குஜராத்தில் இன்று முதல்கட்ட தேர்தல்


குஜராத்தில் இன்று  முதல்கட்ட தேர்தல்
x
தினத்தந்தி 8 Dec 2017 9:45 PM GMT (Updated: 2017-12-09T03:10:59+05:30)

ஒட்டுமொத்த இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமே குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலை மிகவும் ஆர்வத் தோடு உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.

ட்டுமொத்த இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமே குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலை மிகவும் ஆர்வத் தோடு உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கியக்காரணம், குஜராத் மாநிலம் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமாகும். இங்கு நான்கு முறை தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி முதல்–மந்திரியாக இருந்திருக்கிறார். மோடிக்கு என்று அங்கு தனிசெல்வாக்கு உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தற்போது இமாசலபிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கு தேர்தல் என்றாலும், குஜராத் மாநிலத்தேர்தல், மத்திய அரசாங் கத்தை நடத்தும் மோடி அரசாங்கத்தின் செல்வாக்கு குறித்த ஒரு பொதுவாக்கெடுப்பாகவே கருதப்படுகிறது. 2012–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 182 இடங்களில், பா.ஜ.க. 115 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும், குஜராத் பரிவர்த்தன் கட்சி 2 இடங்களிலும், ஐக்கிய ஜனதாதளம் 1 இடத்திலும், சுயேச்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது.

பா.ஜ.க. 1995–ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆட்சியில் இருந்துவருகிறது. முதல்கட்டமாக 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் இன்றும், மீதமுள்ள 93 தொகுதி களில் 14–ந்தேதியும் தேர்தல் நடக்கிறது. இந்த 89 தொகுதி களும், சவுராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தில் உள்ள பகுதிகளாகும். பிரதமரின் சொந்த தொகுதியான மணிநகர் தொகுதியில் 14–ந்தேதிதான் தேர்தல் நடக்கிறது. மணிநகர் தொகுதியில் 20 ஆயிரம் தமிழ் குடும்பங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்டங்களில் இருந்து குடியேறியவர்கள். குஜராத் மாநிலத்தை பொறுத்தமட்டில், தமிழக மக்களின் கருத்து குஜராத்தில் உள்ள அரசியல்வாதிகள் வித்தியாசமானவர்கள் என்பதாகும். ஒரு எம்.எல்.ஏ.வையோ, எம்.பி.யையோ, ஏன் மாவட்ட கலெக்டரையோ எளிதில் எல்லோரும் சென்று பார்க்கமுடியும் என்கிறார்கள். குஜராத் தேர்தலையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி 14 பேரணிகளில் கலந்துகொண்டு தேர்தல் பிரசாரத்தில் பேசி இருக்கிறார். ராகுல்காந்தி ஒரு வாரத்திற்குமேல் சவுராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற் கொண்டார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. விவசாயிகளுக்கு கடன் ரத்து, கல்லூரி மாணவர்களுக்கு லேப்–டாப், ஸ்மார்ட் போன், வரிகுறைப்பு, மின்சாரக்கட்டணம் குறைப்பு, 25 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக ரூ.32 ஆயிரம் கோடியில் ஒரு திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை உள்பட பல வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார்கள்.

பா.ஜ.க. சார்பில் எந்தவித தேர்தல் வாக்குறுதிகளையும் கொடுக்கவில்லை. மாறாக எல்லா கூட்டங்களிலும் கடந்த 22 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் குஜராத் பெற்றுள்ள வளர்ச்சியும், முன்னேற்றமும், ஊழல் இல்லாத ஆட்சியும் தொடரவேண்டுமென்றால் பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள். இந்த மாநிலத்திலிருந்து பிரதமர் ஆகியுள்ள மோடியின் கரத்தை வலுப்படுத்த பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள் என்பதுபோன்ற தீவிர பிரசாரங்களைத்தான் செய்துவரு கிறார்கள். காங்கிரசை பொறுத்தமட்டில், 14 சதவீதம் உள்ள பட்டேல் சமுதாய தலைவர் ஹர்திக் பட்டேல், இதர பிற்படுத்தப்பட்டோர் சமுதாய தலைவர், தலித் தலைவர் ஆகியோர் தங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதால், தங்களுக்கு வெற்றி நிச்சயம் என்று கருதுகிறார்கள். பா.ஜ.க.வை பொறுத்தமட்டில், எந்த சமுதாய தலைவர்கள் சென்றாலும், அந்த இனமக்கள் நிச்சயம் பா.ஜ.க. பக்கம்தான் என்று சொல்கிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் ராகுல்காந்தி என்றாலும் சரி, பிரதமர் நரேந்திரமோடி என்றாலும் சரி, குஜராத் தேர்தல் என்பது ஒரு பெரிய திருப்புமுனையாகவே அமையும். யார் வெற்றிபெற்றாலும், அடுத்த ஆண்டு நடைபெறப்போகும் 4 மாநில சட்டசபை தேர்தல்களிலும், 2019–ம் ஆண்டு நடைபெறப்போகிற பாராளுமன்ற தேர்தலிலும் அவர்கள் பிரசாரம் வலுப்பெற ஒரு பெரிய உந்துசக்தியாக இந்த தேர்தல் முடிவுகள் விளங்கும்.

Next Story