பெரியபாண்டியனுக்கு வீர வணக்கம்


பெரியபாண்டியனுக்கு வீர வணக்கம்
x
தினத்தந்தி 14 Dec 2017 10:00 PM GMT (Updated: 2017-12-14T17:53:58+05:30)

ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றாக எழுந்துநின்று பெரியபாண்டியனுக்கு வீர வணக்கம் செலுத்துகிறது.

ட்டுமொத்த தமிழ்நாடே கண்ணீரை சிந்தி இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மறைவில் ஆழ்ந்த துயருற்றுள்ளது. சென்னை மதுரவாயலில் சட்டம்–ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பெரியபாண்டியன். 2000–ம் ஆண்டு முதல் தமிழக போலீஸ் துறையில் சப்–இன்ஸ்பெக்டராகவும், இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றிய பெரியபாண்டியன், குற்றங்களை கண்டுபிடிப்பதில் கைதேர்ந்தவர். தமிழக காவல்துறையின் சொத்து என்று கருதப்பட்ட துடிப்பான அதிகாரி. 

சென்னை கொளத்தூரில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த மாதம் 16–ந் தேதி துளைபோட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளையை ராஜஸ்தானில் உள்ள நாதுராம் தலைமையிலான ஒரு கொள்ளை கும்பல்தான் செய்திருக்கிறது என்று போலீசார் நடத்திய புலன்விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களைப்பிடிக்க மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர், கொளத்தூர் போலீஸ் ஏட்டுகள் எஸ்.குருமூர்த்தி, எம்.அம்புரோஸ், மதுரவாயல் முதல்நிலை காவலர் எம்.சுதர்சன் ஆகியோர் கொண்ட ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை ராஜஸ்தானில் முகாமிட்டு நள்ளிரவில் கொள்ளைக்காரர்கள் தங்கியிருந்த இடத்தை சுற்றிவளைத்த நேரத்தில் அவர்கள் விரட்டியபோது கீழே விழுந்த முனிசேகரின் துப்பாக்கியை எடுத்து சரமாரியாக கொள்ளையன் சுட்டதில் பெரியபாண்டியன் உயிர் இழந்தார். மற்றவர்கள் காயமடைந்தனர். 

பெரியபாண்டியனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்–அமைச்சர் அறிவித்திருக்கிறார். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது என்றால், போலீசார் இன்னும் விழிப்புடன் செயல்படவேண்டும். இதுபோல, வெளிமாநிலத்துக்கு செல்லும்போது, அந்த மாநிலத்தை சேர்ந்த தமிழ்நாட்டில் பணிபுரியும் அதிகாரிகளை அனுப்பவேண்டும். 2005–ம் ஆண்டு கொடூரமான பவாரியா கொள்ளை கும்பல் தமிழ்நாட்டில் பல கொலை, கொள்ளைகளை அரங்கேற்றியது. 26 கொலை மற்றும் கொள்ளைச்சம்பவங்களை நடத்திய இந்த கும்பல் கடைசியில் சுதர்சன் எம்.எல்.ஏ.வை கொலை செய்தது. ஜெயலலிதா உடனடியாக அப்போது வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த ஜாங்கிட் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து அந்த படையும் வடமாநிலங்களில் முகாமிட்டு, பவாரியா கும்பலைச் சேர்ந்த 2 பேரை என்கவுண்ட்டர் செய்து, 13 பேரை கைது செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக காவல்துறையை ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையாக இருக்கிறது என்று பாராட்டியது. 

இதுபோன்ற கொள்ளைக்கும்பலை பிடிக்க, என்கவுண்ட்டர் செய்வதில் திறமைவாய்ந்த அதிகாரிகள் கொண்ட படையை அனுப்பவேண்டும். சரியான திட்டமிடல் இருந்திருக்கவேண்டும். உயர் அதிகாரிகள் சென்றிருந்தால் நல்ல ஒருங்கிணைப்பும், வழிகாட்டுதலும் இருந்திருக்கும். அந்தமாநில போலீசாரை துணைக்கு அழைத்திருக்கவேண்டும். இதுபோல, பெரிய கொள்ளையர்களை பிடிக்க செல்லும்போது புல்லட் புரூப் ஜாக்கெட் அணிந்து சென்றிருக்கலாம். வெறும் கைத்துப்பாக்கிகள் மட்டுமல்லாமல், ஏ.கே.47 போன்ற ஆயுதங்களையும் கொண்டு செல்லவேண்டும். ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றாக எழுந்துநின்று பெரியபாண்டியனுக்கு வீர வணக்கம் செலுத்துகிறது. எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவம் நடக்காத வகையில் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Next Story