பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம்


பாதிக்கப்பட்டவர்களுக்கு  கூடுதல்  நிவாரணம்
x
தினத்தந்தி 7 Dec 2017 9:30 PM GMT (Updated: 7 Dec 2017 6:02 PM GMT)

கடந்த மாதம் 29–ந்தேதி நள்ளிரவு தொடங்கி 30–ந்தேதி வரை வீசிய ஒகி புயல், கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

டந்த மாதம் 29–ந்தேதி நள்ளிரவு தொடங்கி 30–ந்தேதி வரை வீசிய ஒகி புயல், கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தப்பகுதி மீனவர்கள், மற்ற சில மாவட்ட மீனவர்களைப்போல கடலில் மீன்பிடிக்கச்சென்று ஒரேநாளில் திரும்பி வருவதில்லை. ஏறத்தாழ 1,000 கடல்மைல் தூரம்வரை சென்று, ஒருமாத காலம் அல்லது 45 நாட்கள் வரை கடலிலேயே தங்கி மீன்பிடித்துவரும் ஆற்றல் படைத்தவர்கள். இந்தநிலையில், திடீரென்று வீசிய ஒகி புயலால் ஏராளமானவர்கள் கடலில் தத்தளித்தனர். இந்த புயல் பற்றிய எச்சரிக்கை செய்தியை, 29–ந்தேதி பகல் 11.30 மணிக்கு தமிழக, கேரளா, லட்சத்தீவு அரசுகளுக்கு இந்திய வானிலைமையம் அனுப்பியதாக கூறுகிறார்கள். 2016–ம் ஆண்டு வார்தா புயல் கடற்கரையில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் உருவானதால் முன்கூட்டியே எச்சரிக்கை செய்தியை அனுப்பமுடிந்தது. ஆனால், இந்த ஒகி புயல் கடற்கரையோரம் உருவானதால் முன்கூட்டியே எச்சரிக்கை செய்தி அனுப்பமுடியவில்லை என்று வானிலை மையம் சொல்கிறது. இவர்கள் எச்சரிக்கையை தெரிவித்தநேரத்தில் கன்னியாகுமரி, கேரளா மீனவர்கள் பல நூற்றுக்கணக்கான கடல்மைல் தூரத்தை தாண்டிவிட்டதால் அவர்களுக்கு இந்த தகவலை தெரிவித்து, திரும்பிவர செய்ய முடியவில்லை.

இந்திய கடற்படை, கடலோர காவல்படை போன்றவைகள் தினமும் மீனவர்களை கடலில் தேடி மீட்டுவருகிறது. பல மீனவபடகுகள் தொலைதூரங்களில் ஒதுங்கியிருந்ததையடுத்து திரும்ப கொண்டுவரப்படுகிறது. இந்திய கடலோர காவல்படை 234 மீனவர்களை மீட்டதாக அறிவித்துள்ளது. ஆனால் இன்னமும் 75 மோட்டார் படகுகளும், 5 நாட்டு படகுகளும் கரைக்கு திரும்பவில்லை. மேலும் அதில் 1,013 மீனவர்கள் இருந்தார்கள் என்று மீனவர் சங்கத்தலைவர் ஜஸ்டின் ஆண்டனி கூறுகிறார். இந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களெல்லாம் மீனவர்கள் எங்காவது தொலைதூரத்தில் ஒதுங்கியிருக்கமாட்டார்களா?, அவர்களை கடலில் தேடும் கடற்படை, கடலோர காவல்படையினர் மீட்டுக்கொண்டுவரமாட்டார்களா? என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

கடலில் பலியான மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆனால் கேரளா அமைச்சரவைக்கூட்டத்தில் கடலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவது என்றும், காயமடைந்த மீனவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் முடிவு செய்துள்ளது. இந்த புயல் காரணமாக கடலில் மீன்பிடிக்க செல்லமுடியாத குடும்பங்களில் உள்ள குழந்தைகள் உள்பட ஒவ்வொரு நபருக்கும் 7 நாட்களுக்கு தினமும் பெரியவர்களுக்கு ரூ.60 என்றும், குழந்தைகளுக்கு ரூ.45 வழங்குவது என்றும், ஒருமாத காலத்திற்கு அந்த குடும்பங்களுக்கு இலவசமாக ரே‌ஷன் பொருட்கள் வழங்குவது என்றும் கேரளா அரசு அறிவித்துள்ளது. இதுதவிர, படகு, மீன்பிடி வலையை இழந்தவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. இறந்த மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி, தொழிற்பயிற்சி வழங்கப்படும் என்பதுபோன்ற பல சலுகைகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. கேரளா அரசு கணக்குப்படி, 92 கேரள மீனவர்களை இன்னமும் காணவில்லை. தமிழக அரசும் உடனடியாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான உரிய இழப்பீட்டை கேரளாவைப்போல வழங்கவேண்டும். முதல்கட்டமாக ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலங்களில் உள்ள விவசாய நிலங்களில் வாழை, ரப்பர் போன்ற பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதுதவிர, வருமானம் ஈட்டித்தரும் வாழ்வாதாரமான தேக்கு, பலா போன்ற மரங்களெல்லாம் சாய்ந்துவிட்டன. இந்த சேதங்களையெல்லாம் விரைவில் கணக்கெடுத்து உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் வழங்கவேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகள் என எல்லோருக்கும் உரிய இழப்புகளை கணக்கெடுக்கும் பணி முழுவீச்சில் நடைபெறவேண்டும். 7 ஆண்டுகள் காணாமல் போனால்தான் இறந்தவர்களாக கருதப்படுபவர்கள் என்ற சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவரவேண்டும். சேத கணக்கீடுகளை விரைவில் முடித்து, மத்திய அரசாங்கத்திடமும் உரிய நிவாரணம் கோரவேண்டும்.

Next Story