இன்று கடற்படை நாள்


இன்று கடற்படை நாள்
x
தினத்தந்தி 3 Dec 2017 8:49 PM GMT (Updated: 2017-12-04T02:19:43+05:30)

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் ‘மனதின் குரல்’ என்ற தலைப்பில் வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் ‘மனதின் குரல்’ என்ற தலைப்பில் வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அந்த உரையில், நாட்டு மக்களுக்கு தெரியவேண்டிய பல செய்திகளை கூறுவது வழக்கம். நாட்டு மக்கள் நினைவில் கொள்ளவேண்டிய பல முக்கிய தினங்கள் அதில் இடம்பெறும். அந்தவகையில், கடந்த 26.11.2017 அன்று ஆற்றிய உரையில், இந்த நாட்டை காப்பாற்றும் புனித பணியில் ஈடுபட்டுள்ள கடற்படைபற்றி பெருமையோடு குறிப்பிட்டார்.

என் பிரியமான நாட்டு மக்களே, டிசம்பர் மாதம் 4-ந் தேதி நாம் அனைவரும் கடற்படை நாளை கொண்டாட இருக்கிறோம். இந்திய கடற்படை, நமது கடலோரங்களை காத்து பாதுகாப்பளிக்கிறது. நான் கடற்படையோடு இணைந்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமது நதிகளும், கடலும், பொருளாதாரம், போர்த்திறம் என இருவகைகளிலும் மகத்துவம் வாய்ந்தவை. ஒட்டுமொத்த உலகிற்கும் இதுவே நமது நுழைவாயில். இந்த தேசத்திற்கும், பூமியின் பெருங்கடல்களுக்குமிடையே பிரிக்க முடியாததொரு பெரும் தொடர்பு இருக்கிறது. நாம் வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப்பார்த்தோமேயானால், சுமார் 800 முதல் 900 ஆண்டுகளுக்கு முன்பாக சோழர்களின் கடற்படை, மிகச்சக்திவாய்ந்த கடற்படைகளுள் ஒன்றாகக் கருதப்பட்டது. சோழ சாம்ராஜ்ஜியத்தின் விரிவாக்கத்தில், அதை பொருளாதார பெருஞ்சக்தியாக ஆக்குவதில் அவர்களின் கடற்படையின் பெரும்பங்கு இருந்தது. சோழர்களின் கடற்படை படையெடுப்புக்கள், ஆய்வுப்பயணங்களின் பல எடுத்துக்காட்டுகள், சங்க இலக்கியங்களில் இன்றும் காணப்படுகின்றன. உலகின் பெரும்பாலான கடற்படைகள் பலகாலம் கழித்துத்தான் போர்ப்பணிகளில் பெண்களை அனுமதித்திருந்தன. ஆனால் சோழர்களின் கடற்படையில், சுமார் 800 முதல் 900 ஆண்டுகளுக்கு முன்பாகவே, மிகப்பெரிய எண்ணிக்கையில் பெண்கள் முக்கியமான பங்களிப்பு நல்கியிருக்கிறார்கள். பெண்கள் போரிலும்கூட ஈடுபட்டார்கள். சோழ ஆட்சியாளரிடத்தில் கப்பல் கட்டுமானம் தொடர்பான நுணுக்கமான தொழில்நுட்பம் இருந்தது என்று புகழ்மாலை சூட்டினார்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ந் தேதி கடற்படைநாள் கொண்டாடப்படுவதன் காரணம், 1971-ம் ஆண்டு இதேநாளில் தான் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்தபோரின் உச்சக்கட்டத்தின்போது, இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 ஏவுகணை படகுகளான ஐ.என்.எஸ். நிப்பட், ஐ.என்.எஸ். நிர்காட், ஐ.என்.எஸ். வீர் ஆகிய படகுகள் கராச்சி துறைமுகத்துக்குள் சென்று எண்ணெய் கிடங்குகளையும், 500 பாகிஸ்தான் வீரர்களையும் அழித்தது. பாகிஸ்தானின் முழுசக்தியே கராச்சி துறைமுகம்தான். இந்தத்துறைமுகத்தை அழிக்க குஜராத் மாநிலம் ஒகா துறைமுகத்திலிருந்து டிசம்பர் 4-ந் தேதி பகல் 2 மணியளவில் புறப்பட்டு நள்ளிரவில் கராச்சி துறைமுகத்தை நெருங்கி 90 நிமிடங்களில் 6 ஏவுகணைகளை வீசி, 4 பாகிஸ்தான் கப்பல்கள், எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை அழித்து விட்டு, எந்தவித சேதமில்லாமல் மும்பைக்கு திரும்பியது. இந்தநாள் தான் கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது. சோழர்கள் காலத்தில் கடற்படையில் ஏராளமான பெண்கள் பணியாற்றி வழிகாட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள். இதுபோல, இன்றும் இந்திய கடற்படையில் பெண்கள் நிறையபேர் ஆர்வத்தோடு சேருகிறார்கள்.

தற்போது நம்மிடம் ஒரு விமானம் தாங்கி கப்பல்தான் இருக்கிறது. நமது கடற்படை இன்னும் வலுப்படுத்தப்படவேண்டும். ஏனெனில், இந்தியா தீபகற்ப நாடாகும். நம் நாட்டுக்கு 7,516.6 கி.மீட்டர் நீளமுள்ள கடல்பகுதிகள் இருக்கின்றன. எதிரிகளிடமிருந்து நாட்டை காக்கும்பணி மட்டுமல்லாமல், பேரிடர் நேரங்களில் கடற்படை மீட்புப்பணிகளிலும் ஈடுபட்டு பல மீனவர்களின் உயிர்களை காப்பாற்றுகிறது. அதுபோல, நாட்டுக்காக தியாகம் செய்த கடற்படை வீரர்களின் தியாகங்களும் போற்றப்படவேண்டும். 1971-ம் ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி பாகிஸ்தான் போரின்போது எதிரி நீர்மூழ்கி கப்பலால் தாக்கப்பட்டு, இந்திய கப்பலான ஐ.என்.எஸ். குக்ரி மூழ்கிக்கொண்டிருந்த நேரத்தில் கப்பலின் கேப்டன் மகேந்திரநாத் முல்லா தன் உயிரைக்காப்பாற்ற நினைக்காமல், என் கப்பலோடு நான் மூழ்கிசாகிறேன் என்று உயிரைவிட்ட தியாகமும் இன்றையநாளில் போற்றப்படவேண்டும். 

Next Story