பஸ் கட்டணம் உயருகிறது


பஸ் கட்டணம் உயருகிறது
x
தினத்தந்தி 25 Dec 2017 7:46 PM GMT (Updated: 25 Dec 2017 7:46 PM GMT)

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு 20–க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்துக்கழகங்கள் இருந்தன.

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு 20–க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்துக்கழகங்கள் இருந்தன. ஆனால், தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், மாநகர் போக்குவரத்துக்கழகம் (சென்னை) மற்றும் விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் 8 போக்குவரத்துக்கழகங்களாக இயங்குகின்றன. இந்த போக்குவரத்துக்கழகங்களில் 1,757 உபரி பஸ்கள் உள்பட 22 ஆயிரத்து 203 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 1 கோடியே 80 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 195 பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். பொதுவாக தனியார் பஸ் வைத்திருந்தால் நிச்சயமாக லாபகரமாக இயங்கும். ஒரு பஸ் வாங்கும் தனியார் பஸ் முதலாளி சில ஆண்டுகளிலேயே பல பஸ்களை வாங்கி, பெரிய பஸ் அதிபராக மாறி விடுகிறார். தனியார் பஸ்களின் பராமரிப்பும் நன்றாக இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் போக வேண்டிய இடங்களுக்கு போய்ச்சேர்ந்து விடுகிறது. அரசு போக்குவரத்து பஸ்களை விட, தனியார் பஸ்களில் கட்டணம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை, தனியார் பஸ்சிலேயே போய்விடலாம் என்ற உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் கடைசியாக பஸ் கட்டணம் 18–11–2011 அன்று உயர்த்தப்பட்டது. 6 ஆண்டுகளாக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஆனால் அரசு போக்குவரத்துக்கழகங்கள் தொடர்ந்து நஷ்டத்தில்தான் இயங்கி வருகின்றன. அரசு பஸ்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதால், அனைத்து பஸ் டிப்போக்களும், ரூ.10 ஆயிரத்து 546 கோடி ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நஷ்டம் ரூ.19 ஆயிரத்து 828 கோடியாக இருக்கும் நிலையில், தினமும் 9 கோடியே 42 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. அரசு பஸ்களில் பயணம் செய்வோர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே இருக்கிறது. மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர, மேலும் ஏராளமானவர்களுக்கு இலவச பஸ்பாஸ் மற்றும் சலுகைக்கட்டணம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், நிர்வாக செலவுகளை குறைப்பதற்காகவும் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்காகவும், 8 போக்குவரத்துக்கழகங்களின் எண்ணிக்கையை குறைப்பது பற்றி தமிழக அரசு தீவிரமாக யோசித்து வருகிறது. 4 போக்குவரத்துக்கழகங்களாக மாற்றலாமா? அல்லது ஒரே போக்குவரத்துக்கழகமாக மாற்றலாமா? என்பது குறித்து ஆராய 7 அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. நிச்சயமாக இது வரவேற்கத்தகுந்த முடிவாகும். இதுமட்டுமல்லாமல், கடனில் தத்தளிக்கும் போக்குவரத்துக்கழகங்களின் நிதி நிலையை சீராக்க விரைவில் பஸ் கட்டணத்தை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பஸ் கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியாதது என்றாலும், நகர்ப்புற பஸ்கள், குறைந்த தூரம் ஓடும் புறநகர் பஸ்களுக்கு குறைவான அளவிலும், தொலைதூர பஸ்களுக்கு பொதுமக்கள் தாங்கக்கூடிய அளவிலும், பஸ் கட்டணத்தை உயர்த்தலாம். பஸ் கட்டணத்தை உயர்த்துகிற நேரத்தில் நிர்வாகத்தை செம்மைப்படுத்தி பஸ் பராமரிப்பிலும், பயணிகளுக்கு சுகமான பயணமாக இருக்கும் வகையிலும் நல்ல வசதிகளுடன் கூடிய பஸ்களாக இருக்க செய்ய வேண்டும். அப்படி இருந்தால்தான் பஸ் கட்டண உயர்வு சுமையை பொதுமக்கள் பொருட்படுத்தமாட்டார்கள்.


Next Story