நேரு குடும்பத்தில் இருந்து 6–வது தலைவர்


நேரு  குடும்பத்தில்  இருந்து  6–வது  தலைவர்
x
தினத்தந்தி 5 Dec 2017 9:30 PM GMT (Updated: 2017-12-05T22:51:57+05:30)

ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்தபோது, நாட்டின் விடுதலைக்காக பாடுபட 1885–ம் ஆண்டு காங்கிரஸ் பேரியக்கம் உதயமானது.

ங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்தபோது, நாட்டின் விடுதலைக்காக பாடுபட 1885–ம் ஆண்டு காங்கிரஸ் பேரியக்கம் உதயமானது. நீண்டநெடிய பாரம்பரியமுள்ள காங்கிரஸ் கட்சியில் 65–வது முறையாக நடந்த தேர்தலில் நேரு குடும்பத்திலிருந்து 6–வது தலைவராக தனது 47 வயதில் அக்கட்சியின் துணைத்தலைவராக இருக்கும் ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி போன்று இவரும் இளம்வயதிலேயே அந்த பொறுப்பை ஏற்கிறார். ராகுல்காந்திக்கு ஆதரவாக 89 வேட்புமனுக்கள், 890 நிர்வாகிகளால் முன்மொழியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து அவர் பெயரை முன்மொழிந்து 40 பேர்களால், 4 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடாத நிலையில், ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. என்றாலும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அட்டவணைப்படி, வரும் 11–ந்தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெறுவதற்கான கடைசிநாளாகும். எனவே, அன்று மாலைதான் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல்காந்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறார்.

1928–ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அக்கட்சியின் தலைவராக மோதிலால் நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத்தொடர்ந்து, அவரது மகனான ஜவஹர்லால் நேரு 1929–ம் ஆண்டு லாகூரில் நடந்த அக்கட்சி மாநாட்டில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குப்பிறகு, அவரது மகள் இந்திரா காந்தி, அவர் மறைவுக்குப்பிறகு அவரது மகன் ராஜீவ்காந்தி, அவரின் இறப்புக்குப்பிறகு அவரது மனைவி சோனியாகாந்தி என வாழையடி வாழையாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை அலங்கரித்து வருகின்றனர். கடந்த 19 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சித்தலைவராக சோனியாகாந்தி இருந்து வந்தார். 1989–ம் ஆண்டுக்குப்பிறகு அந்தக்குடும்பத்தில் இருந்து யாரும் அரசு பதவியில் இருந்ததில்லை. அதாவது, ராஜீவ்காந்திக்குப்பிறகு அந்தக்குடும்பத்தில் இருந்து பிரதமராக யாரும் வரவில்லை.

ராகுல்காந்தி, 2004–ம் ஆண்டு முதல் 3 முறை அமேதி தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2007–ம் ஆண்டு கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். 2013–ம் ஆண்டு கட்சியின் துணைத்தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அரசியல் அனுபவம் என்பது 13 ஆண்டுகளாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கு இது சிக்கலான நேரம். பெரிய சவாலை எதிர்நோக்கி இருக்கிறது. அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் என்றாலும், 2–வது இடத்தில் இருந்தால் மீண்டும் எழுந்திருக்க முடியும். ஆனால், அதற்கும் கீழேசென்றுவிட்டால் மீண்டும் வெற்றிவாகை சூடுவது கஷ்டம். 1967–ம் ஆண்டு முதல் 1984–ம் ஆண்டுவரை 3 மாநில சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 3–வது இடத்திற்கும், அதற்கு கீழேயும் சென்றுவிட்டது. 1989–ம் ஆண்டுக்குப்பிறகு உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அக்கட்சி 3–வது, 4–வது இடத்திற்கு பின்தங்கியது. 2014–ம் ஆண்டுக்குப்பிறகு 10 மாநில சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பின்னுக்கு சென்றுவிட்டது. அதே ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. இப்படியொரு நெருக்கடியான நிலையில், குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த சிலநாட்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. கர்நாடகம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.

2019–ம் ஆண்டு பாராளுமன்ற பொதுதேர்தலும் நடைபெற இருக்கிறது. அந்த சமயத்தில், ஒத்தகருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தங்கள் அணியை வலுப்படுத்தும் பொறுப்பு ராகுல்காந்திக்கு உள்ளது. அதுமட்டுமல்லாது, அவர்களுடன் தொகுதி பங்கீட்டையும் சுமுகமாக பேசி முடித்தால்தான் கூட்டணி வளையத்திற்குள் அவர்களை இழுக்க முடியும். எனவே, இந்த தேர்தல் முடிவுகள்தான், காங்கிரஸ் கட்சி மற்றும் அதற்கு தலைமையேற்க போகும் ராகுல்காந்தியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.

Next Story