சுங்கச்சாவடிகளில் இனிமை


சுங்கச்சாவடிகளில் இனிமை
x
தினத்தந்தி 26 Dec 2017 9:30 PM GMT (Updated: 2017-12-26T17:55:41+05:30)

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கொண்டுவந்த ‘தங்க நாற்கர சாலை’ திட்டம் எந்தக்காலத்திலும் மறக்க முடியாத ஒரு அற்புதமான திட்டமாகும்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கொண்டுவந்த ‘தங்க நாற்கர சாலை’ திட்டம் எந்தக்காலத்திலும் மறக்க முடியாத ஒரு அற்புதமான திட்டமாகும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மிக உயர்தரத்தில் சாலைகள் அமைத்துள்ளது. இந்த நெடுஞ்சாலை என்றாலும் சரி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேலும் பல இடங்களில் போடப்பட்டுள்ள சாலைகள் என்றாலும் சரி, பொது மக்களுக்கு குறிப்பாக, வாகனங்களில் செல்பவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. இத்தகைய சாலைகள் அமைக்கும் பணிக்கு ஆகும் செலவை அந்த வழியாகச்செல்லும் வாகன ஓட்டிகளிடம் இருந்தே வசூலிக்க ஆங்காங்கு சுங்கச்சாவடிகள் அமைக்ககப்பட்டுள்ளன. இந்தச் சாவடிகளில் போகும் தூரத்திற்கேற்ப கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. பொதுமக்களை பொறுத்தமட்டில், சாலைகள் சீராக இருந்தால் அதற்குரிய கட்டணம் செலுத்த அவர்கள் தயங்குவதில்லை. ஆனால் பல இடங்களில் சுங்கச்சாவடிகளில் கிடைக்கும் அனுபவம் வேறாக இருக்கிறது. பணம் கட்டவரும் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிகளில் நீண்ட கியூவில் நிற்க வேண்டியதிருக்கிறது.

பணியாளர்கள், கட்டணம் செலுத்தவரும் வாகன ஓட்டிகளிடம் நடந்து கொள்ளும் முறை சில இடங்களில் திருப்திகரமாக இல்லாததால் சண்டை–சச்சரவுகள் ஏற்படுகின்றன. சுங்கச்சாவடிகளில் இனிமை நிலவுவதற்கு பதிலாக, கசப்பு உணர்வே மேலோங்கி இருக்கிறது. இதைத் தடுக்க சுங்கச்சாவடி நடத்துபவர்கள் கீழ்மட்ட ஊழியர்களுக்கு வாகன ஓட்டிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்ற பயிற்சியை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தலைவர் தீபக்குமார் தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், சுற்றுலா அமைச்சகம் மற்றும் அதன் நிர்வாகத்திலுள்ள ஓட்டல் நிர்வாக ஊழியர்களை வைத்து சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே சுங்கச்சாவடி ஊழியர்கள் அணிய வேண்டிய உடைப்பற்றி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சுங்கச்சாவடிகளில் உள்ள ஊழியர்கள் ‘நேவி ப்ளூ’ எனப்படும் ஊதா நிற முழுக்கை சட்டையும், முழுக்கால் சட்டையும் அணிய வேண்டும். தலையில் விளையாட்டு வீரர்கள் அணியும் தொப்பி அணிய வேண்டும். மேலும் சட்டைக்குமேல் ஒரு பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்து, அதில் அந்த சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர் பெயர் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதுமட்டுமல்லாமல், கட்டணம் விவரமும் பெரியளவில் போர்டுகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த உத்தரவுகளெல்லாம் போடப்பட்டிருக்கிறதே தவிர எதுவும் நடைமுறையில் இல்லை.

ராணுவ வீரர்களும் தங்களுக்கு சில சுங்கச்சாவடிகளில் இழைக்கப்படும் அவமரியாதையை புகார் செய்தனர். இதையொட்டி, இப்போது நெடுஞ்சாலை ஆணையம், ராணுவ வீரர்கள் சுங்கச்சாவடியை தாண்டிச்செல்லும்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் எழுந்துநின்று ‘சல்யூட்’ அடிக்க வேண்டும். ஏனெனில், நாட்டுக்காக அவர்கள் ஆற்றும் தியாகம் அளப்பரியது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளுக்கு இதுபோன்ற எவ்வளவோ உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும் அவையெல்லாம் நடைமுறையில் இருக்கிறதா? என்று யாரும் பார்ப்பதில்லை. சுங்கச்சாவடிகள் பொதுமக்கள் சேவையிலுள்ள அமைப்பாகும். அங்கு பொதுமக்களுக்கு இனிமையான அனுபவம் இருக்கவேண்டும். அந்தவகையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் இந்த உத்தரவுகளையெல்லாம் பின்பற்றுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

Next Story