வங்கி டெபாசிட்டுகளுக்கு பாதுகாப்பு


வங்கி  டெபாசிட்டுகளுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 19 Dec 2017 9:30 PM GMT (Updated: 2017-12-19T22:51:44+05:30)

மக்கள் எப்போதும் பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் வங்கி டெபாசிட்டுகள்தான் பாதுகாப்பானது, வங்கி டெபாசிட் என்றால் அரசாங்கத்தின் அங்கீகாரம் இருக்கிறது என்ற பெரிய நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

க்கள் எப்போதும் பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் வங்கி டெபாசிட்டுகள்தான் பாதுகாப்பானது, வங்கி டெபாசிட் என்றால் அரசாங்கத்தின் அங்கீகாரம் இருக்கிறது என்ற பெரிய நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அதிலும், நிரந்தர டெபாசிட் என்றால் வங்கியில் வட்டி குறைவாக கிடைக்கும் என்றாலும், போட்ட பணத்திற்கு ஆபத்து இல்லை என்ற உணர்வு மேலோங்கியிருப்பதால்தான், வங்கிகளின் நிரந்தர டெபாசிட்டுகளில் மட்டும் ரூ.1 கோடியே 6 லட்சம் கோடியை மக்கள் முதலீடு செய்துள்ளனர்.

இப்போது மக்கள் வங்கிகளில் நிரந்தர டெபாசிட்டுகளாக போட்டுவைத்திருக்கும் பணத்தை முழுமையாக எடுக்க முடியுமா? என்றபயம் வந்துவிட்டதால், நிறையபேர் நிரந்தர டெபாசிட்டுகளை திரும்ப வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம், மத்திய அரசாங்கம் கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் கடைசிநாளில் தாக்கல் செய்த நிதித்தீர்வு மற்றும் வைப்புநிதி மசோதாதான். இந்த மசோதாவில் ‘பெயில்இன்’ என்று ஒரு விதி இருக்கிறது. அதாவது, ஏதாவது ஒரு வங்கி நிதி நெருக்கடிநிலையில் தவிக்கும்நேரத்தில், வங்கியில் டெபாசிட் செய்தவர்களின் பணத்தை வாடிக்கையாளர் ஒப்புதல் இன்றி, மூலதனமாக வைத்து வங்கியை தொடர்ந்து நடத்தலாம் என்று இருக்கிறது. அதாவது, ஒருவர் எவ்வளவு பணம் முதலீடு செய்திருந்தாலும், அந்த வங்கிக்கு நிதி நெருக்கடி வரும்நேரத்தில் டெபாசிட் செய்த தொகையில் காப்பீடு செய்யப்பட்ட ரூ.1 லட்சம்தான் கிடைக்கும். அதற்குமேல் உள்ள தொகையை வங்கிகள் பங்கு மூலதனமாகவோ அல்லது பத்திரங்களாகவோ மாற்றிக்கொள்ளமுடியும். இதற்காக ‘‘தீர்வு வாரியம்’’ என்ற ஒரு புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட இருக்கிறது. இந்த சட்டம் இப்போது புதிதாக திட்டமிடப்பட்டது அல்ல. ஏற்கனவே 1961–ல் இதுபோல டெபாசிட் காப்பீட்டுச்சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலில் இருக்கிறது. அந்தச்சட்டத்தின்கீழ் அதிகபட்சம் ரூ.1 லட்சம் என்று இருக்கிறது. ஆனால், இந்தச்சட்டத்தில் குறைந்தபட்சம்தான் ரூ.1 லட்சம் என்றும் ஒருசாரார் கூறுகிறார்கள். மேலும் எல்லா வங்கிகளின் டெபாசிட்டுகளுக்கும் பாதிப்பு வராது. ஏதாவது ஒரு வங்கி திவாலாகும் சூழ்நிலை வரும்போதுதான் இப்படிப்பட்ட நிலைமை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

எந்த வங்கி திவாலாகும் என்று யாருக்கும் தெரியாது. ஏனெனில், வங்கிகளில் வராக்கடன்கள் மட்டும் ரூ.10 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. இந்த மசோதா இப்போது அமலுக்கு வந்துவிடவில்லை. பாராளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வில் உள்ளது. இந்தக்குழு தன் அறிக்கையை பட்ஜெட் கூட்டத்தொடரில் கடைசி நாள்வரை தாக்கல் செய்ய சபாநாயகர் அனுமதி வழங்கி உள்ளார். இதுகுறித்து பிரதமர் ஒரு கூட்டத்தில் பேசும்போது, ‘வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் நலன்களை அரசு பாதுகாக்கும்’ என்று கூறி இருக்கிறார். நலன்கள் பாதுகாக்கப்படும் என்று கூறியிருப்பது போதாது. வங்கியில் போட்டு வைத்திருக்கும் டெபாசிட்டுகளுக்கு ஆபத்து இல்லை என்ற உத்தரவாதத்தை பிரதமரும், மத்திய அரசாங்கமும் தரவேண்டும். கூட்டுக்குழுவிலுள்ள தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வங்கியில் நிரந்தர டெபாசிட் செய்தவர்களின் பணத்துக்கு நிச்சயம் பாதிப்பு வராது என்றவிதியை இந்த மசோதாவில் சேர்ப்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

Next Story