கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர்


கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர்
x
தினத்தந்தி 22 Dec 2017 9:30 PM GMT (Updated: 2017-12-22T23:07:28+05:30)

கடந்த மாதம் திடீரென வீசிய ‘ஒகி’ புயல் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களையும், விவசாயிகளையும் சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்த்தியது.

டந்த மாதம் திடீரென வீசிய ‘ஒகி’ புயல் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களையும், விவசாயிகளையும் சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்த்தியது. விவசாயிகளுக்கு பெருமளவில் பயிர்ச்சேதம் ஏற்பட்டது. ஆனால், கடலில் மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களுக்கு படகுசேதம், தொழில் நடத்த முடியாமல் போய் வருமானம் இழப்பு, இதற்கு எல்லாவற்றிற்கும் மேலாக தற்போதைய நிலவரப்படி 271 மீனவர்களை இன்னும் காணவில்லை என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கரையில் உள்ள மீனவர்கள் நாம் உயிர் பிழைத்துவிட்டோம் என்று கருதாமல், கடலுக்குள் மீன்பிடிக்க போய் இன்னமும் காணாமல் இருக்கும் மீனவர்களைத் தேடி பல விசைப்படகுகளில் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று மீனவர்களை தேடி வருகிறார்கள். வல்லவிளையைச் சேர்ந்த 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை லட்சத்தீவு பகுதியிலும் மற்றும் ஆழ்கடல் பகுதியிலிருந்தும் மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள். நேற்றுமுன்தினம் மட்டும் 47 மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். புயல் வந்தது தெரியாமல் இன்னமும் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருப்பவர்கள் நிச்சயமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னால் வந்து விடுவார்கள். இன்று 23–ந்தேதி வரவில்லையென்றால், அவர்கள் காணாமல் போனவர்கள் பட்டியலில்தான் கண்டிப்பாக சேர்க்கப்படவேண்டும் என்பது பொதுவான கருத்து.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிப்புகளை பார்க்க வந்த பிரதமர் நரேந்திரமோடியிடம், மீனவர்களும், தமிழக முதல்–அமைச்சரும் நிறையகோரிக்கைகளை கொடுத்துள்ளனர். மீனவர்களை பொறுத்தமட்டில், தங்களுக்கான நிவாரணத்தொகை உயர்த்தப்படவேண்டும், சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடத்தப்படவேண்டும், அவர்களுக்கு இதுபோன்ற நிலைமைகள் ஏற்படும்போது, கடலில் உடனடியாக போய்தேடுவதற்கு கப்பற்படை சார்பில் ஒரு ஹெலிகாப்டர் 24 மணி நேரமும் தயார்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். டிசம்பர் 31–ந்தேதிக்குள் கரை திரும்பாத மீனவர்களை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படவேண்டும் போன்ற பல கோரிக்கைகளை கூறியுள்ளனர்.

தமிழக அரசை பொறுத்தமட்டில், முதல்–அமைச்சர் பல கோரிக்கைகளை விடுத்துள்ளார். ‘ஒகி’ புயலினால் பாதிக்கப்பட்ட சேதங்களுக்கு ரூ.5 ஆயிரத்து 255 கோடியை நிவாரண உதவியாக வழங்கப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த கோரிக்கைகள் எல்லாம் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றால், மத்தியக்குழு வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, சேதங்களை மதிப்பிட்டு, மத்திய அரசாங்கத்திற்கு அறிக்கை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும். பிரதமர் வந்து சேதங்களை பார்த்துவிட்டு சென்றபின்னர் இப்போது மத்தியக்குழு அமைக்கப்பட்டுவிட்டது. உடனடியாக மத்தியக்குழு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து சேதங்களை பார்வையிட்டு, ‘ஒகி’ புயல் சேதத்திற்கு தாராள உதவிகள் வழங்கிட மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதுமட்டுமல்லாமல், கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக மத்திய அரசாங்கம் அறிவித்து, அனைத்து உதவிகளையும் வழங்கவேண்டும் என்ற கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கோரிக்கைகளையும் மத்திய அரசாங்கம் பரிசீலிக்கவேண்டும். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கைக்கேற்ப, ஆழ்கடலில் உள்ள மீனவர்களுக்கு அவ்வப்போது வானிலை பற்றிய அறிவிப்புகளை தமிழில் தெரியப்படுத்த பிரத்யேக செயற்கைகோள் நேரடி அலைவரிசை ஒன்றினை மத்திய அரசாங்கம் உடனடியாக அமைக்க வேண்டும்.

Next Story