது. தமிழ்நாட்டில் 39 ஆயிரத்து 202 ஏரிகள் உள்ளன. இதில் 14 ஆயிரத்து 98 ஏரிகள் தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பெரிய ஏரிகள். இதைத்தவிர ஏராளமான சிறு சிறு குளங்களும் எல்லா ஊர்களிலும் இருக்கின்றன. குட்டைகளும் இருக் கின்றன. இவையெல்லாம் அரசு பதிவேடுகளின்படி, எவ்வளவு பரப்பளவில் இருக்கவேண்டுமோ அந்த பரப்பளவில் இப்போது இல்லை. பெரும்பாலும் அனைத்து ஏரிகளும், குளங்களும் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளன. எல்லா இடங்களிலும் கட்டிடங்கள்தான் வானுயர்ந்து நிற்கின்றன.

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் செய்வதில் மட்டும் கட்சி வேறுபாடோ, சாதி, மத வேறுபாடோ, இன வேறுபாடோ எதுவும் இல்லை. எவ்வளவு ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன? என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு, சென்னை அருகே உள்ள வில்லிவாக்கத்தில் உள்ள ஏரி 1972–ம் ஆண்டு 214 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. ஆனால், இப்போதோ 36.34 ஏக்கர் பரப்பளவில்தான் இருக்கிறது. 105 ஏக்கர் பரப்பளவில் இருந்த ராஜகீழ்ப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகளால்

10 ஏக்கராகி, புதிதாக 3 வார்டுகள் உருவாகிவிட்டன. இதுபோல, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரிகளையும் அரசு பதிவேடுகளின்படி கணக்கிட்டால் அதிலுள்ள ஆக்கிரமிப்புகளை நிச்சயமாக அரசு கணக்கெடுக்க முடியும். 2010–11–ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைஉணர் தொடர்பு நிறுவனம் மூலமாக ஆக்கிர மிப்புகளை கண்டுபிடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த நிறுவன நிபுணர்கள் 100 நாள் வேலை திட்டத்தின் பொறியாளர்கள், ஊரக வளர்ச்சித்துறையின் பொறியாளர்கள் போன்ற அதிகாரி களுக்கு தொலை உணர் செயற்கோள் உதவியுடன் நவீன தொழில்நுட்பம் மூலம் ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அடையாளம் காண பயிற்சி அளித்தனர். ஆனால், இந்த பணிகள் தொடர்ந்து முறையாக நடக்கவில்லை. சமீபத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிருபர்களிடம் பேசும்போது, ‘நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு களெல்லாம் இப்போது ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள் அல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளாக இருக் கின்றன’ என்று குறிப்பிட்டார். ஆனால் ஆக்கிரமிப்புகளை பொறுத்தமட்டில், எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது.

27.11.2015–ல் அப்போது சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா வழங்கிய ஒரு தீர்ப்பில், ‘நீர்நிலை களில் எத்தனை ஆண்டுகளாக வசித்து வந்தாலும், அந்த இடத்தை சொந்தம் என்று சொல்லிக்கொள்ளும் உரிமை யாருக்கும் கிடையாது. எந்த நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தாலும் அவை அகற்றப்படுவது அவசர அவசியம். இதற்கான நிர்வாக உத்தரவுகளை அரசு பிறப்பிக்கவேண்டும். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, நீர்நிலைகளை அதன் முந்தைய நிலைக்கு கொண்டு வருவதற்கு இதுவே சரியான தருணம்’ என்று தீர்ப்பு அளித்திருந்தார்கள். இதில் தயவு தாட்சண்யமே பார்க்கக்கூடாது. ஆக்கிரமிப்புகளுக்கு துணைபோன அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசு உடனடியாக அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுத்தால் எந்தவித ஆக்கிரமிப்புகளையும் அகற்றமுடியும். அதிகாரிகளின் கையில் நீதிமன்ற தீர்ப்பு, அரசு உத்தரவு என்ற ஆயுதங்கள் இருக்கின்றன. ஆக்கிர மிப்புகளை அகற்ற அதிகாரிகள் துணிச்சலான நடவடிக் கைகள் எடுக்கவேண்டும். அரசு அதற்கு துணை நிற்க வேண்டும்.

Next Story