போகும் பாதை தூரமே!


போகும் பாதை தூரமே!
x
தினத்தந்தி 10 Dec 2017 9:30 PM GMT (Updated: 2017-12-10T18:37:51+05:30)

தொழில், பொருளாதாரம், கல்வி, மருத்துவம் போன்ற பல வளர்ச்சிகளில் பிறமாநிலங்கள் எல்லாம் பின்பற்றவேண்டிய அளவில் ஆஹா! ஓஹோ! என்று வளர்ந்துவந்த தமிழ்நாடு, இப்போது அந்த நிலைமையில் இருந்து சற்று பின்தங்கிவிட்டதோ? என்ற ஐயம் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது.

தொழில், பொருளாதாரம், கல்வி, மருத்துவம் போன்ற பல வளர்ச்சிகளில் பிறமாநிலங்கள் எல்லாம் பின்பற்றவேண்டிய அளவில் ஆஹா! ஓஹோ! என்று வளர்ந்துவந்த தமிழ்நாடு, இப்போது அந்த நிலைமையில் இருந்து சற்று பின்தங்கிவிட்டதோ? என்ற ஐயம் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. 2016–ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப்பிறகு தமிழக அரசிலும், அ.தி.மு.க. அரசியலிலும் ஒரு வேகக்குறைவானநிலை ஏற்பட்டு வருகிறது. பொதுத்தேர்தலின்போதே ஜெயலலிதாவின் உடல்நிலை அவ்வளவு சரியாக இல்லை. பதவியேற்பு விழாவின்போது சற்று சோர்வாகவே காணப்பட்டார். தொடர்ந்து செப்டம்பர் 22–ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் வந்து சிகிச்சை அளித்தார்கள். லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே பலமுறை வந்து சிகிச்சை அளித்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலக்கட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் மருத்துவமனையிலேயே காலை முதல் இரவு வரை இருந்தனர். அந்தநேரத்தில் அரசு நிர்வாகம் முடங்கியது. டிசம்பர் 5–ந்தேதி அவர் காலமானபிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக பொறுப்பேற்றார்.

ஆனால், அதன்பிறகும் நிலைமை சீராகவில்லை. தொடர்ந்து அ.தி.மு.க.வில் குழப்பங்கள் ஏற்பட்டன. ஆரம்பத்தில் சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என்று பிளவு, சசிகலா சிறைக்கு சென்றபிறகு எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பி.எஸ். அணி என்ற பிரிவு, அந்த இரு அணிகளும் ஒன்றாக இணைந்தபிறகு எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அணி ஒரு பிரிவாகவும், டி.டி.வி.தினகரன் அணி ஒரு பிரிவாகவும் செயல்பட்டு, இரு அணிகளும் இரட்டை இலை சின்னமும், அ.தி.மு.க. கட்சியும் எங்களுக்குத்தான் சொந்தம் என்று தேர்தல் கமி‌ஷனின் கதவை தட்டின. இப்படி ஒரு ஸ்திரமற்றதன்மை இருந்தநேரத்தில், தமிழகத்தின் வளர்ச்சி பெருமளவில் பின்தங்கிவிட்டது. தேர்தல் கமி‌ஷனில் தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிசாமி அணிக்குத்தான் அது சொந்தம் என்று ஒரு தீர்ப்பு வந்துவிட்டது. ஆக, எடப்பாடி பழனிசாமி அணிக்கு இப்போது தெளிவானநிலை ஏற்பட்டுள்ளதால், இனி அவர்களின் பாதை தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கித்தான் செல்லவேண்டும். உடனடியாக பெருகிவரும் கடன்சுமையில் இருந்து விடுபட வருமானத்தை பெருக்கவேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

மார்ச் 16–ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையிலேயே தமிழகத்தின் கடன் ரூ.3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடியாக இருக்கும். வட்டி மட்டும் ரூ.25 ஆயிரத்து 982 கோடி கட்டவேண்டியதிருக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. தமிழக பட்ஜெட்டில் இந்த ஆண்டு அரசின் மொத்த வருவாய் ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 963 கோடியாக இருக்கும். அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக மட்டும் ரூ.66 ஆயிரத்து 909 கோடி போய்விடுகிறது. மானியம் மற்றும் உதவித்தொகைகளுக்காக ரூ.72 ஆயிரத்து 616 கோடி சென்றுவிடுகிறது. வட்டிக்கு ரூ.25 ஆயிரத்து 982 கோடி போய்விட்டால் எந்தவகையில் வேலைவாய்ப்பை பெருக்கும் திட்டங்களை உருவாக்குவது?, எந்தவகையில் தொழில்வளர்ச்சியை பெருக்குவது?, எந்தவகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்றுவது? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. அண்டை மாநிலங்களெல்லாம் தொழில்வளர்ச்சியில் முனைப்பான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சர்வதேச தொழில்முனைவோர் உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா, பிரதமர் மோடி மற்றும் 127 நாடுகளைச்சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதுபோன்ற மாநாட்டை தமிழ்நாட்டிலும் நடத்தவேண்டும். மேலும் அரசின் வருமானத்தை பெருக்கவும், செலவினங்களை குறைக்கவும், வளர்ச்சிப்பாதையில் செல்வதற்கான வழிகளைக்காணவும், உடனடியாக பொருளாதார நிபுணர்கள், தொழில் அதிபர்கள் அடங்கிய ஒரு உயர்மட்டக்குழுவை அரசு நியமித்து, ‘போகும் பாதை தூரம்’ என்றநிலையில் அந்த பயணம் வளர்ச்சியை நோக்கி இருக்கும்வகையில், என்னென்ன திட்டங்களை செயல்படுத்தலாம்? என்ற ஆலோசனைகளை பெறவேண்டும். இனி, அரசின் முழுகவனமும் மாநிலத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்வதற்கான சூழ்நிலை இப்போது இருக்கிறது.

Next Story